Home ஆன்மீக செய்திகள் செவ்வாய் தோஷத்தால் யாருக்கு பாதிப்பு?

செவ்வாய் தோஷத்தால் யாருக்கு பாதிப்பு?

by admin
Chevvai-Dosham_செவ்வாய் தோஷத்தால் யாருக்கு பாதிப்பு

திருமணத்திற்கு வரன் பார்க்க தொடங்கியவுடன் முதல் வரிசையில் நிற்கும் தோஷம் செவ்வாய் தோஷம். நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் உடலின் ரத்த அணுக்கள், ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர். ரத்த அணுக்களின் மூலக் கூறுகளை நிர்ணயித்து பிரிக்க கூடிய சக்தி உடையவர். அது மட்டுமல்ல ஒருவரின் ரத்தத்தை கொண்டு ஆண், பெண் என பாலினத்தையும் தீர்மானிக்கலாம்.

ஆண் ஜாதகத்தில் செவ்வாயை கொண்டு ஆண்மை வீரியத்தையும், பெண் ஜாதகத்தில் மாதவிடாய் சுழற்சி, கருப்பையின் செயல்பாடு மற்றும் மாங்கல்ய பாக்கியம் போன்றவற்றையும் அறியலாம். ஒருவரின் வீடு வாகன யோகம் பற்றியும் செவ்வாயின் நிலை கொண்டே அறிய முடியும். இத்தகைய செவ்வாய் திருமணம் தொடர்பான பாவங்களான 2, 4, 7, 8, 12–ல் அமர்வது தோஷம் என்று கருதப்படுகிறது.

அதாவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாமிடம், கற்பு எனும் ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்காமிடம், வாழ்க்கைத் துணை, களத்திர ஒற்றுமையை சொல்லும் ஏழாம் இடம், கணவனின் ஆயுளைக் குறிக்கும் எட்டாமிடம், இல்லற இன்பத்தை கூறும் பனிரெண்டாம் இடம் ஆகிய பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால் அந்த இடங்கள் நல்ல பலனைத் தராது என்பதால் தோஷமாக கருதப்படுகிறது.

அதேபோல செவ்வாய் ஏழில் இருந்தால், தனது கொடிய எட்டாம் பார்வையால் இரண்டாமிடத்தைப் பார்ப்பார். நான்கில் இருந்தால் நான்காம் பார்வையாக ஏழாமிடத்தையும், பனிரெண்டில் இருந்தால் எட்டாம் பார்வையாக ஏழாமிடத்தையும், எட்டில் இருக்கும்போது நேரிடையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும், இரண்டில் இருந்தால் எட்டாமிடத்தையும் பார்த்துக் கெடுப்பார் என்பதாலும் இது தோஷம் எனச் சொல்லப்பட்டது.

மேலும் எந்த தோஷமாக இருந்தாலும் பெண் ஜாதகத்திற்கே பார்க்க வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லும் நற்பண்பு மிக அவசியம்.

ஒரு குடும்பத்தை நல்வழிப்படுத்தும் கடமை, மனப்பக்குவம் வேண்டும். அதே போல் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் ஒரே ஒரு முறை மட்டுமே ஏற வேண்டும் என்பதே நமது பாரம்பரியம். ஒரு முறை மட்டும் அமையும் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதால் முன்னோர்கள் பெண்ணின் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவே தற்காலத்தில் ஆணுக்கும் பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் இருவருடைய ஜாதகங்களில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இளைய சகோதரனைக் குறிக்கும்.

பெண் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும். பெண்ணுக்கு கிரகம் செவ்வாய் பாதிக்கப்பட்டால் திருமண வாழ்வு மன சங்கடத்தை தரும். ஆணுடைய ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்படைந்தால் உடன் பிறந்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். மனைவிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் செவ்வாய் தோஷத்தை கவனமுடன் ஆய்வு செய்வது நல்லது.

மேலும் முற்காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகித்து வந்ததால் ஆண்களின் துணை தேவைப்பட்டதால் கணவரை அனுசரித்து வாழ்ந்தார்கள். தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம்பாதிப்பதால் கணவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கட்டான சூழலில் தனியாக வாழத் துணிந்து விடுகிறார்கள் என்பதால் தற்காலத்தில் ஆணின் ஜாதகத் திலும் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத் துவம் கொடுத்து திருமணம் நடத்த வேண்டிய நிலைக்கு சமுதாயம் உந்தப்பட்டு விட்டது. அத்துடன் செவ்வாய் தோஷம் அனைவருக்கும் பாதிப்பை தராது.

1, 2, 4, 7, 8, 12 ஆகிய பாவங்களில் நிற்கும் செவ்வாயின் நிலை என்ன? அவர் லக்ன ரீதியான சுபரா அல்லது பாவியா? சுபபலன் தருவாரா அல்லது அசுப பலன் தருவாரா? செவ்வாயுடன் இணைந்த கிரகம், பார்த்த கிரகம், நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடும். செவ்வாய் தசை எப்பொழுது வருகிறது போன்ற பல்வேறு காரணிகளை சரி பார்த்தே செவ்வாய் தோஷ பலனை தீர்மானிக்க வேண்டும் என்பதால் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டியது இல்லை. செவ்வாய் 90 சதவீதம்ஜாதகத்தினருக்கு நன்மையே செய்வார். 10 சதவீதம் ஜாதகமே செவ்வாய் தோஷத்தால் பாதிப்பை சந்திக்கும். தோஷத்தை ஏற்படுத்தும் பாவகங்களில் செவ்வாய் இருந்தாலும் சில விதி விலக்குகளும் உண்டு.

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய் பாதிப்பை ஏற்படுத்தாது. உச்சம் பெற்ற செவ்வாய் மிதுன, கும்ப லக்னத்திற்கு மட்டும் தோஷமாகும். கடகம் செவ்வாயின் நீச வீடு. நீசம் பெற்ற செவ்வாய்க்கு வலிமை குறைவதால் தோஷமில்லை. நீசம் பங்கமானால் தோஷமாகும்.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு லகன ரீதியான சுப கிரகம் என்பதால் செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது. செவ்வாய் லக்ன சுபரின் சாரம் பெற்றால் தோஷமாகாது செவ்வாய்க்கு குருவின் சம்பந்தம், பார்வை இருந்தால் பாதிப்பு இருக்காது.

சனி, ராகு/கேதுக்களுடன் செவ்வாய் இணையும் போது செவ்வாய் தோஷ வீரியம் சற்று அதிகமாகும். அஸ்தமன செவ்வாய்க்கு வலிமை இல்லை என்பதால் தோஷம் இல்லை. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் தோஷம் பாதிக்காது. மேலே கூறிய அனைத்து நிலைகளிலும் செவ்வாய் தோஷம் விலக்கு பெற்றாலும் அனுபவத்தில் செவ்வாய் தோஷம் 90 சதவீதம் நற்பலன்களையே வழங்குகிறது.

ஒருவருக்கு செவ்வாய் நல்ல யோகம் தரும் நிலையில் 3,6,8,12-ல் மறையாமல் இருந்தால் மட்டுமே ஒரு ஆணால் உற்சாகமாக அனைத்து செயல்களி லும் ஈடுபட முடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக் கும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவி னர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம், பொன்பொருள் சேர்க்கை, அரசு வழி ஆதாயம் கிடைக்கும். கால்நடை அபிவி ருத்தி விவசாயத்தில் மேன்மை உண்டாகும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் மறைவு பெற்றால் சொத்து சுகம் இருக்காது. இருந்தாலும் பயனற்று போகும். உறவுகள் பகையாகும்.

பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

You may also like

Translate »