நாம் எல்லோரும் சிவனை நினைத்து உருகி அவனடியை அடைவதைப் பற்றி எப்போதும் சிந்திக்கிறோம். சைவ நாற்பாதங்கள் எனப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகியதை அடைய எல்லா மார்க்கத்தின் தடத்திலும் ஈடுபடுகிறோம். நெற்றியில் விபூதி பட்டை, கழுத்தில் ருத்திராட்சம், வாயாரப் பஞ்சாட்சரம் ஓதுவது, தேவாரம் பாடுவது, கோயிலில் உழவாரப்பணி செய்வது, பிரதோஷம்/சிவராத்திரி அன்று ஒரு பொழுது இருப்பது என்று நிறைய வழிகளை நாடுகிறோம். கிடைத்த தருணங்களில் எல்லாம் சிவநெறியை அமர்க்களமாய்ப் போற்றுகிறோம். நல்ல விஷயம்தான்!
ஆனால் சரியை நிலையிலேயே சோதனையாகப் பல முட்டுக்கட்டைகள் வந்திடும். வடமொழி ரூபத்தில், பூகோள ரீதியில், அவதார மகான்கள் வடிவில், சித்த நூல் பாடல்கள் மறைப்பு உருவில் எனப் பல வழிகளில் நாமே அறியாவண்ணம் அவனை நிந்திக்கச் சமயம் வாய்த்திடும். நம்மைப் பொறுத்த வரைக்கும் ‘நான் தூய சிவநெறியில் இருப்பவனாக்கும், ஈசனைத் தவிர யாருக்கும் அஞ்சுவதில்லை’ போன்ற அட்டகாச வசனங்கள் பேசுவோம். ஆனால் சரியை முதல் படிக்கட்டிலேயே பரமபதம் சறுக்கிவிட மீண்டும் அடிமட்டத்தில் வந்து விழுந்து கிடக்க நேரிடுகிறது. வேஷமும் துவேஷமும் கைகோர்த்து வரும்!
முதல் நிலையிலேயே நம் பவிசு இப்படி இருக்க, பிறகெப்படி கிரியை முடித்து யோகத்திற்குப் போய் ஞானத்தை எட்டுவது? மேலே சொன்னப்படி அவனை வெறுத்து நிந்தித்த அத்துணை செயல்களையும் திருத்திக் கொள்ள வேண்டும். நம் தவறை உணரத்தவும், புத்தியை மாற்றவும், பல பிறவிகள் தந்து நம் ஆன்மாவைக் கடைத்தேற்றவும் சிவன் என்கிற வண்ணான் உழைக்க வேண்டும்.
அவன் அருகில் செல்ல முடியாதபடி நம் ஊழ்வினைகள் வந்து கும்மாங்குத்து கொட்டிவிட்டுப் போகும். அவனிடமிருந்து வெளிப்பட்ட ஆன்மாக்கள் மீண்டும் அப்பழுக்கற்ற நிலையில் அவனிடமே போய்ச் சேர வேண்டும். ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலே சொன்ன தவறுகளைச் செய்துகொண்டே இருந்தால் அவனைச் சென்றடையும் நாள் எந்நாளோ? பிறவாமையைப் பற்றி நினைத்துப் புலம்பிக்கொண்டே, ஊழ்வினைகளைத் தாக்குப் பிடிக்காமல் அவனை மனதாரத் திட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
தேவாரம் பாடிய சமயக்குரவர்கள் தங்களுக்குக் கிடைத்த மனிதப் பிறவியை எந்த அளவுக்குச் சிறப்பாய் வாழ்ந்து அவனை அடைய முடியுமோ, அதை சரியாக நிறைவேற்றினார்கள். நாற்பாதங்கள் வாயிலாக தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்கிற அர்ப்பணிப்பு மூலம் சாலோக சாமீப சாரூப சாயுச்சிய சமாதி நிலைகள்வரை அடைந்தனர்.
சிவலோகத்தில் வாழ்வது, சிவன் அருகில் அவனைப் பார்த்துக்கொண்டு இருப்பது, சிவனின் வடிவை தம்முள் உணர்வது, சிவனாகவே மாறுவது என நான்கு நிலைகளை எய்தினர். அந்த நிலைகளைப் பற்றி அகத்தியர், திருமூலர், போகர், ஆகியோர் நிறையவே விளக்கிவிட்டனர்.
ஆகவே, அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நம் காழ்ப்பை, வெறுப்பை, நிந்தனையை, முற்போக்கை விட்டொழியாதவரை சித்த புருஷர்களை நினைத்து ஏக்கத்தில் பெருமூச்சு விடவேண்டியதுதான்! அதுவரை ‘தான் அவனாகும் நிலையை’ ஒருபோதும் அடைய முடியாது!