ஓம் சிவயவசி !!
ஃ நினைத்தவுடனே முக்தியைத் தந்திடும் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது நாம் வழிபடும் அஷ்ட லிங்கங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஆங்கில தேதி எண்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அதிர்ஷ்டத்தை வாரி வாரி வழங்குகின்றன. தினசரி நாம் காலை தூங்கி எழுந்து உட்கார்ந்து கொண்டே அன்றைய தேதிக்குரிய லிங்கத்தின் நாமத்தை 3 முறை உச்சரித்து விட்டு பின்பு எழுவதால் அன்றைய தினம் அதிர்ஷ்ட அன்னையின் பரிபூரண அருள் கிட்டும்.இதைப்போல தினமும் அன்றைய தேதிக்குரிய லிங்கத்தின் நாமத்தை சிவபெருமானை மனதால் நினைத்து சொல்லிவர சிவன் & அஷ்டலிங்கத்தின் பரிபூரண அருளும், வாழ்வில் எதிர்பாராத அதிர்ஷ்டம் தினம் தினம் கிட்டும் அதிசயத்தைக் காணலாம்…
1. 1,4,10,13,19,22,28,31 – வருண லிங்கம்.
2. 2,11,20,29 – அக்னி லிங்கம்.
3. 3,12,21,30 – நிருதி லிங்கம்.
4. 5,14,23 – இந்திர லிங்கம்.
5. 6,15,24 – குபேர லிங்கம்.
6. 7,16,25 – யம லிங்கம்.
7. 8,17,26 – வாயு லிங்கம்.
8. 9,18,27 – ஈசான்ய லிங்கம்.
ஃ உதாரணம் :- நாளை செவ்வாய் கிழமை 29 – ஆம் தேதி காலை எழும் போது ” ஓம் அக்னி லிங்கமே போற்றி ” என 3 முறை சொல்ல வேண்டும்…
வாழ்க வளத்துடன் !!
நற்பவி ! நற்பவி !! நற்பவி !!!
March 2022
முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் இரண்டாவது திருத்தலமாக திகழ்வது, திருச்செந்தூர். இங்கு ஆலயத்தின் முன்பாக இருக்கும் கடலும், முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் நாழிக்கிணறு தீர்த்தமும் முக்கியமான தீர்த்தங்களாக இருக்கின்றன.
இவை தவிர திருச்செந்தூர் திருத்தலத்தைச் சுற்றிலும் 24 தீர்த்தங்கள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அவற்றையும், அதன் சிறப்பு களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.
முகாரம்ப தீர்த்தம்:- இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், கந்தக் கடவுளின் கருணையைப் பெறுவர்.
தெய்வானை தீர்த்தம்:- உணவு, உடை, இருப்பிடம், செல்வ வளம் பெருக நினைப்பவர்கள், இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
வள்ளி தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடினால், பிரணவ வடிவமாய் பிரகாசிக்கும் முருகனின் திருவடியை தியானிக்கும் ஞானம் வந்து சேரும்.
லட்சுமி தீர்த்தம்:- நிதிகளை தன்னுடன் வைத் திருக்கும் குபேரனால் அடையமுடியாத செல்வங் களைக்கூட, இந்த தீர்த்தத்தில் நீராடினால் பெறலாம்.
சித்தர் தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு தடையாக இருக்கும் உலக மாயைகளை அகற்றி, முக்தியை வழங்கும்.
அஷ்டதிக்கு பாலகர் தீர்த்தம்:- கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களின் நீராடு வதன் மூலம் கிடைக்கும் பலன்களை அடையலாம்.
காயத்ரி தீர்த்தம்:- 100 யாகங்களை செய்தவர்கள் அடைகின்ற பலனைப் பெற்றுத் தரும்.
சாவித்ரி தீர்த்தம்:- பிரம்மன் உள்ளிட்ட தேவர் களால் காண்பதற்கு அரிய பராசக்தியின் திருவடிகளை பூஜித்த பலன் கிடைக்கும்.
சரஸ்வதி தீர்த்தம்:- வேதங்களையும், ஆகமங் களையும், சாஸ்திரங்களையும் கற்றறிந்த ஞானத்தை வழங்கும்.
ஐராவத தீர்த்தம்:- சந்திர பதாகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்து சேரும்.
வயிரவ தீர்த்தம்:- பாவங்களைப் போக்கும் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.
துர்க்கை தீர்த்தம்:- சகல துன்பங்களும் நீங்கி நன்மை பெருகும்.
ஞான தீர்த்தம்:- இறைவனை நினைத்து வழி படுபவர்களுக்கும், அவனை நினைப்பவர்களுக்கும் நன்மையை வழங்கும்.
சத்திய தீர்த்தம்:- களவு, மது, குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றில் இருந்து விடுவித்து, நல்வழியில் நிற்க உதவி புரியும்.
தரும தீர்த்தம்:- தேவாமிர்தம் என்னும் தேவதீர்த்தத்தை அடைவீர்கள்.
முனிவர் தீர்த்தம்:- வாழ்வில் சுபீட்சத்தை வழங்கும் இறைவனின் அருளைப் பெறுவீர்கள்.
தேவர் தீர்த்தம்:- ஆறு விதமான தீய குணங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
பாவநாச தீர்த்தம்:- சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியங்களையும் அளிக்க வல்லது.
கந்தபுஷ்கரணி தீர்த்தம்:- சிவபெருமானின் திருவடியைக் கண்ட பலன் கிடைக்கும்.
கங்கா தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலை கடக்கும் வழியை ஏற்படுத்தும்.
சேது தீர்த்தம்:- சகல பாதகத்தில் இருந்தும் விலக்கி, நன்மையை வழங்கும்.
கந்தமாதன தீர்த்தம்:- பாவங்களைப் போக்கி பரிசுத்தமான வாழ்வைத் தரும்.
மாதுரு தீர்த்தம்:- அன்னையின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
தென்புலத்தார் தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.
நம்முடைய புராணங்கள் அடிப்படையில் நவிரங்களுள் முதன்மையானது, அரசன் போன்றது சூரியன். இது பூமிக்கு, பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளி, வெப்பம், ஆற்றலைத் தருகிறது. அன்றாட நடவடிக்கைகளுக்கு சூரியன் தேவை.
பெரும்பாலும் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளதா இல்லையா என்று பலருக்கும் உறுதியாகத் தெரியாது. பலவிதமான அறிகுறிகள் அடிப்படையில் இதை உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக தொடர்ந்து பலகீனமாக உள்ளவர்கள், சோம்பலாக உள்ளவர்கள், உடல் நலம் சரியாக இல்லாமல் இருப்பவர்கள், எலும்பு – மூட்டு பிரச்னை உள்ளவர்கள், கை – கால்கள் உணர்வின்மை பிரச்னை ஏற்படுபவர்கள், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள், இதய நோயாளிகள், சுய மரியாதை இன்றி மோசமாக வாழ்பவர்களுக்கு சூரியன் நீசமாக, பலம் இழந்து இருப்பதாக கருதலாம்.
சூரியன் நீசமாக இருந்தால் தந்தையுடன் உறவு நிலை மோசமாக இருக்கும். தந்தைக்கு பிரச்னையை ஏற்படுத்துவார்கள். மனநல பிரச்னையால் அவதியுறுவார்கள். மகிழ்ச்சி இன்றி இருப்பார்கள். உடல் ரீதியாவும் மன ரீதியாகவும் பிரச்னைகளை சந்திப்பார்கள். அதிகம் கோபம், ஆக்ரோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சூரியனை சாந்தப்படுத்தலாம். சூரிய தோஷம் நீங்க ராமரை வழிபடலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும் பலனைத் தரும்.
சூரியனை வழிபட பீஜ மந்திரம்:
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||
இதை 40 நாட்களுக்குள் 7000ம் தடவை சொல்லி வந்தால் நற்பலன்கள் கிடைக்கும். அதிக பலன்கள் கிடைக்க 40 நாட்களுக்குள் 28 ஆயிரம் முறை சொல்ல வேண்டும்.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அன்னை கொலு விருந்து 10-வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்தாள்-. அதனால் எழுந்த கோபத்தினால் அன்னை உக்கிரமாக இருந்தாள். பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர்.
அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சி அளித்தாள். நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.
பைரவப் பெருமானை விரதம் இருந்து காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.
பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும்.
மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும்.
இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம் பொருளான பைரவப் பெருமானை அடையும். சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.
பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.
பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
பிடித்த மாலைகள்
பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
“ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் “ஐப்பசி” மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.
இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.
சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடலாரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.
* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.
• வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, கணிடம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவிபாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன். புதன் நமது ஜாதகத்தில் தோஷமாக இருந்தால் கல்வித்தடை ஏற்படும். புதன் கிழமை விரதமிருந்து ஏதேனும் கோவிலில் தீபமேற்றி வழிபடுவது, படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவது போன்றவற்றால் புதன் தோஷம் நீங்கும். கல்வியறிவு மேம்படும்.
• திருமணம், குழந்தைப் பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.
• கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.
• நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் இவரே. சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்புக்குரியதாக ‘பங்குனி மாதம்’ உள்ளது. இந்த மாதத்தை ‘மங்கலம் நிறைந்த மாதம்’ என்றே வர்ணிப்பார்கள். ஏனெனில் இந்த மாதத்தில்தான் தெய்வங்களின் திருமணங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த பங்குனி மாதத்தில் நாம் முறையாக தெய்வங்களை வழிபட்டு வந்தால், நம் வாழ்வில் வரும் பல தடைகளும் விலகும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் ஏகாதசி திதிகள் சிறப்பு வாய்ந்தவை. மாதத்திற்கு இரண்டு ஏகாதசி என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடங்கள் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. இவை அனைத்திற்கும் தனித் தனியாக பெயர்கள் இருக்கின்றன. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை ‘விஜயா ஏகாதசி’ என்பார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பு பற்றி இ்ங்கே பார்க்கலாம்.
எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை எல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி மாதம் தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி அன்று, பெருமாளை தரிசிப்பதும், அவருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வதும் மகத்தான பலனை பெற்றுத்தரும்.
‘ராவணனால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கும் சீதையை, இலங்கைக்குச் சென்று எப்படி மீட்பது?’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார், ராமபிரான். அப்போது அந்த வழியாக வந்த முனிவர் ஒருவர், ராமனிடம் ‘விஜயா ஏகாதசி’ விரதத்தின் மகிமையை எடுத்துக்கூறி, அந்த விரதத்தை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்திச் சென்றார். அதன்படியே ராமபிரான், விஜயா ஏகாதசி அன்று விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டார். அதன்பலனாக, இலங்கை சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வந்ததாக ஏகாதசி விரத மகாத்மியம் எடுத்துரைக்கிறது.
விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலும் அதிகமாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பதுஐதீகம்.
மறு நாள் துவாதசி அன்று, யாருக்கேனும் உணவு வழங்கினால், மகா புண்ணியம் என்றும், பூஜை செய்த கலசம் மற்றும் தானியங்களை ஆச்சார்யருக்கு வழங்கி நமஸ்கரித்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல், பங்குனி மாதத்தில், குரு வாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
நம்முடைய குலத்தைக் காப்பது குலதெய்வ வழிபாடு. மாறிவிட்ட வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை காரணமாக குல தெய்வத்தை பலரும் மறந்துவிட்டனர். பல தலைமுறைக்கு முன்பு சொந்த ஊரைவிட்டு வெளியேறி வேறு ஒரு ஊரில் குடியேறியதால் குலதெய்வத்தை தொலைத்தவர்கள் பலர். தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமல், குல தெய்வம் எது என்று அறிய பலரும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.
எவ்வளவு பாடுபட்டும் குல தெய்வம் பற்றிய விவரம் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகின்றீர்களா… கவலைப்படாதீங்க. உங்கள் குல தெய்வத்தை கண்டறிய உதவும் ஸ்லோகம் ஒன்று உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ அறிய வரும்.
ஸ்லோகம்:
ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா||
இதை தினமும் தூங்கச் சொல்வதற்கு முன்பு சொல்ல வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு சொம்பில் தண்ணீர் பிடித்து வைத்து, கிழக்கு பார்த்தபடி அமர்ந்து ஊதுபற்றி ஏற்றி நம்முடைய தேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மந்திரத்தைச் சொல்லி முடித்ததும் சொம்பில் உள்ள தண்ணீரைக் குடிக்க வேண்டும். இந்த ஸ்லோகத்தை சனிக்கிழமை காலை அல்லது மாலையில் சொல்ல ஆரம்பிக்கலாம். தினமும் விடாமல் சொல்லி வர வேண்டும். 45 முதல் 90 நாட்களுக்குள் குல தெய்வம் பற்றிய விவரம் தெரிய வரும் என்பது நம்பிக்கை.
நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பதால் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.
*வீட்டினுள் மூதேவி வர என்ன காரணம்*
வீட்டினுள் மூதேவி வர என்ன காரணம் என்ன:
மூதேவி : நம் வீட்டில் என்ன தான் பணம் சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சம்பாதித்த பணத்தில் கடன்கள் கொடுத்து வருவதுமாக இருக்கும். கடவுளே இந்த மாத இது செலவு இல்லை,
சேமிப்புதான் என்று நினைக்கும் நேரத்தில் தான் ஏதாவது வீண் செலவுகள் வரும். இல்லையெனில் குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே சச்சரவுகள் அதிகரிக்கும்.
காலையில் வீட்டினை சுத்தம் செய்யாமல் இருப்பது.காலையில் சீக்கிரமாகவே வீட்டை கூட்டி விடணும்.மாலையில் சூரியன் மறைந்த பிறகு வீடு மற்றும் வாசலை கூட்டுவது.
அதன்பிறகு கூட்டினால் வீட்டுக்கு வரும் தேவி மீது கூட்டி தள்ளுவது போல் ஆகும்.அடுப்பினை துடைக்காமல் புழங்குவது.
எப்பொழுதும் காலையில் எழுந்த உடனே அடுப்பை சமைப்பதற்கு முன் கண்டிப்பாக துடைத்துவிட்டு தான் சமைக்க வேண்டும்.
வீட்டினுள் உப்பு, சீனி, அரிசி, பால் முழுமையாகத் தீர்ந்த பிறகுதான் மீண்டும் வாங்குவீர்கள்.
நான் மேலே சொன்ன பொருட்கள் தீர்வதற்கு முன்பே வாங்கி வையுங்கள். அது செல்வத்தின் பொருட்கள். வீட்டில் பணம் இருக்கோ இல்லையோ, ஆனால் அந்த பொருட்களை குறையாமல் இருந்தாலே போதும்.
வீட்டினுள் எச்சில் பாத்திரங்களை கழுவாமல் அதிக நேரம் அப்படியே வைத்திருப்பது.
எச்சில் பாத்திரங்கள் அனைத்துமே வீட்டு சுத்தமில்லாத போல் காட்டும். நம் வீட்டிற்கு ஒரு விருந்தாளி பார்த்தாலே நமக்கு ஒரு மாதிரி ஆகும்.
வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் நாம் தானே சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
சில பெண்கள் வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளியில் தலை குளிக்காமல் இருப்பது. மீதி நாட்களில் தலை குளிப்பது.
சில பெண்கள் வாரத்தில் ஏழு நாளும் தலைக்கு குளிப்பார்கள் அவர்களை பற்றி கவலை இல்லை. ஆனால் வாரத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்கிறேன் என்ற பெயரில் செவ்வாய் வெள்ளியில் குளிக்க மறந்துவிடுவார்கள்.
நேற்று தானே தலை குளித்தோம் இன்று ஏன் மீண்டும் குளிக்கவேண்டும் என்ற எண்ணதால் குளிக்க மாட்டார்கள். கண்டிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளியில் தலை குளிக்க வேண்டும். தெய்வத்தையும் வழிபட வேண்டும்.
சில ஆண்கள் புதன் மற்றும் வெள்ளியில் தலை குளிக்காமல் இருப்பது.
ஆண்கள் வாரத்தில் ஏழு நாளும் தலை குளித்தாலும் சரிதான். ஆனால் குளிக்க முடியாதவர்கள் புதன் மற்றும் வெள்ளியில் கண்டிப்பாக தலை குளிக்க வேண்டும்.
வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றுவது.
வீட்டினுள் எப்பொழுதும் பெண்கள் தான் விளக்கேற்ற வேண்டும் ஆண்கள் விளக்கேற்றக்கூடாது.
வீட்டினுள் சில வார்த்தைகள் பேசக்கூடாது. அதாவது கிடைக்காது, வராது, இல்லை, அப்படி என்கிற வார்த்தைகள் அதிகம் உபயோகப்படுத்துவது.
வீட்டில் பேச்சு வார்த்தைகளில் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகம் உபயோகப்படுத்தாதீர்கள். வீட்டில் எப்போதும் இல்லை என்று சொன்னால் இல்லாமலே போய்விடும். கிடைக்கவே கிடைக்காது என்றாலும் கிடைக்காது.
எல்லாம் இருக்கு கிடைக்கும் என்று பேசி பழகி கொள்ளுங்கள்.இவைகளைத் தொடர்ந்து வீட்டினுள் செய்து பாருங்கள் கண்டிப்பாக லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டிற்குள் இருக்கும்.