சைவ திருத்தலங்களில் களம் என்பதாய் முடியும் திருத்தலங்கள் மூன்று. அவை திருஅஞ்சைக்களம், திருநெடுங்களம், திருவேட்களம். இவற்றில் திருஅஞ்சைக்களம், கேரளாவின் கொடுங்கோளூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவத்தலங்களில் மலைநாட்டில் அமைந்த ஒரே தலம் இதுவே. இத்தல இறைவன் பெயர் அஞ்சை களத்தீசர். இறைவியின் திருநாமம் உமையம்மை என்பதாகும்.
அடுத்து திருநெடுங்களம், திருச்சி–தஞ்சை நெடுஞ்சாலையில் தூவாக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது காவிரியின் தென்கரை தலங்களில் ஒன்றாகும். இறைவன் நெடுங்களநாதர், இறைவி மங்கள நாயகி. வங்கியசோழன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம் இது.
மூன்றாவது திருவேட்களம். இது பூலோக கயிலாயம் எனப்படும் சிதம்பரத்திற்கு கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரை தலம். இறைவனின் திருநாமம் பாசுபதநாதர், இறைவியின் திருநாமம் நல்லநாயகி, சற்குணாம்பாள் என்பதாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.
மகாபாரதத்தில் துரியோதனன் ஏற்பாட்டின்படி, தருமன் சகுனியோடு பகடையாடினான். பகடை ஆட்டத்தில் தோற்றவர் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் (தலைமறைவு வாழ்க்கை) வாழவேண்டும் என்பது விதி. இதன்படி தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள் நாட்டிற்கு திரும்பி பங்கு கேட்பார்கள் என்பதால் அவர்களை போர் மூலமாக வீழ்த்த பல்வேறு தேசத்து அரசர்களையும், படைவீரர்களையும் துரியோதனன் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதுபற்றி பாண்டவர்களுக்கு வியாசர் தெரிவித்தார். பலம் பொருந்திய அவர்களது படைகளுடன் போரிட உங்களுக்கு தெய்வத்தின் அனுக்கிரகமும், பலமான அஸ்திரங்களும் தேவை என்பதையும் அவர் நினைவுறுத்தினார். விரைவாக படையை திரட்டும்படியும், தெய்வீக ஆற்றல் மிகுந்த அஸ்திரங்களை இறைவனிடம் கேட்டுப்பெறும் படியும் அறிவுறுத்தினார். இதற்கான ஆயத்தப்பணியில் பாண்டவர்கள் ஈடுபட்டனர்.
அர்ச்சுனன், தான் தவம் செய்ய தகுந்த இடம் தேடி அலைந்தான். அப்போது வயது முதிர்ந்த அந்தணர் வேடத்தில் வந்த இந்திரன், சிவனை நோக்கி தியானம் செய்யும்படி கூறினான். தவம் செய்ய உகந்த இடம் எது? என்று தன் மானசீக குருவான கிருஷ்ணரிடம் வேண்டினான் அர்ச்சுனன்.
அவனது வேண்டுதலால் மகிழ்ந்த கிருஷ்ணர், தில்லை வனமான சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் வனத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார். கிருஷ்ணர் கூறியபடி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த அர்ச்சுனன், ஒற்றைக் காலில் நின்றபடி சிவனை நோக்கி தவம் மேற்கொண்டான்.
அர்ச்சுனன் தவம் செய்வதை அறிந்த துரியோதனன், மூகாசுரன் என்னும் அசுரனை அனுப்பி வைத்தான். அதே நேரத்தில் அர்ச்சுனனுக்கு அருள்புரிவதற்காக ஈசன், வேடுவ வேடம் கொண்டு அங்கு வந்தார். பன்றி உருவம் எடுத்து வந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த அர்ச்சுனன், அந்த பன்றியின் மீது அம்பு தொடுத்தான். அதைக் கண்டு விலகி ஓடிய பன்றியை, அம்பு துரத்திச் சென்று வீழ்த்தியது. கண் விழித்த அர்ச்சுனன், பன்றியைத் தேடி வந்தான். அங்கு அவன் கண்ட காட்சி திகைக்கச் செய்தது. தன்னுடைய அம்பு மட்டுமல்லாது, பன்றியின் மீது மற்றொரு அம்பும் தைத்திருந்தது.
அப்போது வேடன் உருவில் இருந்த ஈசன் அங்கு வந்தார். அவர், ‘பன்றியை எய்து வீழ்த்தியது நான்தான். ஆகையால் அதை வீழ்த்திய பெருமை என்னையே சாரும். அது எனக்கே சொந்தம்’ என்றார்.
அர்ச்சுனன் அதை ஏற்க மறுத்தான். இதனால் இருவருக்கும் இடையே தொடங்கிய சொற்போர், ஒரு கட்டத்தில் வில்போராக மாறியது. இந்த போரில் அர்ச்சுனனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அக்னி தேவனிடம் இருந்து பலம் பொருந்திய காண்டீபத்தை அர்ச்சுனன் பெற்றான். ஆனால் அதை சிவபெருமான் பறித்து இரண்டாக முறித்து எறிந்தார்.
இதுபொறுக்காத அர்ச்சுனன் முறிந்த அம்பை எடுத்து, ஈசனின் தலையில் அடித்தான். இதையடுத்து ஈசன், தன் காலால் அர்ச்சுனனை உந்தித்தள்ள அவன் மேல்நோக்கிச் சென்றான். அப்போதுதான், வந்திருப்பது சாதாரண வேடன் இல்லை என்பதை அர்ச்சுனன் உணர்ந்தான். ஈசனை நினைத்து மனமுருக மன்னிப்பு வேண்டினான். இதையடுத்து அவன் கீழே வரும் வேளையில் அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் விழச்செய்து காப்பாற்றினார்.
பின்னர் இறைவன் அம்பாளுடன் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்தார். மேலும் பாசுபத அஸ்திரத்தையும் அளித்தார். அர்ச்சுனனுடன் இறைவன் களம் புகுந்ததால், இந்த ஊர் திருவேட்களம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பாசுபத அஸ்திரம் வழங்கியதால், பாசுபதநாதர் என்று பெயர் பெற்றார். அர்ச்சுனன் விழுந்த தீர்த்தம் கிருபசாகரம் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் மூங்கில். பாடல்பெற்ற காவிரி வடகரை சிவத்தலங்களில், இது இரண்டாவது திருத்தலமாகும். தலவரலாற்றின் அடிப்படையில் இவ்வாலயம் மகாபாரத வரலாற்றுடன் தொடர்புடையதாகவும், கவுரவர்களை வெல்ல பாண்டவர்களுக்கு வல்லமை அளித்த திருத்தலமாகவும் விளங்குகின்றது.
கோவில் அமைப்பு
மூன்று நிலைகளுடனும் ஐந்து கலசங்களுடனும் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது ராஜகோபுரம். இதற்கு முன்பாக வளர்ந்து நிற்கும் நாகலிங்க மரமும், எதிரில் நான்கு பக்கமும் படிக்கட்டுகளுடன் அழகுற காட்சியளிக்கும் தல தீர்த்தமான கிருபாசாகரமும் கோவிலுக்கு கொள்ளை அழகு சேர்க்கின்றது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், துவாஜாரோகண மண்டபமும், பிரகார சுற்றில் சித்தி விநாயகர், சோமாஸ்கந்தர், நால்வருடன் சொக்கநாதர்–மீனாட்சி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சந்திர–சூரியர் சன்னிதிகள் உள்ளன.
கர்ப்பக்கிரகம் மற்றும் அர்த்த மண்டபத்தின் கோஷ்டத்தில் உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமானையும் வணங்கி உள்ளே செல்ல, சபாமண்டபத்தில் வலதுபுறத்தில் கிரீடத்துடன் கூடிய நடராஜரும் சிவகாமியும் தரிசனம் தருகின்றனர். இடதுபக்கத்தில் நால்வர் உள்பட உற்சவ மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத முருகன், சோமாஸ்கந்தர், சற்குணாம்பிகை, அஸ்திரதேவர் ஆகியோரது திருவுருவங்கள் மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
திருமேனியில் தழும்பு
கருவறையில் இறைவன் சிவலிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்ச்சுனன் வில்லால் அடித்த தழும்பு இங்குள்ள இறைவன் திருமேனியில் உள்ளது. அம்பிகை சற்குணாம்பிகை தன் இருகரங்களில் நீலோத்பவ மலர், தாமரை மலர் ஏந்தி, மற்ற இருகரங்களில் வரத அபய முத்திரைக்காட்டி அருள்பாலிக்கின்றாள். அம்பிகை சன்னிதியின் நேர் எதிரில் மகாமண்டபத்தில் ஆலயத்தின் தலவரலாற்றுடன் தொடர்புடைய சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் நாய்களுடன் செல்வது, அர்ச்சுனனுடன் போர்புரிவது, அர்ச்சுனன் தவம் செய்வது, மூகாசுரன் தவத்திற்கு இடையூறு செய்வது, இந்திரன், ரிஷப வாகன காட்சி, அர்ச்சுன அஸ்திரம், அம்புகளை சமர்ப்பணம் செய்வது போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய காட்சிகள் அழகுததும்புவதாகவும், கலையுணர்வும் இறையுணர்வும் தருவதாகவும் படைக்கப்பட்டுள்ளன.
சுவாமிக்கும் அம்பிகைக்கும் அடுத்ததாக பிரகாரத்தில் உள்ள முருகன் சன்னிதி மிகவும் சிறப்புக்குரியதாகும். திருவாசியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் நுணுக்கமான கலைவேலைப்பாடு கொண்டிருக் கிறது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இவ்வாலய முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். இருகைகளாலும் அம்புவிடக் கூடிய அமைப்பில், அர்ச்சுனனின் சிலை உள்ளது. பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அர்ச்சுனன் சிலையும் மிக பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாக கூறப்படுகின்றது. தலவிருட்சமான மூங்கில் புனர்பூச நட்சத்திரத்திற்குரியது என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவேட்கள நாயகனை தரிசிப்பது விசேஷம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்தலத்தை, நக்கீரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் மற்றும் ஆன்மிக அடியார்கள் பலர் தரிசித்து இறையருள் பெற்றுள்ளனர்.
வைகாசி விழா
நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடந்தேறும் இந்தக் கோவிலின் முக்கிய விழா வைகாசி விசாகமாகும். காலை அர்ச்சுனன் தவத்திற்கு செல்லுதல், மாலை 5 மணியளவில் சுவாமி வேடரூபம், அம்பிகை வேடுவச்சி, பூதகணங்கள் வேடக்கணங்களாகச் செல்லுதல், ஊர்வாழ் பழங்குடியினர் பன்றி வேடம் அணிந்து புராணவரலாறு கலைநிகழ்ச்சியாக நடத்தப்படும். வாண வேடிக்கையுடன் பாசுபதம் வழங்குதல், பஞ்சமூர்த்திகள் வீதிவலம் என்று விழா களை கட்டும்.
காலை 6.45 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந் திருக்கும். சிதம்பரத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.