Home எளிய பரிகாரம் இரண்டாவது திருமணத்திலும் நிம்மதி இல்லையா? செய்ய வேண்டிய பரிகாரம்…

இரண்டாவது திருமணத்திலும் நிம்மதி இல்லையா? செய்ய வேண்டிய பரிகாரம்…

by admin

ஒரு திருமணம் கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக்காக பலர் ஏங்கிக் கொண்டு இருக்கும் காலத்தில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்து விடுகிறது. முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும் வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.

சிறு சிறு கருத்து வேறுபாட்டிற்கு பிரிய நினைத்தால் எத்தனை திருமணம் செய்தாலும் மண வாழ்க்கை கேள்விக் குறியாகவே இருக்கும். பலர் இது போன்ற காரணத்தினால் நல்ல வாழ்க்கைத் துணையை இழந்து பிறகு வருந்துகிறார்கள். அதேபோல் வாழ்க்கைத் துணையின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னை சரி செய்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும். அதீத எதிர்பார்ப்பு மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத பல திருமணங்களே இன்று நீதிமன்ற வாசலிலும், இணைய முடியாமல் வீட்டிலும் மனக்காயங்களுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். மனமொத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் மனமொத்துப் பிரிகிறார்கள் என்பது வேதனையான ஒன்றல்லவா?

ஒரு பிரச்சினை என்று வரும் போது ஒருவர் பக்கம் மட்டுமே நியாயம் இருக்கும். அந்த பிரச்சினையில் கணவன், மனைவி தவிர்த்து 3-ம் நபரின் தலையீடு பிரச்சினையை பெரிதுபடுத்தும். குறிப்பாக தம்பதியினரின் பெற்றோர்கள், நண்பர்கள். இதில் எத்தனையோ நண்பர், நண்பிகளே வில்லி, வில்லனாக மாறுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. பிரிந்த பிறகு தவறை உணர்வதை விட வாழும் போதே விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிமையாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் மரபு.

பரிகாரம்: இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோ‌ஷமாக இருந்தாலும் அந்தத் தோ‌ஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோ‌ஷம்தான். அந்த சந்தோ‌ஷம் மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி வலு குறைந்து 11-ம் அதிபதி பலம் பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்த வேண்டும்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.

ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரன் இல்லை. எப்படி யாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்து விடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக் கூடாது.

You may also like

Translate »