பாடல்:-
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட்டார்க்கே.
விளக்கம்:-
சிவபெருமானின் திருவடியை இறுக்கமாக பிடித்திருக்கும், உண்மையான பக்தர்களின் உள்ளம் எதற்கும் அஞ்சுவது கிடையாது. எமதர்மன் கூட அவர்களை ஒன்றும் செய்ய மாட்டான். துன்பமும், இரவும், பகலும் சிவனருள் பெற்றவர்களுக்கு இல்லை. இனி அடைய வேண்டும் என்ற எந்த பயன்களும் அவர்களுக்கு இருக்காது. பற்றுவிட்ட ஞானிகள், அனைத்தையும் பெற்றவராக இருப்பர்.
பாடல்:-
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.
விளக்கம்:-
உலக வாழ்வில் தீய நெறிகளில் சென்று, அதனால் துன்பங்களைப் பெற்று அழுகின்றவர்களானாலும், தன் பண்புகளில் இருந்து நீங்கியவர்களானாலும், அவர்கள் அனைவரும் கடவுளை நினைத்து அருந்தவ நெறியில் ஈடுபடத் தொடங்கினால், இறைவனும் அவர்கள் வருந்தாத வண்ணம், அவர்களுடைய துன்பங்களை நீக்கி பாதுகாத்து, மீண்டும் பிறவி ஏற்படாதவாறு பெருந்தன்மையோடு அருள் செய்வான்.
பாடல்:-
கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல் சேரப்பெற்றேன் நெடுமால் அறியா
அழல் சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல் சேரும் இன்னுயிர்க் கூடும் குலைத்ததே.
விளக்கம்:-
இறைவனின் தாமரைத் திருவடி நிழலில் சேர்ந்தேன். அதன் காரணமாக, திருமாலால் அறிய முடியாதபடிக்கு நெருப்பு வடிவமாக உயர்ந்து நின்ற அந்தச் சிவபெருமான், தன்னுடைய உடலில் பாதியைக் கொண்டிருக்கும் அம்பாளோடு சேர்ந்து வந்து, எனக்கு அருள் செய்தான். எனவே இனி இந்த உடம்பு, பிறவி எடுக்கும் நிலையில் இருந்து நீங்கிவிட்டது.
பாடல்:-
அறிந்து உணர்ந்தேன் இவ்வகலிடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதித் திருவருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இப்பிறவியை நானே.
விளக்கம்:-
இறைவனின் அருளால், இந்த உலகத்தின் உண்மை முழுவதும் அறிந்தேன். இறையருளோடு நன்றி உணர்ந்து, இறைவனின் திருப்பெயரை ஓதி, அவனது அன்புக்கு இலக்கானேன். இறையருளை நினைக்காத அறிவற்றவர்களின் வாழ்வை நான் மறந்தேன். அதனால் இந்தப் பிறவித் துயர் தொடராத வகையில் அந்தப் பிணைப்பில் இருந்து நீங்கப்பெற்றேன்.