Home அஷ்டமி வழிபாடு 🌹🌹சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?

🌹🌹சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?

by admin


🌹🌹சாபத்திற்கும்.., தோசத்திற்கும் என்ன வித்தியாசம்…!
சாப நிவர்த்க்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறோம். பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

🌹சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

1) பெண் சாபம் 2) பிரேத சாபம் 3) பிரம்ம சாபம் 4) சர்ப்ப சாபம் 5) பித்ரு சாபம் 6) கோ சாபம் 7) பூமி சாபம் 8) கங்கா சாபம் 9) விருட்ச சாபம் 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம் 13) குலதெய்வ சாபம்.

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

🌹1) பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

🌹2) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

🌹3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

🌹4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

🌹5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பவைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

🌹6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

🌹7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

🌹8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

🌹9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

🌹10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

🌹11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

🌹12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

🌹13) குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும். சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும்.

🌹எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.

——+——+——+——-+——-

🌹🌹சாபம் என்றால் என்ன தோஷம் என்றால் என்ன?

🌹தோஷம் என்பது ஒரு பாவகாரியத்தை ஒருவர் அறிந்தோ அறியாமலோ செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதன் மூலம் இயற்கையாக ஏற்படும் எதிர்வினை தான் தோஷம். தோஷத்தை போக்கிக்கொள்வது சுலபம்.

🌹ஆனால், சாபத்தின் தன்மையே வேறு… ஒரு பாவகாரியத்தை ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களை வேதனையுடனோ கண்ணீருடனோ சபிப்பது தான் சாபம். சாபத்தை போக்கிக்கொள்வது அத்தனை சுலபமல்ல. காரணம் தீங்கிழைக்கப்பட்டவர்கள் மன்னித்தாலொழிய சம்பந்தப்பட்டவர்களுக்கு விமோசனம் கிடைப்பது மிகவும் கடினம்.

🌹அகங்காரத்தின் காரணமாக ஒருவருக்கு ஒரு தீமையை ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரும் துன்பப்பட்டு மனதளவில் சபித்துவிடுகிறார். பாதிக்கப்பட்டவரின் தகுதிக்கு ஏற்ப அந்த சாபம் ஒரு கட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இந்த நேரம் தவறு செய்தவர், தான் செய்த தவறுக்கு இன்னாருக்கு இழைத்த அநீதிக்கு வருந்தி, திருந்தி, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்… சாபத்தின் கடுமை ஓரளவோ முற்றிலுமாகவோ நீங்க வாய்ப்புண்டு.

🌹இங்கே தான் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தவறு செய்தவரும் தவறு இழைக்கப்பட்டவரும் இன்ன இன்னார் தான் என்று தெரிந்திருக்கும்போதோ அவர்கள் மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதோ இது சாத்தியப்படும். அதாவது சாப நிவர்த்திக்கு வழி உண்டு. ஆனால், ஜென்ம ஜென்மமாக சில சாபங்கள் தொடர்ந்து வரும். அதற்கு எங்கே போய் யாரிடம் மன்னிப்பு கேட்பது?

🌹 ஜென்மாவில் பசுவையும் கன்றையும் பிரித்துவிட்ட பாவத்தை ஒருவர் செய்கிறார் என்றால் இந்த ஜென்மத்தில் அவர் எப்படி சாப நிவர்த்தி பெறுவது? சம்பந்தப்பட்ட பசுவை கடந்த காலத்தில் / போன ஜென்மத்தில் போய் தேடமுடியுமா? (இத்தகையோர் இந்த பிறவியில் கோ-சம்ரட்சணம் செய்தால் ஓரளவு ஊழின் கடுமை குறையலாம். ஆனால், முற்றிலும் நீங்கிவிடாது).

🌹அதே போல, போன ஜென்மத்தில் ஒரு ஸ்திரீக்கு ஒருவர் துரோகம் அல்லது துன்பம் இழைத்துவிடுகிறார். (பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை அவமதிப்பது, அவள் நடத்தையை குற்றம் சொல்வது போன்றவற்றால்) அப்பெண்ணும் கண்ணீர் சிந்துகிறார். அவர் சபிக்கிறார் அல்லது சபிக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனாலும் பெண்கள் கண்ணீர் சிந்தினாலே ஸ்திரீ சாபம் கண்டிப்பாக பற்றிக்கொள்ளும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஜென்மத்தில் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பர். அப்போது அவருக்கு “ஒரு வேளை போன ஜென்மத்தில் நான் ஏதோ ஒரு பெண்ணுக்கோ அல்லது பல பெண்களுக்கோ தீங்கிழைத்திருப்பேனோ??” என்கிற சந்தேகம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம்… ஜோதிடர் பல பரிகாரங்களை கூறுகிறார் என்றாலும், சம்பந்தப்பட்ட பெண் மன்னிக்காதவரை இவரை அந்த சாபம் விடாது. உண்மை அப்படியிருக்க, போன ஜென்மாவில் தான் தீங்கிழைத்தவரை இந்த ஜென்மத்தில் எப்படி சந்தித்து விமோசனம் கோருவது?

🌹(ரிஷிகளின் சாபத்தை பொறுத்தவரை, கோபம் தணிந்தவுடன் அவர்களே அதற்கு பரிகாரமும் கூறிவிடுவார்கள்! அம்பிகை கொடுத்த மாலையை துர்வாசர் இந்திரனிடம் கொடுக்க, அவன் அதை அவமதிக்க, சீறிஎழுந்த துர்வாசர் தேவர்கள் அனைவரையும் அரக்கர்களாக மாறும்படி சபித்துவிடுகிறார். சினந்தணிந்து அவர் கூறும் பரிகாரம் தான் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெற்று அதை அருந்தவேண்டும் என்பது. அகலிகை சாப விமோசனமும் இப்படித்தான். இப்படி ரிஷிகளை பொறுத்தவரை அவர்களே பரிகாரங்களையும் கூறிவிடுவர். ஆனால் அது அவர்கள் காலத்தில். இப்போது?)

🌹கலியுகத்தில் தற்போதைய காலகட்டங்களில் ஒரே வழி – பாவமன்னிப்பு, சாப நிவர்த்தி கேட்டு சிவ வழிபாடு / சிவ தரிசனம் செய்வது தான்.

🌹தீர்த்துக்கொள்ள இயலாத சாபங்கள் அனைத்தையும் சிவபூஜை மற்றும் சிவவழிபாடு செய்து தான் தீர்த்துக்கொள்ளமுடியும். ஏன், சிவ வழிபாடு என்று குறிப்பிட்டு சொல்கிறோம் என்றால், தெய்வங்களே தங்கள் சாபங்களை ஈசனை பூஜித்து தான் தீர்த்துக்கொள்கின்றன.

🌹உங்கள் கடந்த கால தவறுகளுக்கு பாவங்களுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு, இனி மனதால் கூட எந்தப் பாவத்தையும் செய்யமாட்டேன், பிறருக்கு துன்பம் இழைக்க மாட்டேன் என்று இறைவனிடம் உறுதி கூற வேண்டும். அப்போது தான் உங்கள் கோரிக்கை பரிசீலனைக்கே ஏற்றுக்கொள்ளப்படும்.

🌹கடந்த கால தவறுகளுக்கு வருந்தி மன்னிப்பு கோருவது என்பது ஒரு வகையில் பாத்திரத்தில் உள்ள ஓட்டையை அடைப்பது போன்றது. இதைச் செய்யாமல் நீங்கள் என்ன தான் பரிகாரம் / புண்ணியம் / வழிபாடு செய்தாலும் அதனால் பயனில்லை.

🌹இவற்றையெல்லாம் கடைப்பிடித்து அதன் பயனாக இறைவன் உங்கள் பக்தியை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கு உள்ள சாபத்தை எப்படியோ ஈடு செய்து தருவார். அப்போது தானாக சாப நிவர்த்தி பெறுவீர்கள். சிவவழிபாடு, சிவ தரிசனம் தீர்க்காத பாவங்களோ சாபங்களோ தோஷங்களோ இல்லை எனலாம்.

🌹எனவே தொடர்ந்து இயன்றபோதெல்லாம் சிவதரிசனம் செய்து, பிரசித்தி பெற்ற தொன்மையான சிவாலயங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து, தேவாரத் திருமுறைகளை படித்து வந்தால் எப்பேற்ப்பட்ட சாபமும் நிவர்த்தியாகும். எப்படியென்றால் சிவ வழிபாடு உங்களை உங்களது குணத்தை, செயல்பாடுகளை, சிந்தனையை முற்றிலும் மாற்றிவிடும். மாற்றம் உங்களிடமே ஏற்பட்ட பிறகு, மற்றது எல்லாம் எளிதானது தானே?

🌹ஏற்கனவே பரிகாரத் தலங்கள் பற்றிய பதிவில், பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் திருவிடைமருதூர் பற்றி குறிப்பிட்டிருந்தோம். திருவிடைமருதூர் மஹா லிங்கேஸ்வரர் பாண்டியனுக்கு மட்டும் வழிகாட்டவில்லை. நமக்கும் சேர்த்துத் தான். எனவே பிரம்ம ஹத்தி, கோ-ஹத்தி, சிசு ஹத்தி (கருக்கலைப்பு), நதி ஹத்தி, சமுத்திர ஹத்தி உள்ளிட்ட ஜல ஹத்தி, விருக்ஷ ஹத்தி, (மரத்தை வெட்டுதல்) சர்ப்ப ஹத்தி (பாம்பை அடித்தல்) போன்றவற்றால் ஏற்படும் சாபத்திற்கு தோஷத்திற்கு திருவிடைமருதூர் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🌹திருவிடைமருதூர் மட்டுமல்ல, தொன்மையான சிவாலயங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள் அனைத்துமே ஒரு வகையில் தரிசிப்போருக்கு சாப நிவர்த்தியும் தோஷ நிவர்த்தியும் அளிக்க வல்லவையே. எனவே உடலில் தெம்பும், புத்தி நன்றாகவும் இருக்கும்போதே சிவ வழிபாடும் சிவ தரிசனமும் செய்து உய்வு பெறவேண்டும்.

சிவாய நம..🙏🙏

🙏🙏நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை..!🙏🙏

🌹🌹

You may also like

Translate »