திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ளது, காருகுறிச்சி என்ற ஊர். கன்னடியன் கால்வாயின் வடகரையில் அமைந்திருக்கும் வளம்மிக்க ஊர் இது.
இங்கு பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
களத்திர தோஷம் இருப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இன்றி தவிப்பவர்கள், தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், இறைவன், இறைவியின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியரும், விரைவிலேயே ஒன்றாக இணைந்துவிடுவர்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, திரயோதசி திதிகளில் ‘துளசி விவாக உற்சவம்’ நடத்தப்படுகிறது. திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர், மனம் ஒத்து இணைந்து வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்றாக கூடி வாழவும் பரிகார விழாவாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுறிச்சி திருத்தலம் உள்ளது.