ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), கர்மேந்திரியங்கள் (கை, கால், வாக்கு, பிறப்புறுப்பு, கழிவு உறுப்பு) மனம் என்னும் பதினொன்றையும் ஒன்றி ணைத்து கடவுளைக் குறித்து செய்யும் விரத வழிபாடு ஏகாதசி விரதம்.
ஏகாதசி என்ற சொல்லுக்கு ஸ்ரீமந்நாராயணருக்குரிய பதினோராவது நாள் என்பது பொருள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைபிடிப்பதால் முப்பத்து முக்கோடி ஏகாதசி என்றும் குறிப்பிடுவர்.
பலர் ஏகாதசி விரதத்தால் நன்மை பெற்றுள்ளனர். எட்டு வயது முதல் தொடங்கி எண்பது வயது வரை ஏகாதசி விர தம் மேற்கொள்ளலாம். உடல் மட்டுமின்றி உள்ளமும் இதனால் நன்மை பெறுகிறது. செரிமான உறுப்புகளுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வு கிடைப்பதால் வயிறு சுத்தமாகிறது என்ற உண்மையை உணர்ந்தே மக்கள் விரதம் இருக்கின்றனர்.
தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை இவ்விரதம் அளிக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், பண்டரிபுரம் விட்டலன், குரு வாயூர் அப்பன், துவாரகை கிருஷ்ணர் கோவில்களில் ஏகாதசிக்கு குவியும் பக்தர்களின் எண்ணிக்கையை அளவிட முடியாது. ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மூன்று மிகவும் சிறப்புமிக்கவை.
ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத உத்தான ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி. இந்த நாட்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இதிலும் வைகுண்டஏகாதசியே மிக விசேஷம்.
ஓராண்டின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை வைகுண்ட ஏகாத சியன்று விரதமிருந்தால் பெற முடியும் என்கிறது விஷ்ணு புராணம். சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இய லாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். அன்று அதிகாலையில் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும். அதிலும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கத்தில் தரிசிப்பது மிகச்சிறப்பு.
பூலோகத்தில் முதன் முதலில் சொர்க்க வாசல் திறந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான புராண நிகழ்வு என்னவென்றால், தேவர்களுக்கு இடையூறு செய்த அசு ரர்களான மது, கைடபரை அழிக்க முற்பட்டார் மகா விஷ்ணு. ஆனால் அவர்கள் சரணடைந்தனர். காரணம் இருவரும் விஷ்ணுவின் காதில் இருந்து தோன்றியவர்கள். தங்களின் அருட்சக்தியால் உருவான எங்களை கொல்லாமல், என்றென்றும் வைகுண்டத்தில் தங்கியிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என வேண்டினர்.
விஷ்ணுவும் சம்மதித்தார். மேலும் அவரிடம், சுவாமி, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீரங்கத்தின் வடக்கு வாசல் வழியே தாங்கள் எழுந்தருளும் போது தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் பாவம் நீங்கி முக்தி இன்பத்தை அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என வைகுண்ட ஏகாதசி திருவிழா 21 நாட்கள் கொண்டாடப்படும். ஸ்ரீரங்கத்தில் தினமும் காலை 9.15 மணி முதல் பகல் 1 மணி வரை பாசுரங்களை அபிநயத்துடன் ஆடிப்பாடும் அரையர் சேவையுடன் நம்பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம். பகல்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.
அடுத்தநாள் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். பரமபத வாசல் என்றும் பெயர் கொண்ட இதனைக் கடக்க அதிகாலை 3.45 மணிக்கு ரத்தின அங்கியுடன் பெருமாள் கருவறையில் இருந்து கோலாகலமாகப் புறப்படுவார்.
நாழிகேட்டான் வாசல், கொடிமரம், ராஜமகேந்திரன் சுற்று வழியாக வந்து அதி காலை 5 மணிக்கு பரமபத வாசலைக் கடந்து அருள்பாலிப்பார்.
இதை தரிசிக்க கோவில் வளாகத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ரங்கா… ரங்கா… என திருநாமங்கள் முழங்கியபடி பெருமாளுடன் சொர்க்கவாசலைக் கடப்பர். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்கும்.
இதற்கு எப்படி விரதமிருக்க வேண்டும் எனத் தெரியுமா?
ஏகாதசிக்கு முதல் நாள் தசமியன்று பகல் ஒருவேளை உண்ண வேண்டும். ஏகாதசியன்று எதுவும் சாப்பிடக் கூடாது. மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்துக்குள் குளித்து, பெருமாளை வணங்கி, துளசி தீர்த்தம் குடித்து விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டபின் ஓய்வெடுக்க வேண்டும்.
தசமி துவங்கி விரதம் முடியும் வரை ஸ்தோத்திரங்கள், சகஸ்ரநாமம், நாராயண ஜபம் செய்ய வேண்டும். கோவில்களில் செய்வது இன்னும் சிறப்பு.
ஏகாதசியன்று தண்ணீர் குடிக்கலாம். துளசி இலை களை சாப்பிடலாம். முதியோர்கள், நோயாளிகள், பசி தாங்க இயலாதவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏகாதசியன்று சாப்பிட் டாலும், அதற்கு முன்னதாக பெருமாளை மனதார வழிபட்ட பின் சாப்பிடலாம் என்ற விதிவிலக்கும் உண்டு.
விரதமிருக்க வாய்ப்பில்லா தவர்கள் பெருமாளுக்கு படைக்கப்பட்ட பழம், பால் சாப்பிடலாம். பகல் பொழுதில் கோவிலில் அல்லது வீட்டு பூஜையறையில் இருந்தபடி விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் பாடலாம். மற்றவர்கள் கோவிந்தா… நாராயணா… என்ற திருநாமங்களை மட்டுமே ஜபித்த நிலையில் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.
நாமும் வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு, பாவம் நீங்கி பலன் பெறுவோம்.