ஆதிபராசக்தியிடம் இருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினார்கள் என்பது புராணக் கதையாக உள்ளது. ஆதிபராசக்திதான் சிவனின் சரிபாதியாக விளங்குகிறார். கன்னியாகுமரியில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து சிவனை திருமணம் செய்ய விரும்பினார் என்பது உள்ளிட்ட பல திருவிளையாடல்கள் உள்ளன. பார்வதியை பாகம்பிரியாள் என்றும் கூறுவார்கள். எவரும் பெண் துணையின்றி சாதிக்க முடியாது என்பதை உணர்த்தவே சிவசக்தி வடிவம் கொண்டனர். இல்லறமே நல்லறம் என்பதை உலகுக்கு உணர்த்துவதே சிவசக்தி தத்துவமாகும்.
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்ணின் சக்தி உண்டு .அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணின் சக்தி உண்டு. துறவறம் செல்பவர்களும் தங்கள் தாய் மீது பற்று கொண்டு இருப்பார்கள். தாய் பாசத்தை எவரும் துறக்க முடியாது. அண்ணாமலையார் வீதி உலா வரும்போது உண்ணாமலை அம்மனும் உடன்வருவார். சிவனை ஒரு கணமும் பிரியாதவள் சக்தி என்பதே உண்மை. சிவம் தனியாக இருந்தாலும் ,சக்தி தனியாக இருந்தாலும் அவர்களுக்குள் இன்னொரு சக்தியும் குடிகொண்டிருக்கும் என்பதை மறக்கலாகாது.
ஒருவரில் இன்னொருவரையும் காணலாம் என்பதற்கு இவர்களே சாட்சி. புராணக் கதைகளை தாண்டி சிவசக்தி ஒரு தம்பதியாகவே உலகை ஆட்சி புரிகின்றனர். தமிழகத்தில் சக்தி வழிபாடும் பிரசித்தி பெற்றது தெருக்கள் தோறும் மாரியம்மனாக சக்தியை வழிபட்டு வருகின்றனர். அண்ணாமலையாரை தரிசனம் செய்பவர்கள் உண்ணாமலை அம்மனையும் தரிசனம் செய்தால் தான் பரிபூரண நிலையை பெற முடியும். திருவண்ணாமலையில் அன்னதானம் அதிக அளவில் நடைபெற உண்ணாமலை அம்மன் அருளே காரணம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.