உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது.
இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி காட்சி தருவார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.
இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். அதாவது சிரசை பூமியில் பதித்து பாதத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். அருகிலேயே அன்னை வேறு எங்கும் இல்லாத வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.
எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எனமதுரு கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.