Home ஆன்மீக செய்திகள் கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

by admin
gomatha-donate-கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தினமும் கோபூஜை செய்பவன் மகா விஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவான். கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை தொகுத்து இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்…

(1) பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கால் நடைகளான பசுக்களே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது.

(2) நாட்டின் பொருளாதார துறையில் தனிச் செல்வாக்கு மாட்டுக்கு இருந்தது. ஆதலால் செல்வத்தை “மாடு” என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர்.

(3) “கேடில் விழுச்செல்வம் கல்வி” ஒருவருக்கு “மாடு” அல்ல மற்றயவை என்று செல்வத்தை மாடு என்னும் பொருள்பட வள்ளுவரும் உரைக்கின்றார்.

(4) பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். எருமையின் கர்பகாலம் 10 மாதம் 10 நாளாகும்.

(5) முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது உபய தோமுகி என்னும் பூஜை செய்து தான் பின் கட்டடம் கட்டுவார்கள். “உபய தோமுகி” என்பது ஒரு பசு ஆகும். அந்த பசு ஈனும் போது கன்றின் முன்னங்கால்களும் தலையும் தான் முதலில் வரும். கன்று போடும் காலத்தில் இவ்வாறு இரு பக்கமும் தலையுடைய பசுவை “உபய தோமுகி” என்று சொல்வார்கள். அப்பொழுது அந்த பசுவை வலம் வந்து வழிபட வேண்டும்.

(6) மாட்டின் வயிற்றில் இருந்து கன்று வெளிப்படும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியாக நினைத்து வணங்கியும், ஆசீர்வாதமும் செய்வார்கள். அப்பொழுது 3 முறை வலம் வந்து வணங்கி தங்களுக்கு என்ன பிரச்சினைகள் தீரவில்லையோ அது விரைவில் தீர்ந்து நல்ல வழி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் பயன் உறுதியாக விரைவில் கிடைக்கும்.

(7) கன்று ஈன்ற பசுக்களுக்கு தொடர்ந்து புல் புண்ணாக்கு தானியம் போன்றவற்றை அளித்து காலையில் வணங்கி வந்தால் கொடுத்த கடன் பிரச்சனையின்றி கிடைக்கும்.

(8) ஒருவருக்கு தீய கனவுகள் அடிக்கடி வந்து அவஸ்தைபட்டால் அதற்கு பரிகாரம் காலையில் பசுவின் தொழுவத்திற்கு சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும்.

(9) “கோ பூசை” செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.

(10) பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் போது அதாவது அந்திப் பொழுதில் அவற்றோடு சீதேவியும் வீட்டுக்கு வருவாளாம். எனவே வீடு திரும்பும் பசுக்களை நல்ல முறையில் வரவேற்க வேண்டும்.

(11) பலவித கிரக கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் தங்கள் பீடைகளிலிருந்து விடுபடுவதற்கு கோதானம் என்னும் பசுதானம் செய்து வழிபட்டால் நலம் பெறலாம்.

(12) ஒருமுறை திலீப மகாராஜனின் அசுவமேதக் குதிரையை தூக்கிச் சென்ற தேவேந்திரன் மாயையால் தன்னை மறைத்துக் கொண்டான். குதிரையை தேடிச்சென்ற மகாராஜன், கோசலத்தால் (கோமியம்) தன் கண்களைக் கழுவிக்கொள்ள, தேவேந்திரனின் மாயை அகன்றது. தேவேந்திரனிடமிருந்து அசுவமேதக் குதிரையை மகாராஜன் மீட்டு வந்தான்.

(13) சகல சவுபாக்கியத்தை அள்ளித்தரும் கோ பூஜையை ஒவ்வொரு வரும் ஆண்டுக்கு ஒருமுறை யாவது விதிப்படி செய்து வரவேண்டும்.

(14) அன்றாடம் செய்ய இயலாதவர்கள்கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம். அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.

(15) அன்னை புவனேஸ்வரி இப்பூலோகத்தில் வசிஷ்டர் ஆசிரமத்தில் தேவ பசுவாக இருந்த நந்தினியின் சொரூபமாக விளங்குகிறாள் என்று தேவி புராணங்கள் கூறுகின்றன.

(16) பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜ சக்ரவர்த்தி, தசரதச் சக்ரவர்த்தி போன்ற ராஜாதி ராஜாக்கள் எல்லோரும் பூசிக்கொண்டார்கள்.

(17) ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (தை மாதம் முதல் தேதி) இந்திர பூஜையுடன் சேர்த்து கோபூஜையைச் செய்து வருவது நல்லது.

(18( கோபூஜையை மூன்று அங்கங்களாக அதாவது விநாயகர் பூஜை, கோபூஜை, இந்திர பூஜை என்னும் நிலைகளில் செய்ய வேண்டும்.

(19) புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும்.

(20) பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதி நோக்கி பசுவின் பிருஷ்ட பாகம் இருக்கும்படி செய்து, பகவானும் மகாலட்சுமியைப் பார்த்துக் கொள்வது போல செய்கிறார்கள்.

(21) பசுவை அதிகாலையில் பார்ப்பதும், வணங்குவதும் புண்ணியமாகும்.

(22) வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.

(23) பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் காட்டக்கூடாது. பசு வழிப்பாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.

(24) நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை அடிமாடாக விற்காமல் நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசு மடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும். அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரிக்க வேண்டும்.

(25) பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணி (கோமயம்), நீர் ஆகியன நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான அளவு தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது.

(26) ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது. அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.

(27) பசு நெய் கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பில்லை. இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.

(28) பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை. பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது. இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க வேண்டும் என்பார்கள்.

(29) புதிதாக வாங்கும் மனையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக் கூடிய தீயவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது.

(30) ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை நுண்ணிய சக்தி வாய்ந்த மந்திர ஒலியால் உருவாக்குவதற்கு ஈடாக பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும் வழக்கமாக உள்ளது.

(31) பசு நீர் புற்று நோயைத் தீர்ப்பதில் ஒரு அருமருந்தாகும். அதோடு, பிறரின் தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீ ரை எண்ணை போல தேய்த்துக் கொள்வதும், அதிகம் கிடைப்பின் பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும்.

(32) காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், பசுவுக்கு ஒருபிடி புல் கொடுத்தால் மலடிக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். பொதுவாக பசுவுக்கு உணவு கொடுத்த பின்னரே, நாம் உண்ண வேண்டும்.

(33) பசுவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் புனித நீராடிய பலன் கிட்டும். கோதுளி பட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால் சிறந்த சன்னியாசியாகிய கைசிகன் சண்டாளனாகப் பிறந்தான். கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகராஜன் ரகுவைப் பெற்றான்.

(34) உயிரினங்களில் பசு மட்டுமே தனக்கென வாழாத, மிக உயர்ந்த பிறவியாகும். இது மனிதர்களுக்குப் பால் என்னும் சிறந்த சத்துப் பொருளை தருகிறது. மனிதன் உண்ட பின் அவன் கழிவாக எண்ணும் வைக்கோல், தவிடு முதலிவைகளை மட்டுமே ஏற்கும் உயர்ந்த பண்பினை உடையது.

(35) குணத்திலும் இதனைப் போன்ற சாந்த குணம் கொண்ட உயிரினங்கள் வேறு எதுவும் கிடையாது. இதன் சீரிய பண்பினை உணர்ந்தே நம் முன்னோர் தனக்கென வாழாது பிறருக்கென்ன வாழும் தியாகப் பண்புடைய பசுவை வணங்கி, அப்பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று அதனை வணங்கி, அத்தகு தியாகப் பண்பைப் பெற்றனர்.

(36) கோதானத்தைவிடச் சிறந்த தானம் எதுவும் கிடையாது. எனவேதான் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் கோதானம் செய்வதை நம் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. கோதானம் கொடுக்கும்போது பசுவின் வாலை உருவியே தானம் கொடுக்க வேண்டும்.

(37) காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தினமும் தரிசிப்பவன் துன்பங்கள் நீங்கி சுபத்தைப் பெறுகிறான்.

(38) தினமும் கோபூஜை செய்பவன் மகா விஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவான். பசுக்களுக்குத் தினமும் உணவு தருபவனுக்கு இறைவன் அவன் விரும்பிய வரங்களை அளிப்பான்.

(39) வாழ்வில் சிக்கல் நிம்மதி இல்லாதவர்கள் 5 முறை கோபூஜை செய்து அதற்கு உணவு தர துன்பமும் விலகி இன்பம் பிறக்கும்.

(40) பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது என்பதாகும்.

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

You may also like

Translate »