உலகம் தோன்றிய போது முதலில் எழுந்த ஓசைக்கு ‘ஓம்’ என்று பெயர். இந்த ஓம்கார ஒலியில் இருந்துதான் வேதங்கள் தோன்றின. மந்திரங்கள் அனைத்துக்கும் ஓம்கார ஒலியே பிரதானம். அதில் இருந்து வாக்கு பிறந்தது. அதுவே மனிதர்களின் பேசும் மொழிகளாக பரந்து விரிந்தது. வாக்குக்கு அதிபதியாக இருப்பவர், சரஸ்வதி தேவி. இவர் பல ஆலயங்களில் பெண் தெய்வங்களின் பெயர்களின் வீற்றிருக்கிறார். அவற்றில் சில ஆலயங்களைப் பார்ப்போம்.
பிரம்ம வித்யாம்பிகை
திருவெண்காடு தலத்தில் மூலவராக சுவேதாரண்யேஸ்வரர் இருக்கிறார். அம்பாளாக, பிரம்ம வித்யாம்பிகை அருள்கிறாள். இந்த அம்மன், சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். இவருக்கும் இங்கே சன்னிதி உள்ளது. கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றும் இந்த ஆலயம், சீர்காழியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கல்விக்கு அன்னை
திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு. இங்கு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மண்டூக மகரிஷி, தவம் இருந்த இடம் இது. இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜையுடன், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதனம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்வது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதிதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
ஞான சரஸ்வதி
திருச்சிராப்பள்ளி புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில் பிட்சாடனர் கோவில் உள்ளது. பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த இடம். அப்போது பெருமாள் தோன்றி, அங்கேயே இருக்க அனுமதி அளித்ததுடன், தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் உன்னைக் காண இங்கே வருவார்கள் என்று ஆசீர்வதித்து, தன் அருகில் வைத்துக் கொண்டார். இங்கு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தனியாக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுவதுடன், அவளது கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச் சுவடியோடும், ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.
கலைவாணி
வாணியம்பாடியில் பெரியநாயகி உடனாய அதிதீஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு முறை பிரம்மனின் சாபத்தால் பேச்சை இழந்த கலைமகள், இந்த ஆலயத்தில் உள்ள ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றாள். கலைவாணிக்கு அருள்செய்த ஈசன், அவளை வீணை மீட்டி பாடும்படி பணித்தார். இதனாலேயே இந்த ஊர் ‘வாணியம்பாடி’ என்று பெயர் பெற்றது. கோவிலின் முகப்பிலேயே சிவன், பார்வதியை கலைவாணி வழிபடும் சுதை சிற்பம் உள்ளது. தனிச் சன்னிதியில் வீணை மீட்டும் வாணி அருள் செய்கிறாள்.
மாதங்கி தேவி
சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதி அம்சமான ராஜமாதங்கி அருள்பாலித்து வருகிறாள். கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள், சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ராஜமாதங்கி தேவி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள், அறிவு வடிவமாக நின்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.
பிரம்மனுடன்
சென்னை வண்டலூரை அடுத்த கேளம்பாக்கம் அருகில் ரத்தினமங்கலம் கிராமத்தில் லட்சுமி குபேரர் கோவிலின் கன்னி மூலையில் சரஸ்வதி உடனாய பிரம்மாவுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது. இந்த தேவிக்கு மஞ்சள் காப்பு சாத்தி வழிபட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டு வருபவர்களது தலை எழுத்து மாறும் என்பது பக்தர்களது நம்பிக்கையாகும். மேலும், மாணவ – மாணவியர்கள் அந்த மஞ்சளை அணிந்து கொண்டால், கல்வி மற்றும் ஞாபக சக்தி பெருகும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கம்பர் வழிபட்ட சரஸ்வதி
காஞ்சிபுரம் அருகே தாங்கி கிராமத்தில் சரஸ்வதி தனி ஆலயத்தில் அருளாசி வழங்கி வருகிறாள். சரஸ்வதியின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட கம்பர், ஓரடி உயரம் கொண்ட சரஸ்வதி தேவி சிலையை தாம் செல்லும் ஊர்கள்தோறும் எடுத்துச் செல்வார். ஒருசமயம் காஞ்சியிலிருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும்போது, காஞ்சி – வாலாஜாபாத் சாலையில் உள்ள தாங்கி கிராமத்தில் வழிப்போக்கர் மண்டபத்தில் தங்கினார். அச்சமயம் அன்னை சரஸ்வதிக்கு திருக்கோவில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கம்பர் எண்ணியதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆண்டுகள் பல ஆனபிறகு, கம்பரின் ஆழ்ந்த பக்தியின் காரணமாக, தாங்கி கிராமம் வழித்துணை விநாயகர் ஆலயத்தில் சரஸ்வதி சிலை புதைபொருளாகக் கிடைத்தது. இந்த அன்னைக்கு விநாயகர் ஆலயம் அருகிலேயே தனிக்கோவில் கட்டப்பட்டது.
ஞானவாணி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது, திருக்கண்டியூர். இங்கு பிரம்மனுக்கு தனிச் சன்னிதி உண்டு. இங்கு சரஸ்வதி தேவி, தனது கணவரோடு நான்கு கரங்களுடன் கல்வியும், ஞானமும் வழங்கும் ஞானவாணியாக வீற்றிருக்கிறாள்.இந்தக் கோவிலுக்கு எதிரில் ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயம் உள்ளது. பிரம்மாவின் தலையைக் கொய்ததால், ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள் அகற்றியதாக ஐதீகம். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.