Home ஆன்மீக செய்திகள் “அகத்தியர் சௌமிய சாகரம்”

“அகத்தியர் சௌமிய சாகரம்”

by admin
agathiyar

“அகத்தியர் சௌமிய சாகரம்”

Vadha saumyam 1200 {பாகம் -1}

{பல நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த அகத்தியர் சௌமிய சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை சித்தர்களின் குரல் வாயிலாக உலகம் அறிந்து பயன் பெற அகத்தியர் பெருமானின் பாதம் பணிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… நன்றி}

(1) காப்பு-1

சோதி எனும் மனோன்மணியைத் தியானஞ் செய்து

சுகமான சௌமிய சாகரத்தைப் பாட

ஆதிஎனுங் கணபதியும் வல்லபையுங்காப்பு

அரசான பிரம்மனொடு சரஸ்வதியுங்காப்பு

நீதியெனும் மாலுடனே லட்சுமியுங் காப்பு

நின்றிலங்கும் ருத்திரனும் உருத்திரியுங்காப்பு

ஓதியதோர் மயேஸ்பரனும் மயேஸ்பரியுங்காப்பு

உறுதியுள்ள சதாசிவனும் மனோன்மணியுங் காப்பே

சௌமியம் என்றால் ரம்மியமான, குளுமையானது, மனதுக்குகந்தது என்று பொருள். ஆயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்ட சௌமிய சாகரம் என்ற நூலைத் தொடங்கும்முன் அகத்தியர் காப்புச் செய்யுளில் பல தெய்வங்களை வணங்குகிறார். அவர் வணங்கும் தெய்வங்கள் நம் உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்களின் அதிதேவதைகள். மூலாதரத்தின் அதிபதி கணபதியும் அவரது சக்தியான வல்லபையும். அதே போல் இப்பாடலில் உள்ள பிற தெய்வங்களும் முறையே சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம் விசுத்தி ஆகிய சக்கரங்களின் அதிதேவதைகள் ஆவர்.

(2) காப்பு-2

மணியான ரவிமதியுஞ் சுழினைக் காப்பு

மகத்தான வேதியர் தன் பாதங்காப்பு

கணியான நால்வேத அந்தங் காப்பு

கருணைவளர் சாஸ்திரமோர் ஆறுங்காப்பு

அணியான ஆதார சொரூபங் காப்பு

அருளான அமிர்தரச போதங் காப்பு

தனியான பராபரமாஞ் சோதி காப்பு

சதாநந்தப் பூரணமாந் தாய்காப்பாமே

சக்கரங்களின் அதிபதிகளை வேண்டிய பிறகு அகத்தியர் அடுத்து சக்கரங்களின் மூலம் செயல்படும் சக்திகளைக் காப்பாக வேண்டுகிறார். சூரியன் சந்திரன் சுழினை என்னும் மூன்று நாடிகள் ஆன்மீகத்தில் முக்கியமானவை. இவற்றை அடுத்து அவர் வேதியரை வேண்டுகிறார். பொதுவாக இந்த சொல் பிராமணரைக் குறிப்பிட்டாலும் அதன் உட்பொருள் வேதம் அல்லது அறியப்பட வேண்டிய அறிவின் உட்பொருளான இறைவனை, வேதத்தைத் தனது அங்கமாக உள்ளவனைக் குறிக்கும். கணி என்பது

கணத்தின் தலைவன் என்று பொருட்படும். அறிவு தரும் விஷயங்கள் என்னும் கணத்தில், கூட்டத்தில் தலையாய இடத்தை வகிப்பது வேதாந்தம். இதனை அடுத்து அகத்தியர் ஆதார சொரூபத்தை காப்பாக இருக்க வேண்டுகிறார். ஆதாரம் என்பது சக்கரங்களைக் குறிக்கும். அதில் ஜீவன் உணர்வுநிலையில் இருக்கும். இந்த உணர்வு நிலையே, அறிவு நிலையே ஜீவனின் சொரூபமாகும். அதனால் அகத்தியர் உணர்வு நிலைகளை இங்கு விளிக்கிறார் என்று கொள்ளலாம். ஆதார சொரூபம் என்பது அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் இறைவனை, பரவுணர்வைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அமிர்த ரச போதம் என்பது லலாட சக்கரத்திலிருந்து ஊறும் அமிர்தபானம் மற்றும் அது அளிக்கும் உச்ச ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும்.

இறைவனின் ஒளி உருவம் பராபரம். அதை அடையச் செய்வது சக்தி அல்லது பராபரை. அவளே பரமபோதம். அதனால் அகத்தியர் சக்தித் தாயை சதானந்த பூரணத்தைக் கடைசியாக, காப்பாக வணங்குகிறார்.

(3) காப்பு-3

தாயான சிவயோக மூலங்காப்பு

சகலகலைக் கியானமணிபீடங்காப்பு

மாயாத வாசிமலர் அந்தங் காப்பு

மணி மந்திர நாதவொலி கீதங் காப்பு

சாயாத அடிமுடியும் நடுவுங் காப்பு

சௌமியமாம் தேவாதி ரிஷிகள் காப்பு

தேயாத வாசியடா மவுனங் காப்பு

சிவசிவா அகாரமுடன் உகாரங் காப்பே

தாயான சக்தியே சிவயோகம் எனப்படும் சிவனுடன் சேர்த்தலை நிகழ்த்துகிறாள். மலர் அந்தம் என்பது பூக்களாக குறிக்கப்படும் சக்கரங்களின் முடிவு, பரவெளியைக் குறிக்கும். அகத்தியர் நாதம் ஒலி கீதம் என்று குறிப்பிடுகிறார். நாதம் என்பது ஒலி தோன்றுவதற்கு முற்பட்ட நிலை. இதிலிருந்து ஒலிதோன்றி அதுவே பாடலாக கீதமாக மாறுகிறது. சாயாத அடி முடி நடு என்பது சகஸ்ராரம் அல்லது துவாதசாந்தம், மூலாதாரம் மற்றும் ஆக்னையைக் குறிக்கும். வாசியின் மவுனம் என்பது சித்தர்கள் சொல் கடந்த வெளி என்று குறிப்பிடும் சத்தத்தின் முதல் நிலையாகிய பரா நிலையைக் குறிக்கும். அகாரம் உகாரம் என்பது சிவ மற்றும் சிவாவை அதாவது சிவனையும் சக்தியையும் குறிக்கின்றன. குறில் சிவனையும் நெடில் சக்தியையும் குறிக்கிறது அதாவது அ என்பது சிவன் ஆ என்பது சக்தி.

(4) காப்பு-4 பீஜசாரம்

உகாரமென்ற நாதமடா சத்திகாப்பு

உறுதியுள்ள அகாரமடா சிவமே காப்பு

சிகாரமென்ற சோதியடா வாலை காப்பு

சிவசிவா மகாரமென்ற மவுனங் காப்பு

வகாரமென்ற பஞ்ச கண தீக்ஷை காப்பு

மகத்தான சடாதார ஆதிகாப்பு

நகாரமுடன் அகாரவரை ஓங்காரத்தில்

நாடிநின்ற சூட்சமடா ஆதி காப்பே

இப்பாடல் சித்தமார்கத்தில் முக்கியமான பீஜாட்சரங்களை விளக்குகிறது.

அகாரம்- சிவன், உகாரம்- சக்தி, சிகாரம்- வாலை அல்லது குண்டலினி, மகாரம்- மௌனம் அல்லது மாயை தோற்றுவித்த வெளிப்பாடு நிலையின் முடிவு, வகாரம்- பஞ்ச கண தீக்ஷை அல்லது ஐம்பூதங்களின் வெற்றி.

ஆறு ஆதாரங்களின் ஆதி என்பது ஆறு சக்கரங்களின் அதிபதியான இறைவன் அல்லது விழிப்புணர்வு. நகாரம் முதல் அகாரம் வரை ஓங்காரத்தில் என்பது நமசிவாய என்ற பஞ்சாட்சரம், அ உ ம என்னும் மூன்று நிலையான ஓம்காரம் முதல் அதன் ஒருமை நிலை, அதாவது எல்லா வெளிப்பாடுகளையும் உட்கொண்ட ஓம்காரம். நாடி நின்ற சூட்சம் என்பது பரவுணர்வை நாடி நின்ற ஆத்மா அல்லது ஆத்மாவை நாடி நின்ற இறைவன் அல்லது நாடியில் இருக்கும் இறைவன் என்ற சூட்சுமம் என்றும் பொருள்படும்.

(5) காப்பு-5

ஆதிகுரு வேதியர்தன் பாதம் போற்றி

அருள் பெருகும் கேசரியைப் பூசை பண்ணி

சோதிஎனுஞ் சௌமிய சாகரத்தைப் பாட

சுயஞ் சோதி ஆதியந்தஞ் சுழினை காப்பு

நீதியுடன் ஆதார மூலந்தன்னில்

நின்றிலங்கும் பிரணவமாம் அயனார் காப்பு

ஓதியதோர் கலைமகளும் பூமகளுங்காப்பு

உண்மையுள்ள செயமகளுங் காப்புத்தானே

இப்பாடலுடன் அகத்தியர் தனது காப்புச் செய்யுள்களை முடிக்கிறார். முதலில் ஆதிகுரு வேதியர் என்று கூறுவதன்மூலம் அகத்தியர் முன் பாடலில் தான் கூறிய வேதியன் என்பது சிவனே என்று காட்டுகிறார். அருள் பெருகும் கேசரி என்பது கேசரி முத்திரையினால் லலாடத்திலிருந்து அமிர்தம் ஊறுவதைக் குறிக்கிறது. கேசரி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. கேசரி என்பதை க +சரி என்று பிரித்தால் அது வானத்தில் சஞ்சரிப்பவன் என்று பொருள்படும். இவ்வாறு அகத்தியர் பரவெளியில் இருக்கும் பரவுணர்வை இதன் மூலம் குறிப்பிடுகிறார். சுழினை என்பது ஆக்ஞை சக்கரம். சில புத்தகங்கள் அதை சுழுமுனை நாடி என்று குறிப்பிடுவது சரியல்ல. இங்குதான் வெளிப்பாடுடைய உலகம் தோன்றி மறைகிறது. ஆக்ஞைக்கு மேலே இருக்கும் தத்துவங்கள் சுத்த தத்துவங்கள். அதற்குக் கீழே இருப்பவை அசுத்த மாயையால் ஆனவை. ஆக்ஞையில் ஓம்காரம் வெளிப்பாற்ற ஒருமை நிலையில் இருக்கிறது. மூலாதாரத்தில் பிரம்மா ஓம்காரமாக இருக்கிறார் என்கிறார் அகத்தியர். இங்கு பிரணவம் முழு வெளிப்பாடுடன் இருக்கிறது. இதனை அடுத்து அகத்தியர் சக்திகளான சரஸ்வதி, லட்சுமி, வெற்றி மகள் ஆகியோரை இந்த முயற்சி தடையறச் செல்வதற்கு வணங்குகிறார்.

(6) அகத்தியர் பெருமான் இந்த நூலை எழுதிய விதம்

தானான சதுரகிரி மூலங் கண்டு

தவமான சிவயோகத் திருக்கும்போது

கோனான வேதியரை அடுத்து நானும்

குறியான பூரணத்துக்கு உறுதி கேட்டேன்

ஊனான சத்தி சிவம் என்று பின்னும்

உண்மையுள்ள அகஸ்தியனே வாவாவென்றார்

தேனான வடமொழியைக் கையில் ஈந்து

திருவான பூரணத்தின் திறஞ் சொன்னாரே

அகத்தியர் தான் இந்த நூலை எவ்வாறு தொடங்கினேன் என்று இப்பாடலில் கூறுகிறார். அவர் சதுரகிரி எனப்படும் மூலாதாரத்தில் ஆத்ம நிலையில் சிவத்துடன் சேர்ந்த யோக நிலையில் இருக்கும்போது சிவ சக்தியை நெருங்கி பூரணத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டியதாகவும் அப்போது அவர்கள் தன்னை அருகில் வா என்று அழைத்து வடமொழியில் இருந்த ஒரு நூலைக் கையில் கொடுத்து பூரணத்தைப் பற்றிக் கூறினார் என்கிறார். சதுரகிரி என்பது நாற்கோணத்தைக் கொண்ட மூலாதாரத்தைக் குறிக்கும். நாற்கோணம் நான்கு திசைகளைக் குறிக்கும். மூலாதாரத்தில் ஆத்மா துரியாதீத நிலையில் சிவனுடன் சேர்ந்து இருக்கும். இந்த நிலையை அகத்தியர் குறிப்பிடுகிறார். பூரணம் என்பது பொதுவாக சக்தியைக் குறிக்கும். சிவனைக் காரணம் என்றும் சக்தியைப் பூரணம் என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். பூரணம் என்பது ஆத்மா சிவநிலையை அடைவதற்கு முந்தைய நிலையையும் குறிக்கலாம். ஊனான சத்தி சிவம் என்று பின்னும் என்ற தொடர் ஒரு முக்கியமான கருத்தை விளக்குகிறது. நமது உடல் சக்தி அதில் உயிர்ப்பை அளிப்பது சிவம். இதைத்தான் அகத்தியர் இங்கு கூறுகிறார். இப்பாடலின் மூலம் சிவன் தனக்கு அளித்த ஒரு வடமொழி நூலின் தமிழ் வடிவமே இந்த சௌமிய சாகரம் என்பது புரிகிறது.

(7) அகத்தியர் பெருமான் இந்த நூலை வடிவமைத்த விதம்

திரஞ்சொன்ன மகிமையை நான் பெற்றுக்கொண்டு

திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து

பரஞ் சேர்ந்த பூரணமாம் அறிவிலேறி

பாடினேன் சௌமிய சாகரத்தை மைந்தா

சாரமான வாசியில்நான் உறுதி கொண்டு

சந்தோஷமாக ஈராறு நூறும்

வரஞ் சேர்ந்த தவமதனால் பாடி நானும்

மகத்தான வேதியர்முன் வைத்தேன் தானே

சிவனிடமிருந்து உபதேசம் பெற்ற அகத்தியர் அவரிடமிருந்து வடமொழியில் ஒரு நூலையும் பெற்றார். அந்த நூலை ஊன்றிப் பார்த்து, பரத்துடன் சேர்ந்த பூரணமாம் பரையான அறிவுநிலையில் நின்று, வாசியை உறுதியாகப் பற்றியபடி வரத்தினால் தான் பெற்ற தவநிலையில் இருந்தபடி ஆயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்ட இந்த நூலைத் தான் இயற்றினேன் என்று அவர் கூறுகிறார். அவ்வாறு இயற்றிய நூலை வேதியனான அறிவுருவாக இருக்கும் இறைவனின் முன் அவர் சமர்ப்பித்தார்.

(😎 அகத்தியர் பெருமானுக்கு சிவன் சொன்ன ரகசியம்….

தானான சௌமிய சாகரத்தை நன்றாய்த்

தன்மையுடன் ஆதியந்தந் தயவாய்ப் பார்த்து

தேனான வடமொழியைத் தமிழ்தான் செய்த

திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்

ஊனான உலகமதில் உலகத்தோர்கள்

உறுதியுள்ள கைலாயம் இடங் கொள்ளாது

மாணாக் கேள் சௌமிய சாகரத்தை நீயும்

மார்க்கமுடன் அந்தி சந்தி மகிழ்ந்து பாரே

இறைவன் அகத்தியர் இயற்றிய சௌமிய சாகரத்தை நன்றாக தயவுடன் பார்த்து அவர் வடமொழி நூலில் உள்ளவற்றை நன்றாகத் தமிழ்ப்படுத்தியுள்ளார் என்றும், அதை உலகோர் படித்தால் அவர்களைத் தாங்க கைலாயத்தாலும் இயலாது என்றும் கூறியதாகவும் அகத்தியர் கருவிகள் பரம் ஆகியவற்றைப் பற்றி நன்றாக விளக்கியுள்ளார் என்றும் கூறியதாகவும் அகத்தியர் நமக்குச் சொல்கிறார். மனம், புத்தி, சித்தம், புலன்கள் பொறிகள், நம்மை எல்லைக்குட்படுத்துவையாகிய அனைத்துத் தத்துவங்களும் கருவிகள் எனப்படுகின்றன. இவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட்ட நிலையே பர நிலை.

           இறைவன் அகத்தியரை இந்த நூலை அந்தி சந்தியில் பார்த்து மகிழுமாறும் கூறினார். அந்தி என்பது பொதுவாக மலை என்று பொருள்பட்டாலும் அது ஒரு தத்துவத்தின் முடிவையும் குறிக்கும். அதேபோல் சந்தி என்பது இரு காலங்கள் சந்திக்கும் நேரம் என்றாலும் அது இரு தத்துவங்கள் சந்திக்கும் இடத்தையும் குறிக்கும். உதாரணமாக நமது உடலில் உள்ள சக்கரங்கள் தத்துவங்கள் சந்திக்கும் இடம். பிராணனும் அபானனும் சந்திக்கும் இடமும் சந்தி எனப்படுகிறது.

(9) பொதிகை வந்த அகத்தியர்

பாரென்று சொன்ன மொழி பெற்றுக்கொண்டு

பதிவான பொதிகைதனில் வாசமாகி

நேரென்று சௌமிய சாகரத்தைப் பார்த்து

நிச்சயமாய் அஷ்டாங்க யோகம் பார்க்கில்

சாரென்று பொதிகை மலை சார்புக்குள்ளே

சார்ந்திருந்த தபோதனர்கள் தானே கூடி

நேரென்ற பொதிகை தனின் முடிமேற்சென்று

மெஞ்ஞான சற்குரு வென்று அடிபணிந்தார்

இறைவனின் கட்டளையைப் பெற்ற அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்று அதைத் தனது இருப்பிடமாகக் கொண்டார். அங்கிருந்தபடி அவர் சௌமிய சாகரம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டையும் பார்த்தபடி இருந்தார். அப்போது தபோதனர்கள் பொதிகையின் உச்சியை அடைந்து அவரை மெய்ஞ்ஞான சற்குருவே என்று அவரை வணங்கி நின்றனர்.

              பொதிகை என்பது உலகில் உள்ள மலை என்பதுடன் உடலில் உள்ள ஒரு சக்தி மையத்தையும் குறிக்கிறது. இதைத்தான் புராணங்கள் சிவனின் கட்டளையை ஏற்று அகத்தியர் தென்புலம் வந்தார் என்று கூறுகின்றன.

(10) அகத்தியரிடம் தவயோகிகள் வேண்டினர்….

பணிந்துமிக அனைவோரும் இருகை கூப்பி

பரமகுரு தேசிகரே பதிவாய் நீரும்

கனிந்து மிக அந்தமதிற் கருணையாகி

கடாட்சித்த சௌமிய சாகரத்தை நாங்கள்

அணிந்துவரின் தெரிசனங்கள் பார்ப்போமென்று

அனைவோரும் ஒரு மனதாய் அருள்கண் கூர்ந்து

துணித்து வந்தோம் உம்முடைய பாதந்தன்னில்

சுகமாக அடுமை படைத்து ஆள் என்றாரே

இப்பாடலில் அகத்தியரிடம் தவயோகிகள் கேட்டதை அறிகிறோம். அவர்கள் அகத்தியரை அடைந்து அவரை பரமகுரு தேசிகா என்று போற்றி அவரது சௌமிய சாகரம் அதனை அறிந்தவர்களுக்குப் பல அதிசயங்களை, காட்சிகளைக் காட்டும் அதைத் தாமும் அறிய விரும்புகிறோம். அதனால் தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினர்.

(11) சௌமிய சாகரம் நூலில் மறைந்துள்ள தீஷா மார்க்கம்.

ஆளென்று சொன்ன தபோ தனரைப்பார்த்து

ஆதி தொடுத்து அந்தம் வரை சொன்னோம் நூலில்

காலென்ற கருக்குருவும் நன்றாய்ச் சொன்னோம்

காசினியில் தபோதனர்கள் கருணையாக

வாளென்று சொன்னதொரு தீக்ஷை மார்க்கம்

வளமான சவுக்கார வழலை போக்கும்

மேலென்ற காப்பதிலே ஆறுலக்ஷம்

விண்டதிலே சூக்ஷமதாய்க் கண்டோம் பாரே

தபோதனர்களின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து அகத்தியர் சௌமிய சாகரத்தை இயற்றினார். அதில் ஆதி முதல் அந்தம் வரை உள்ள விஷயங்களை விளக்கியுள்ளார். குருக்கரு அல்லது கால் எனப்படும் பிராணனைப் பற்றியும் அதில் விளக்கியுள்ளார். அதனுடன் தீக்ஷை மார்க்கம் எனப்படும் சித்த மார்க்கத்தையும் கூறினார். அது “சவுக்கார வழலையை” விலக்கும் என்றும் கூறுகிறார்.

            வழலை என்ற சித்தர் பரிபாஷை பல விஷயங்களைக் குறிக்கும். சிலர் அது கோழை என்பர், சிலர் அது பூ நீர் என்பர். பூ நீர் என்பது பூமியின் நீர் அல்லது கருவறையில் உள்ள நீர் என்றும் பொருள்படும். மற்றும் சிலர் இது பரநிலைக்கு முற்பட்ட நிலை என்பர். தீக்ஷை மார்க்கம் இந்த வழளையைப் போக்கும் என்கிறார் அகத்தியர். இதனை அடுத்து மேல் என்ற காப்பதிலே என்று அகத்தியர் குறிப்பிடுவது அவர் முன்பு சிவனிடமிருந்து பெற்ற சம்ஸ்கிருத நூலைக் குறிக்கலாம். அதில் இருந்த ஆறு லக்ஷம் சுலோகங்களின் சூட்சுமமே சௌமிய சாகரம் என்று இதற்குப் பொருள் கூறலாம்.

(12) அகத்தியர் பெருமானுக்கு சிவன் இட்ட கட்டளை….

கண்டதொரு சகலகலை வேதந்தன்னை

கடைந்தெடுத்து சௌமிய சாகரமாய்ப்பாடி

கொண்டதொரு சூத்திரத்தைக் குருமுன் வைத்தேன்

குருவான எம்குருவும் நன்றாய்ப் பார்த்து

விண்டதொரு சாகரந்தான் ஆதி சூக்ஷம்

விளம்பாது விளம்பாது மவுனம் பண்ணு

அண்ட கேசரமதிலே தவஞ் செய்யென்று

ஆதிகுரு வேதியரும் சொன்னார் பாரே

சிவனிடமிருந்து தான் பெற்ற உபதேசத்தை மட்டுமல்லாமல் வேதத்தின் சாரத்தையும் கடைந்தெடுத்து அகத்தியர் சௌமிய சாகரமாகப் புனைந்தார். பரமகுரு என்று போற்றப்படும் தலையாய சித்தரான அகத்தியர் உடனே அதைப் பிறருக்கு உபதேசிக்க முனையவில்லை. அந்த நூலை சிவனிடம் அர்ப்பணித்து அவர் அதைப் பரிசோதிக்கச் செய்தார். சிவனும் அந்த நூலைப் பார்த்து அனைத்து எல்லா சூட்சுமங்களையும் விளக்கும் நூல் இது என்றும் இதனை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டாம் என்றும் மௌனம் காக்கும்படியும் கேசரத்தில் தவம் செய்யுமாறும் கூறினார். கேசரம் என்றால் ஆகாயத்தில் உலவுதல் என்று பொருள். இங்கு ஆகாயம் என்பது வெட்டவெளி அல்லது பரவுணர்வு நிலை என்று பொருள்படும். இவ்வாறு சிவன் அகத்தியர் பரவுணர்வு நிலையில் இருக்குமாறு கூறினார்.

(13) அகத்தியர் சொல்லும் தகுதிகள்….

பாரையா சொல் மொழிகள் தவறொண்ணாது

பத்தியுடன் உத்திரவு பெற்று வந்தால்

நேரையா சௌமியமாம் பொருளுஞ்சொல்லி

நிசமான சாகரத்தின் நிலையுங் காட்டி

தேரையா வென்றுக்கா யாதி ஈந்து

செய்த தொரு சாஸ்திரமே ஈவோமொன்று

மேரையா மேரு நடு முடியிற் சென்றேன்

விளம்பியதோர் சௌமியத்தை சொல்லக் கேளே

யாருக்குத் தான் இந்த அறிவைப் புகட்டுவேன் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். முனிவர்களும் தபோதனர்களும் விரும்பிய இந்த அறிவைப் பெற, ஒருவர் தவறான சொற்கள், வாக்கு ஆகியவை இல்லாமல் இருக்கவேண்டும், பக்தியுடன் இருக்க வேண்டும். இந்த அறிவைப் பெறுவதற்கு உத்தரவு பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு ஒருவர் வந்தால் அகத்தியர் அவருக்கு சௌமிய சாகரத்தின் பொருளைக் கூறி அதன் நிலையைக் காட்டி காயசித்தி முதலியவற்றை ஈவார். அதற்கு அவர், தான் மேரு மலையின் மத்திய உச்சியில் இருந்தபடி இதைக் கூறுவேன் என்கிறார். மேரு மலை என்பது தண்டுவடம். அதன் உச்சி என்பது சகஸ்ராரம். இவ்வாறு தான் நடுமுடியின் இருப்பேன் என்று அகத்தியர் கூறுவது அவர் பரவுணர்வு நிலையில் இருந்தபடி இந்த அறிவைத் தருவேன் என்று கூறுவதாகப் பொருள்படும். அதனால் அகத்தியர் எவ்வாறு ஒருவருக்கு உபதேசத்தை அளிப்பார் என்பதும் அதைப் பெற ஒருவருக்கு என்ன தகுதிகள் தேவை என்பதும் புரிகிறது.

(14) நூலின் அறிமுகம்

சொல்லக்கேள் சௌமிய சாகரத்தை மைந்தா

சுகமான வடமொழியைத் தமிழால் செய்தேன்

அல்லக்கேள் ஆதிமுதல் சொன்ன நூலில்

அரிதரிது இதன் பெருமை யாருங் காணார்

வெல்லக்கேள் வேதமென்ற சௌமியத்தை

மேலான பதவிஎன்று பதனம் பண்ணி

உள்ளத்தின் தன்னொளிவு மேலே நீயும்

உண்மையுடன் அந்தி சந்தி பூசை பண்ணே!

சௌமிய சாகரம் என்பது வடமொழியிலிருந்து தமிழாக்கப்பட்டது என்று கூறும் அகத்தியர் அது வேதம், ஆதி முதல் அனைத்து விஷயங்களையும் விளக்குவது, அதில் கூறுப்பட்டுள்ள பொருட்களை ஒருவர் படித்து மனதில் எண்ணிப்பார்க்க வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்தால் ஒருவர் வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார். “அந்தி சந்தி பூசை பண்ணு” என்று அவர் கூறுவது சிவனின் கட்டளையை மீண்டும் வலியுறுத்துவதாகும்.

(15) இந்த நூல் கயிலாய மேருகிரியில் இட்ட தீபமாகும்….

பண்ணப்பா சௌமியத்தை பூசைபண்ணு

பதிவான சாகரத்தை அறிந்துகொண்டு

எண்ணப்பா வென்று தன்னை மறந்திடாதே

இகபரசாதனம் முழுதும் இதுவே சித்தி

முன்னப்பா சொன்ன சாஸ்திரங்களெல்லாம்

முன்பின்னாய்ப் பூரணத்திற் சேர்க்கச் சொன்னோம்

கண்ணப்பா கண்மணிபோல் இந்த நூல்தான்

கைலாச மேருகிரி தீபமாச்சே

அகத்தியர் இந்த நூலின் பெருமையை இப்பாடலில் விளக்குகிறார். இந்த நூல் அனைத்து சாத்திரங்களினும் உயர்ந்தது ஏனெனில் அது இக பர சித்தியை அளிக்கும். அதனால் ஒருவர் இதனைக் கற்றுத் தேர்ந்து இதைப் பூஜிக்க வேண்டும். பெற்ற சித்தியினால் தன்னிலையை மறந்துவிடக்கூடாது. கண்ணின் மணியைப் போல விளங்கும் இந்த நூல் கைலாச மேரு கிரியில் இட்ட தீபமாகும். பரவுணர்வு நிலையில் காணப்படும் பரவொளி யாகும் என்கிறார் அகத்தியர்.

(16) தகரத்தையும் தங்கமாக்கும் சிவயோகத்தை பயிலுங்கள்….

ஆச்சப்பா மேருகிரி தீபம் போலே

அரகரா சௌமிய சாகரந்தான் பாரு

நீச்சப்பா கடினமென்று நீ மலைக்க வேண்டாம்

நேர்மையுள்ள கைபாகம் முறை பாகங்கள்

பாச்சப்பா வெகுதெளிவு இந்நூல் போலே

பகராது முன் சொன்ன சாஸ்திரங்கள்

காச்சப்பா இந்நூலைப் பதனம் பண்ணி

கனகமுடன் சிவயோகங் கருத்தாய்ப் பாரே

இந்த நூலின் பெருமையைக் கண்டு ஒருவரும் அதைக் கற்பது, செயல்படுத்துவது கடினம் என்று விட்டுவிடவேண்டாம் என்கிறார் அகத்தியர். இந்த நூலில் கைபாகம் முறைபாகம் ஆகியவற்றை நன்றாக விளக்கியுள்ளேன் என்றும் அவர் கூறுகிறார். கைபாகம் முறைபாகம் என்ற சொற்கள் பொதுவாக சித்த மருத்துவத்தில் ரசவாதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது, பொருட்களின் அளவையும் அவற்றை எவ்வாறு மருந்தாக மாற்றுவது என்ற செயல் முறையையும் குறிக்கின்றன. அதனால் பிற சாத்திரங்களைப் போல இல்லாது சௌமிய சாகரத்தில் அளவுகளும் முறைகளும் நன்றாக விளக்கப்பட்டுள்ளன அதனால் ஒருவர் பயப்படவேண்டாம் என்று இதற்குப் பொருள். இந்த நூலை சித்த தயாரிப்பைப் போல நன்றாகப் பதனப்படுத்தி காய்ச்ச வேண்டும் என்கிறார் அகத்தியர். அவ்வாறு செய்தால் ஒருவர் கனகத்தையும் சிவயோகத்தையும் பெறலாம் என்று ஒரு வாக்கியத்துடன் அவர் இந்தப்பாடலை முடிக்கிறார்.

                     சித்தர்களின் ரசவாதம் கீழான உலோகங்களைத் தங்கமாக மாற்றுவது மற்றும் கீழான பருப்பொருளாலான உடலை தங்கமேனியாக மாற்றுவது, அளவுக்குட்பட்ட உடலை எங்கும் பரவி நிற்கும் இருப்பாய் மாற்றுவது என்ற இரண்டு குறிக்கோள்களையும் கொண்டது. அதனால்தான் அகத்தியர் இந்த நூலினால் ஒருவர் தங்கத்தையும் சிவயோகத்தையும் பெறலாம் என்கிறார். இனி வரும் பாடல்களில் உள்ள ரசவாத முறைகளை நாம் தத்துவ நோக்கிலிருந்து பார்க்கலாம். இந்த விளக்கவுரையின் குறிக்கோள் தூல சரீரத்தை திவ்ய சரீரமாக மாற்றுவது எவ்வாறு என்று அறிவது தான்.

(17) முகவுரை

கருவான சௌமிய சாகரத்தை மைந்தா

கருணையுடன் விளம்புகிறேன் கருவைக் கேளு

திருவான ஆதார மூலசூக்ஷஞ்

செப்பரிது தத்துவத்தின் வழியின் நேர்மை

உருவான தீக்ஷையொடு பூசை மார்க்கம்

உத்தமனே அஷ்ட கன்மஞ் சித்து மூலம்

குருவான கற்பமொடு மந்திரசித்து

கூர்மையென்ன யோகமொடு ஞானந்தானே

அகத்தியர் இப்பாடலிலிருந்து சௌமிய சாகரத்தில் உள்ள விஷயங்களைக் கூறத் தொடங்குகிறார். அவர் இந்த நூலில் ஆதாரமூலமான மூலாதாரத்தைப் பற்றியும் அதன் வழியான சுழுமுனையில் செல்லும் தத்துவங்களைப் பற்றியும் தீக்ஷை, பூஜை, அஷ்ட கர்மம், சித்து கற்பம் மந்திரம், யோகம் மற்றும் ஞானத்தைப் பற்றியும் கூறப்போகிறார்.

(18) முகவுரை

தானான யோகமொடு சமாதி தீக்ஷை

சத்தியொடு சிவ தீக்ஷை வாலை தீக்ஷை

தேனான பூரணமாம் மவுன தீக்ஷை

திருவான பஞ்சகண தீக்ஷையோடு

ஊனான முப்பூவாம் வழலை தீக்ஷை

உண்மையுள்ள வினோத வகை மோடியங்கம்

பூனான மையுடனே திலதவாடை

போக்கான மறைப்புடனே இன்னங் கேளே

அகத்தியர் தான் இந்த நூலில் கூறப்போகும் விஷயங்களை இப்பாடலிலும் தொடருகிறார். சௌமிய சாகரம் என்ற இந்த நூலில் அவர் பல வகையான தீட்சைகளையும் மூலிகை தயாரிப்புக்களையும் கூறப்போகிறேன் என்கிறார்.

(19) தயாரிப்பு முறை

இன்னங் கேள் சொல்லுகிறேன் ஜெயநீர் போக்கு

இன்பமுள்ள திராவகத்தின் கருவின் மார்க்கஞ்

சொன்னதொரு கட்டினாங்கள் உருக்கினங்கள்

சுகமான பற்பமொடு செந்தூரங்கள்

வர்ணமுள்ள களங்குடனேமெழுகு மார்க்கம்

மகத்தான் தூபமொடு தீப வேதை

என்ன வொண்ணாத் தைலமொடு லேகியங்கள்

ஏகாந்த மானதொரு லகிரி போக்கே

அகத்தியர் இந்த நூலில் பல மருந்துத் தயாரிப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கவுரையின் நோக்கம் அவரது தட்துவக்கருத்துக்களைப் பார்ப்பது மட்டுமே என்பதால் இந்தப் பாடல்களுக்கு விளக்கங்கள் தரப்படவில்லை. இவற்றை விளக்குவதற்கு இந்த எழுத்தாளருக்குத் தகுதியில்லை.

(20) பதன முறைகள்

போக்கான வைப்புமுறை பாஷாணங்கள்

புகழான உபரசங்கள் காரசாரம்

வாக்கான குளிகையுடன் கெவுனசித்தி

மகத்தான லோகமா ரணங்களோடு

தாக்கான சத்துருமித் துருக்கள் தானுத்

தன்மையுடன் குருமுடிக்கும் பாகந்தானுந்

தூக்கான புடபாகம் எரிப்பான் பாகந்

துடியான கைபாகங் கணக்குந்தானே

இப்பாடலில் சித்தர்கள் கையாளும் பதன முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த முறைகள் தத்துவ ரீதியாகவும் முக்கியமானவை. இவற்றை ஒருவர் அனுபவத்தால் உணரவேண்டும்.

(21) லகரி தியான முறை

கணக்கான சேர்மானஞ் சரக்கு வைப்பு

கருணையுள்ள ரத்தினங்கள் வைப்பு மார்க்கம்

புணக்கான சல்லியங்கள் ஒட்டியங்கள்

புலி ரத்தம் ஏவல் பில்லி சூன்னியங்கள்

தனக்கான அழகிரியிலே அனந்த மார்க்கந்

தன்மையுள்ள தெரிசனங்கள் கோடான கோடி

பிணக்க முள்ள சக்கரங்கள் ஆவேசங்கள்

ஏகாந்த அஞ்சனங்கள் கோடி பாரே

பலவித தயாரிப்புக்களையும் அவற்றின் சரக்குகளையும் குறிப்பிட்ட பிறகு சில சித்து முறைகளை இங்கே அகத்தியர் குறிப்பிடுகிறார். இப்பாடலில் குறிப்பிடப்பட்ட லகிரி என்பது தியானத்தில் முக்கியமான ஒன்று. சமாதி நிலையை அடையும் யோகி இந்த லகிரி அல்லது ஆனந்த ஆஸ்பதம் என்பதில் மூழ்கிவிடாமல் இருக்க பெரும்முயற்சி செய்யவேண்டும்.

(22) ரசவாத வழி

கோடியென்ற வெகுகோடி தொழில்களெல்லாங்

குறித்தபடி சௌமியமாய்க் காணலாகும்

நாடி மனங் கொண்டு குறி கண்டாயானால்

நந்தி பிரகாசமது நயனந்தன்னில்

ஆடிநின்ற திரு நடனங் காணலாகும்

அப்பனே சக்கரங்கள் தோணும் பாரு

சூடிநின்ற சக்கரத்தின் இனங்கள் தன்னை

சொல்லுகிறேன் வேத முறை சூக்ஷந்தானே

மூலிகைத் தயாரிப்புக்கள் சித்த மார்க்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவற்றின் உதவியால் உயருணர்வு நிலையைப் பெறலாம். அதனால் தயாரிப்புக்களையும் சரக்குகளையும் கூறிய பிறகு அவற்றின் செயல் தளங்களான சக்கரங்களைப் பற்றி அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். இந்த சக்கரங்களின் ஊடே உணர்வுநிலைகளின் எழுச்சி ஏற்படுகிறது. அதை மனத்தின் உதவியால்தான் செய்ய முடியும். அதனால் அகத்தியர் மனத்தினால் குறியைப் பார்க்கவேண்டும், அப்போது நந்தியின் பிரகாசம் கண்ணில் தென்படும் என்று கூறுகிறார். இறைவனின் திருநடனமான செயல்பாடுடைய உலகம் தென்படும். இவை நடைபெறுவது சக்கரங்களில். அதனால் சக்கரங்களும் அவை பூணும் தத்துவங்களும் புலப்படுகின்றன. இதுதான் சூட்சுமம், வேத வழி என்று அகத்தியர் கூறுகிறார். வேதவழி என்பது வேதம் கூறும் வழி என்றும் வேதை அல்லது ரசவாத வழி என்றும் இரு பொருள்களைத் தருகிறது.

(23) ஜீவாத்மா, பரமாத்மாவின் தொடக்கம்

தானென்ற சூக்ஷமடா விந்து நாதம்

தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து

கோவனன்ற குருவருளால் அங்குதித்து

கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்

ஊனென்ற மடபதிக்கு உறுதியான

உண்மையுள்ள அக்கினி யும் வாய்வுங் கூடி

தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்ச்

சென்றிருந்து ஆதாரம் ஆனார்பாரே

இப்பாடல் முதலாக அகத்தியர் தனது தத்துவங்களை விளக்கத் தொடங்குகிறார். உலகம் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பது விந்துவும் நாதமும். இவையிரண்டும் குருவருளால் கூடி மடபதியாயின என்கிறார் அகத்தியர். குருவருள் என்பது பொதுவாக உபதேசம் செய்யும் உலக குருக்களைக் குறித்தாலும் இங்கு அது இறைவனைக் குறிக்கும். குரு என்ற சொல் இருட்டை நீக்குபவர் என்று பொருள்படும். இருட்டு என்பது ஆணவ மலம் தோற்றுவிக்கும் “நான் அளவுக்குட்பட்டவன்” என்ற எண்ணம். இந்த இருட்டை நீக்குவதற்கே ஒரு ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது. இதற்கு உதவியாக இறைவன் கர்மம் மாயை என்ற இரு மலங்களையும் கூட்டுவிக்கிறார். அது வண்ணான் துணியை வெளுக்க ஆற்றங்கரையில் மண் என்ற மற்றொரு அழுக்கை அதன்மேல் தேய்ப்பதைப் போல் உள்ளது என்று திருமூலர் கூறியுள்ளார்.

            மடபதி என்ற சொல் அறிவற்றவன் என்றும் அறிவற்ற ஒரு தலம் என்றும் ஆன்மீக இடம் என்றும் பொருள்படும். மடபதி என்பதற்கு அறியாமையை உடைய ஜீவன் என்று பொருள் கூறலாம் என்றாலும் இங்கே அகத்தியர் அந்த சொல்லை உடல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். உடல் அசேதனம் அல்லது அறிவற்றது. ஆத்மா சேதனம் அல்லது அறிவுள்ளது. இதனால் உடலை அறிவற்ற தலம் என்று அழைக்கலாம். உடலில் அக்னியும் வாயுவும் ஜீவாத்மா பரமாத்மாவாக இருக்கின்றனர் என்று அகத்தியர் அடுத்து கூறுவதால் உடல் ஆன்மீக தலம், மடம், பதி, ஜீவாத்மா பரமாத்மாக்களின் இருப்பிடம் என்றும் பொருள் கூறலாம். இந்த உடலுக்கு ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆதாரங்களாக அதற்கு இருப்பைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர் என்று அகத்தியர் இப்பாடலை முடிக்கின்றார்.

(24) ஜீவாத்மா, பரமாத்மா என்றால் என்ன?

பாரப்பா ஆதாரம் ஆறாதாரம்

பரிவான ஆதார மடத்துக்குள்ளே

நேரப்பா அக்கினிதான் ஜீவாத்மாவே

நிறைந்துநின்ற வாய்வதுதான் பரமாத்மாவாய்ப்

பேரப்பா பெருகி நின்ற கடத்தினுள்ளே

பிளமாக நின்று திருவிளையாட்டாடி

காரப்பா ஆகாசஞ் சாக்ஷியான

கருணையுடன் நின்றுதடா கருவாய்க்காணே

மிக முக்கியமான இப்பாடலில் அகத்தியர் ஜீவாத்மா பரமாத்மா உடல் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார். அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவை சக்கரங்கள். ஆதாரம் என்றால் தாங்குவது, support. சக்கரங்கள் உடலுக்கும் தத்துவங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் இருக்கும் மடம் உடலாகும். அந்த மடத்தில் அக்னி தத்துவமே ஜீவாத்மா. அந்த மடத்தை நிறைக்கும் வாயுவே பரமாத்மா. இந்த பரமாத்மா குகை அல்லது பிலம் எனப்படும் இதயத்தில் இருந்து விளையாடுகிறது. வாழ்க்கையே அதன் விளையாட்டுதான். இந்த கடம் அல்லது பானையில் ஆகாயம் சாட்சியாக இருக்கிறது.

       ஆகாயத்தை சாட்சி என்று கூறுவது மிகவும் ரசமானது. பஞ்ச தத்துவங்களில் ஆகாய தத்துவமே அனைத்துக்கும் அடிப்படையாக இருந்து தாங்குகிறது. பிற தத்துவங்கள் அதன் மீது உள்ளன. ஒரு இடத்தில் மற்ற எந்த தத்துவம் இல்லாவிட்டாலும் ஆகாய தத்துவம் இருக்கிறது. அதனால் அதுவே அனைத்துக்கும் சாட்சியாக உள்ளது.

(25) பஞ்ச பூதங்கள்

காணப்பா தத்துவத்தின் விபரஞ் சொல்வேன்

கருணையுடன் சொல்லுகிறேன் கனிவாய்க்கேளு

பேணப்பா பூதமைந்து சொல்லக் கேளு

பிரிதிவி அப்புவுடன் தேய்வுமாக

பூணப்பா வாய்வுடனே ஆகாசந்தான்

பொருந்திநின்ற பூதமடா ஐந்துமாச்சு

தோணப்பா மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்துத்

துலங்கி நின்ற பூதத்தை நன்றாய்க்காரே

ஜீவாத்மா அக்னி பரமாத்மா வாயு என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் ஐம்பூதங்களை விளக்கத்தொடங்குகிறார். ஐம்பூதங்களாவன பிரிதிவி எனப்படும் நிலம், அப்பு எனப்படும் நீர், தேயு எனப்படும் தீ, வாயு எனப்படும் காற்று மற்றும் ஆகாயம். நமது உடலில் உள்ள சக்கரங்களுக்கும் இந்த பூதங்களுக்கும் உள்ள தொடர்பு பின்வருமாறு: மூலாதாரம்-நிலம், சுவாதிஷ்டானம்-நீர், மணிபூரம்- தீ, அனாகதம்- வாயும் விசுத்தி- ஆகாயம்.

(26) பூத சித்தியின் தொடங்கி மெருகிரி, சதுரகிரி, கயிலாயம்

காரப்பா அஞ்சு பஞ்ச பூதந்தன்னை

கண் குவித்து மனக்கண்ணால் கருவாய்ப் பார்த்தால்

மேரப்பா மேருகிரி காணலாகும்

மேரான சதுரகிரி விலாசந் தோணும்

ஆரப்பா உனக்கீடு சொல்லப் போறேன்

அரகரா பூதவகை அறிந்து கொண்டால்

நேரப்பா நின்ற கைலாசந் தோன்றும்

நிஜமான ஞான இந்திரியங்கேளே

இந்த முக்கியமான பாடலில் அகத்தியர் சித்தர் பாடல்களில் காணப்படும் பல சிகரங்களைப் பற்றிக் கூறுகிறார். மேரு கிரி, சதுரகிரி, மகேந்திர கிரி, கைலாயம் என்ற பெயர்கள் சித்தர்பாடல்களில் அடிக்கடி காணப்படுகின்றன. மேரு கிரி என்பது ஒரு மலை என்றும் அதனைச் சுற்றி உலகங்கள் அமைந்துள்ளன என்றும் சூரியனும் அதைச்சுற்றிப் பயணிக்கிறது என்றும் புராணங்களும் பல கதைகளும் கூறுகின்றன. உண்மையில் மேரு என்பது நமது தண்டுவடம். அதனுள் சுழுமுனை நாடி உள்ளது. அதேபோல் சதுரகிரி என்பது மூலாதாரத்தைக் குறிக்கும். இவ்வாறு இந்த கிரிகளை ஒருவர் பூத சித்தி பெற்றால், பூதங்களின் உண்மையான தன்மையை உணர்ந்தால் அறியலாம். கைலாயம் என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கும். இதனால் பூத சித்தி அடைந்த ஒருவர் கண்ணால் காணும் உலகைப் படைக்கும் சக்திகளின் தன்மைகளை உணர்ந்து குண்டலினியின் பாதையை உணரலாம். உலகம் எவ்வாறு தோன்றுகிறது என்பதை உணரலாம்.

(27) ஞானேந்திரியங்கள்

கேளப்பா ஞான இந்திரியந்தன்னை

கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு

சூளப்பா தோத்திரந்தான் தேகந்தேகம்

வாளப்பா சக்ஷுவென்றால் நேத்ரமாகு

மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும்

காலப்பா ஆக்கிராணம் மூக்கு மூக்கு

கருணையுள்ள ஞான இந்திரியமைந்தாம்.

பூதங்களைப் பற்றிக் கூறிய பிறகு அகத்தியர் ஞாநேந்திரியன்களைப் பற்றிக் கூறத்தொடங்குகிறார். உடல் த்வக் என்றும் கண்கள் சக்ஷு என்றும் வாய் சிங்கு என்றும் மூக்கு ஆக்ராணம் என்றும் அழைக்கப்படுகின்றன. இங்கு காது குறிப்பிடப்படவில்லை.

(28) மெய்ஞ்ஞான தீபம்

கேளப்பா ஞான இந்திரியந்தன்னை

கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு

சூளப்பா தோத்திரந்தான் தேகந்தேகம்

வாளப்பா சக்ஷுவென்றால் நேத்ரமாகு

மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும்

காலப்பா ஆக்கிராணம் மூக்கு மூக்கு

கருணையுள்ள ஞான இந்திரியமைந்தாம்.

அகத்தியர் இப்பாடலில் ஞாநேந்திரியங்களை விளக்குகிறார். கண்கள்-சஷு, உடல்- த்வக், வாய்- சிங்கு, மூக்கு- ஆக்ராணம் என்று அழைக்கப்படுகின்றன என்கிறார் அகத்தியர். இப்பாடலில் காது குறிப்பிடப்படவில்லை. ஆனால் அகத்தியர் அதையும் சேர்த்து ஞானேந்திரியங்கள் ஐந்து என்கிறார்.

           அஞ்சான பஞ்ச இந்திரியந்தன்னை

அருளான மனக்கண்ணால்நன்றாய்ப் பார்த்து

நெஞ்சார அஞ்சி நிலை பார்த்து மைந்தா

நிலையான குருபதியில் நின்றாயானால்

மிஞ்சாமல் வாசியது தானேதானாய்

மெய்ஞ்ஞான தீபமது விளங்கும் பாரு

தஞ்சமுடன் ஐந்து நிலை நன்றாய்ப் பார்த்துச்

சங்கையுடன் கர்ம இந்திரியங்கேளே

          மேற்பாடலில் கூறிய ஞானேந்திரியங்கள் அறிவைக் கொடுப்பவை. அவற்றின் உண்மையான தன்மையை, அவை விஷய ஞானத்தை ஆத்மாவுக்குத் தருபவை, அந்த அறிவை அனுபவிப்பது ஆத்மாவே என்ற உண்மையை, ஒருவர் அறிந்தால் அவற்றைப் பற்றிய அறிவைப் பெறலாம். இந்த அறிவுடன் ஒருவர் குருபதம் எனப்படும் ஆக்னையில் நின்றால் வாசி ஆத்ம தீபமாக, மெய்ஞ்ஞான தீபமாகக் காட்சி தரும் என்கிறார் அகத்தியர்.

          இவ்வாறு ஞானேந்திரியங்களை விளக்கிய பிறகு அகத்தியர் கர்மேந்திரியங்களை விளக்கப் புகுகிறார்.

                    ~~~~~~~~~~~~~~~~~~~

(29) கர்ம இந்திரியங்களின் பயன்கள்

கேளப்பா வாக்குடனே பாதம்பாணி

கிருபையுடன் பாயு உபஸ்தம் ஐந்துஞ்

சூளப்பா கர்ம இந்திரிய மாகுஞ்

சுகமாகத் தானரிந்து சுத்தமானால்

பாளப்பா போகாது ஞான மார்க்கம்

பத்தியுடன் ஐந்தையும் நீ கண்டு தேர்ந்தால்

கேளப்பா ஒன்றுமில்லை வாசியேகுங்

குறியாக ஐம்புலனைக் கூர்ந்து பாரே

ஞாநேந்திரியங்களை விளக்கியபிறகு அகத்தியர் கர்மேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புலன்களை இப்பாடலில் விளக்குகிறார். அவை வாய், கால், கை, கழிவுறுப்பு மற்றும் பிறப்புறுப்பு என்பவை. இவற்றின் தன்மையை அறிந்து அவற்றை சுத்தமாக்கினால் வாசி ஏறும் என்கிறார் அகத்தியர். இங்கு குறிப்பிடும் சுத்தம் சரியை எனப்படும் வெளிச்சுத்தமாகும்.

                ஞான இந்திரியங்கள் ஆத்ம தரிசனத்தையும், கர்ம இந்திரியங்கள் வாசியின் ஏற்றத்தையும் தருகின்றன என்கிறார் அகத்தியர்.

(30) புலன்களின் தொடர்பு

பார்க்கையிலே ஐம்புலனை நன்றாய்க் கேளு

பதிவான சத்தமொடு பரிசம் ரூபம்

ஏர்க்கவே ரசமுடனே கெந்தம் ஐந்து

இன்பமுள்ள ஐம்புலனை அறிவதற்கு

சேர்க்கையுடன் ஐம்புலனிக் கண்டு மைந்தா

தேர்ந்து மனதறிவாலே தேர்ந்து கொண்டால்

மார்க்கமுள்ள சித்தரென்று யார்க்குந்தோணும்

மைந்தனே ஐம்புலனை வகுத்துக் காணே

சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்று புலன்கள் ஐந்தாகும். இந்த புலன்களால் பெரும் அறிவு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் பொறிகள் எனப்படும் ஞானேந்திரியங்கள் புலன்களுடன் சேருகின்றன, இவையிரண்டும் ஆன்மாவுடன் சேர ஆன்மா அந்த அனுபவங்களை உணர்கிறது. இதனால் அகத்தியர் புலன்களை அவற்றின் சேர்க்கையுடன் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு உலக இன்பங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது சித்தர் மார்க்கத்தில் ஒரு அம்சம் என்று அவர் நமக்குக் கூறுகிறார்.

அகத்தியர்அறிவுரை!

“பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்

உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி

உனக்கேதடா. பாவத்தை செய்தவன்

சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.

அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி

தண்டனை தருவார் என்பது யாருக்கும்

தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான்

இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு

நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான்

என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்

கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம்

இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த

நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று

பொருள். இந்த கருத்தை மனதில்

வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும்

பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக

எளிதாக, மிக நீதியாக தோன்றும்.”!

ஓம் அகத்திய குருவே போற்றி!

தொடரும் அகத்தியரை நோக்கிய இந்த உண்மை பயணம் .

You may also like

Translate »