தாணுமாலய சுவாமி கோவிலில் விநாயகர், பெருமாள், முருகன், காலபைரவர், ஆஞ்சநேயர் என கடவுள்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இதனால் இந்த கோவிலுக்குள் நுழைந்தாலே பலன்கள் நிச்சயம் என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.
பொதுவாக இந்திரன் பாவவிமோசனம் பெற்ற தலம் என்பதால் எந்தவொரு பாவமானாலும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். அவற்றில் சில பலன்களை இங்கே பார்ப்போம்.
தாணுமாலய சுவாமி:- மும்மூர்த்திகளும் ஒரே உருவில் அருள்பாலிப்பதால் சகல விதமான பலன்களும் கிடைக்கும். அங்குள்ள பிரக்ஞ தீர்த்தம் என்னும் ஞானம் அருளும் திருக்குளத்தில் நீராடி, திருநீறு அணிந்து சிவாய நம என உச்சரித்து, திருக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த புத்திர பாக்கியத்தோடு, நற்பொருளையும், அருளையும் பெற்று பிறவி பயனை பெறலாம்.
பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து தாணுமாலயனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆலய பிரகாரத்தை சிவநாமம் உச்சரித்து சுற்றி வந்தால் நவக்கிரகங்களின் தாக்கம் குறையப் பெற்று தடைகள் விலகி அனைத்து வளங்களையும் பெறலாம். சிவனார்க்கு கனிகளை நைவேத்தியம் செய்வதால் அறிவு மேன்மை அடையும். சுவாமிக்கு விசேஷ வழிபாடாக ருத்ரதாரை அபிஷேகமும், பாயாசம் நைவேத்தியமாக படைத்து வழிபாட்டால் அனைத்து வளங்களும் அடையலாம். திருமண தடை உள்ளவர்களும் சுவாமியை வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.
பஞ்ச நந்திகள்: கோவிலில் நமசிவாய அட்சர வடிவமாய் பஞ்ச நந்திகள் விளங்குகின்றன. ந என்னும் மந்திர எழுத்தாய் இந்திர நந்தியும், ம என்ற மந்திர எழுத்தாய் பிரம்ம நந்தியெனும் மகா நந்தியும், சி என்ற மந்திர எழுத்தாய் கங்காள நாதர் சன்னதியில் விஷ்ணு நந்தியும், வா என்ற வடிவமாய் கிழக்கு நோக்கி கைலாச நாதர் சன்னதியில் உள்ள சிவாதல நந்தியும், ய என்ற அட்ச வடிவமாய் அறம் வளர்த்த நங்கை சன்னதியில் தர்மநந்தியும் அமையப் பெற்று பூரண சிவாலயமாய் விளங்குகிறது. பிரதோஷ நாட்களில் பஞ்ச நந்திகளை தரிசிப்பது அனைத்து பாவங்களையும் போக்கும் வல்லமையை வழங்கும்.
ஜுரதேவமூர்த்தி: கோபுரத்தின் மேற்குபுறம் ஊஞ்சல் மண்டபம் எதிரில் மண்டையடி சாமியென உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஜுரதேவமூர்த்தி சிற்பம் உள்ளது. மூன்று தலைகள், ஒன்பது கண்கள், நான்கு கைகள், மூன்று கால்கள் போன்றவற்றை இச்சிலையில் காணலாம். இந்த சிலையின் தலையில் நல்ல மிளகும், சுக்கும் அரைத்து தேய்த்து வழிபட்டால் தீராத தலைவலி நீங்கும் என நம்பப்படுகிறது. தலைவலியால் அவதிப்படுவோர் ஜுரதேவமூர்த்திக்கு நல்லமிளகு, சுக்கு அரைத்து தேய்த்து வழிபடுகிறார்கள்.
காலபைரவர்: இங்குள்ள காலபைரவரை செவ்வாய்க் கிழமைகள் தோறும் வழிபட்டு வர வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.