காசி, முக்தித்தலம் என்று வணங்கப்படுகிறது. உத்தர பிரதேசத்திலுள்ள இந்தத்தலம் மிகவும் பழமையானது. இத்தலத்தை பனாரஸ், வாரணாசி என்றும் அழைப்பர்.
இங்கு அருள்புரியும் விஸ்வநாதர் பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒருவர்.
விசாலாட்சி தேவி ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒன்று. அம்மையும் அப்பனும் அருளாட்சி புரியும் இப்பீடத்தில் தங்கள் உயிர் பிரிவதை பக்தர்கள் பெரும் பாக்யமாகக் கருதுகின்றனர்.
சிவனின் மாமனாரான தட்சன், செய்த யாகத்திற்குச் சென்ற பராசக்தியான தாஷாயணி, அங்கு தானும் சிவனும் அவமதிக்கப்பட்டதால் மனம் வருந்திய சக்தி அங்கு இருந்த யாககுண்டத்தில் விழுந்து உயிர் துறந்தார்.
இதனை கண்ட சிவன் நெற்றிக்கண்ணை திறந்து வீரபத்திரரையும், பார்வதியின் கோபத்தி்னால் பத்திரகாளியையும் உருவாக்கி தட்சனின் தலையை கொய்து ஒரு ஆட்டின் தலையை வைத்து, அடங்காச் சினத்திடன் தனது தேவியின் இறந்த உடலை எடுத்துச் சிரசின் மேலே வைத்து அண்ட சராசரங்களும் அதிரும்படி சுழன்று ஆவேசமாக நடனம் ஆடினார்.
உலக அழிவு நெருங்கி விட்டதோ என உலகமக்களும் பிரம்மா,திருமால் முதல் அனைவரும் அஞ்சி. நடுங்கினார்கள். இதனைப் பார்த்த திருமால் தமது சக்கராயுதத்தை ஏவிப் பராசக்தியின் உடலைத் துண்டுகளாக்கி இந்த பூமியில் விழச் செய்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அம்மனின் உடற்பாகங்கள் விழுந்தன, அவைகள் தான் 51 சக்தி பீடங்களாக திகழ்கின்றன.
சக்திபீட நாயகியான அன்னை விசாலாட்சி ஆன்மா பிரியும் தருணத்தில் உள்ளவர்களை தன் மடிமீது கிடத்தி முந்தானையால் விசிறி விடுவதாகவும், விஸ்வநாதர் அவர்கள் காதில் ஸ்ரீராமநாமத்தை உபதேசிப்பதாகவுமான நம்பிக்கை.
எண்ணற்ற ஆலயங்களைக் கொண்ட இங்கு டுண்டி கணபதி, விஸ்வநாதர், மாதவர், தண்டபாணி, காசி, குகா, கங்கா, அன்னபூரணி, கேதாரேஸ்வரர், நவதுர்க்கா ஆலயங்கள் புகழ் பெற்றவை.
இந்த மகத்தான சக்திபீடமாம் காசியில் நவராத்திரி நாட்களில் நவதுர்க்கா வடிவில் தோன்றுகிறாள் தேவி. அப்போது தன்னை வேண்டுவோர்க்கு வேண்டியதை வேண்டியவாறே அருள்கிறாள். இங்கு உருவேற்றப்படும் மந்திரங்கள் அனைத்தும் சித்தியைத் தரவல்லது.
முக்தித் தலமான காசியில் பக்தர்களுக்கு அருள் செய்ய அழகுடன் மணிகர்ணிகா பீடத்தில் அமர்ந்தவள். எல்லாத் திசைகளில் உள்ளோரும் போற்ற ஒருமித்த உள்ளத்தோடு சத்திய சாதனையை விளக்க சாந்த வடிவத்தோடு காட்சி தருபவள். எட்டுத் திக்குகளில் உள்ளோராலும் போற்றி வணங்கப்படுபவள் இந்த விசாலாட்சி தேவி.
சக்திபீடமாகத் திகழ்கின்ற அன்னை விசாலாட்சி திருக்கோயில், தென்னிந்திய கோயிற் பாணியில் அமைந்துள்ளது. தன்னை அன்புடன் வணங்கி வழிபட வருவோரின் விசனங்களையெல்லாம் போக்கி, வேண்டுவனவற்றை அருளும் திருநோக்குடன் எழுந்தருளியுள்ளாள், அன்னை விசாலாட்சி.
இந்த சக்தி பீடத்தில் கங்கை கரையோரத்தில் நீராடுவதற்கென்றே 64 படித்துறைகள் தீர்த்தக் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன. *மணிகர்ணிகா காட் என்ற படித்துறையில் அன்னை அருட்பாலிப்பதால் இது மணிகர்ணிகா பீடம் என வணங்கப்படுகிறது.*
இங்கு நெளிந்தோடும் கங்கையில் நீராடும் பேறு பெற்றவர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றவர்களாக உணர்கின்றனர். காசியின் தென்பகுதியில் அசி நதியும் வடபகுதியில் வருணா நதியும் எல்லைபோல் அமைந்து கங்கையில் கலக்கின்றன.
இந்தத் தலத்தில் நியமத்துடன் மூன்று நாட்கள் வசிப்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் . எனவே கங்கா ஸ்நானம் உயர்ந்தது என மகான்களும் புராணங்களும் பகர்கின்றன.
*அக்ஷர சக்தி பீடங்கள்*
தேவியின் இடுப்பெலும்பு விழுந்த இடம். அக்ஷரத்தின் நாமம் 4. அக்ஷரசக்தியின் நாமம் தத்யாதேவி எனும் அமலாதேவி. பச்சை நிற திருமேனியுடன், சாரிகா, கமலமலர், வரத அபய முத்திரைகள் கொண்ட நான்கு திருக்கரங்கள். ஒரு திருமுகம். ரிஷபவாகனம். பீட சக்தியின் நாமம் தேவகர்ப்பம். இப்பீடத்தை கங்காளர் எனும் பைரவர் காவல்புரிகிறார்.