மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இத்தலத்திற்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரபுரி, அம்பிகாபுரி என்ற பெயர்களும் உண்டு. இறைவனின் திருவிளையாடல்படி வேர்வைத் துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன் வேலுடன் தோன்றி சிவபெருமானை வணங்கினார். அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது. அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார்.
அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் கேட்க கூறினார். அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார்.
சிவபெருமானும் அங்காரகனுக்கு “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” என வரம் அளித்தார். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் மூலவர் சன்னதி கிழக்குக் கோபுர வாசலில் நுழைந்தவுடன் தண்டாயுதபாணி சன்னதிக்குத் தெற்கில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. நான்கு கைகளில் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கிய கையுடன் காட்சியளிக்கிறார். அங்காரகன் உற்சவர் ஸ்ரீ வைத்தியநாதர் மூலவர் சன்னதிக்குத் தெற்கில் வெள்ளிமஞ்சத்தில் காட்சியளிக்கிறார்.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் தோஷம் நீங்கும். இங்கு விற்கப்படும் வைத்தியநாதர் மருந்து என்ற திருச்சாந்துருண்டையை வாங்கி உண்டால் நோய்கள் நீங்கும்.
அர்ச்சனைத் தட்டுடன் வெல்லம் மற்றும் உப்பும், மிளகும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வெல்லத்தை உள்ளே உள்ள (தீர்த்தத்தில்) குளத்தில் கரைத்து விட வேண்டும், உப்பை தையல் நாயகி சந்நிதி எதிரில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும். மிகச் சிறிய அளவு உப்பு மற்றும் மிளகை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டு மென்று தின்பதும் வழக்கம்.
கீழசந்நிதி நுழைவாயிலில் வேப்ப மரத்தடியில் ஆதிவைத்திய நாதர் காட்சியளிக்கிறார். இந்த மரத்தினை மூன்று முறை வலம் வந்து பணிந்து அவ்விடம் அமர்ந்து தியானித்தால் சகல நலன்களும் கிடைக்கும். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.
இத்தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாகக் கூறப்படுகிறது.