Home ஆன்மீக செய்திகள் கும்பாபிஷேகம் ஏன்? எதற்கு? எப்படி நடத்தப்படுகின்றது?

கும்பாபிஷேகம் ஏன்? எதற்கு? எப்படி நடத்தப்படுகின்றது?

by admin
கும்பாபிஷேகம்-கும்பாபிஷேகம் ஏன்? எதற்கு? எப்படி நடத்தப்படுகின்றது?

கும்பாபிஷேகம்…!!

இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். ஆனால் புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா… என்றால் நிச்சயமாக இல்லை.

அது எப்போது முழுமை பெறும் என்றால் ஆலயத்தில், ‘கும்பாபிஷேகம்” நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.

கும்பம் என்றால் ‘நிறைத்தல்” என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்களின் மூலம் இறைசக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம்.

இதனை சைவர்கள் ‘மகா கும்பாபிஷேகம்” என்றும், வைணவர்கள் ‘மகா சம்ப்ரோக்ஷணம்” என்றும் அழைக்கிறார்கள்.

கும்பாபிஷேகம் எப்படி நடத்தப்படுகின்றது?

ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்கு தான் குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம். இதன் மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது.

குடத்தில் நீர் நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து, மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும், கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த மந்திரங்களின் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன.

பெரும்பாலும் கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இதன் காரணம் நாம் கும்பாபிஷேகம் செய்யும்போது சாற்றப்பட்ட அஷ்டபந்தனமானது 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும். மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.

கும்பாபிஷேகம் எத்தனை வகைப்படும்?

குடமுழுக்கு செய்ய நான்கு வகைகள் உள்ளன. அவை

‘ஆவர்த்தம்” – புதிய கோவிலில் இறைவனின் திருவுருவத்தை அமைப்பது.

‘அனாவர்த்தம்” – இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த கோவில்களை புதுப்பித்து, மறு பிரதிஷ்டை செய்வது.

‘புனராவர்த்தம்” – காலத்தால் சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து புனர் நிர்மாணம் செய்வது.

‘அந்தரிதம்” – மனிதர்களின் செயல்களால் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணியைச் செய்வது.

யாக குண்டத்தின் வகைகள்:

ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைப்பது

பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைப்பது

நவாக்னி – ஒன்பது குண்டம் அமைப்பது

உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைப்பது

பலன்கள் :

கும்பாபிஷேக தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபட்டால், முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசி நமக்கு கிட்டும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டு நன்மைகளைப் பெறலாம்.

ஒரு கும்பாபிஷேகத்தை காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தை போக்கக்கூடியது.

🙏 கோபுர தரிசனம் கோடி புண்ணியம்…!! 🙏

You may also like

Translate »