நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ளது, அறப்பளீஸ்வரர் திருக்கோவில். முன்காலத்தில் இந்த மலை ‘அறமலை’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. தர்மதேவதையே, மலையாக உருக்கொண்டிருப்பதால் இந்தப் பெயர். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், அறப்பளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி, தங்களது தேவாரப் பாடல்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தேவார வைப்பு தலமாகும்.
இங்குள்ள மூலவரான அறப்பளீஸ்வரர், சுயம்பு மூர்த்தி ஆவார். அம்பாளின் திருநாமம், அறம்வளர்த்த நாயகி. ‘அறை’ என்பது ‘மலை’ என்றும் பொருள்படும். ‘பள்ளி’ என்பதற்கு ‘தங்கியிருத்தல்’ என்று பொருள். மலையின் மீது அமைந்துள்ள ஆலயத்தில் வீற்றிருப்பவர் என்பதால், இத்தல இறைவனுக்கு ‘அறைப்பள்ளீஸ்வரர்’ என்று பெயர் வந்துள்ளது. இதுவே காலப்போக்கில் மருவி ‘அறப்பளீஸ்வரர்’ என்றானது. இத்தல சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.
இங்கு ஒரே இடத்தில் நின்று மூலவரான அறப்பளீஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான் ஆகிய நால்வரையும் தரிசிக்க முடியும். அம்பாள் அறம்வளர்த்த நாயகியின் சன்னிதி முன்பாக உள்ள மண்டபத்தின் மேற்கு பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்கர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
இத்தல தீர்த்தம் சக்தி மிக்கதாக சொல்லப்படுகிறது. ஒரு முறை இந்த தீர்த்தத்தில் இருந்த மீனைப் பிடித்து ஒருவர் சமைக்க முயன்றார். அப்போது ஈசனின் அருளால் வெட்டுப்பட்ட அந்த மீன்கள் மீண்டும் உடல் பொருந்தி தண்ணீருக்குள் தாவிச் சென்றதாக இந்த ஆலய இறைவனின் திருவிளையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. ஆலயத்தின் அருகில் ‘ஆகாய கங்கை’ என்ற பெயரில் அருவி உள்ளது. கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள், இந்த அருவிக்கு சற்று தொலைவில் காணப்படுகின்றன.
கோவில் சிறப்புகள் :
இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை,விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
அறம்வளர்த்தநாயகி சன்னிதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.சுற்றுப்பிரகாரத்தில் வள்ளி, தேவசேனாவுடன் முருகனும், விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி,தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் சிறப்பும் உடையது.
நாமக்கல்லில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில்.