அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம்… (Abhishekam benefits) ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.
பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.
பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
சிலைகளுக்கு ஏன் இப்படி வித விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்?
ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.
இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.
அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
எள் எண்ணெய்
பஞ்ச கவ்வியம்
மாவு வகைகள்
மஞ்சள் பொடி
பசும்பால்
தயிர்
தேன்
நெய்
நெல்லி முள்ளிப்பொடி
கரும்புச்சாறு
பன்னீர்
அன்னம்
வாசனை திரவிய தீர்த்தம்
அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.
சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் பல ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ… ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.
குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்
- கந்த தைலம் – இன்பம்
- மாப்பொடி – கடன் நீக்கம்
- மஞ்சட்பொடி – அரசவசியம்
- நெல்லிப்பருப்புப்பொடி – பிணிநீக்கம்
- திருமஞ்சனத்திரவியம் – பிணிநீக்கம்
- ரசபஞ்சாமிர்தம் – முக்தி
- பழபஞ்சாமிர்தம் – முக்தி
- பால் – ஆயுள் விருத்தி
- பஞ்சகவ்யம் – சுத்தம், சகல பாவநீக்கம்
- இளவெந்நீர் – முக்தி
- தேன் – சுகம், சங்கீத குரல்வளம்
- இளநீர் – ராஜயோகம் கொடுக்கும்
- சர்க்கரைச்சாறு – பகைவரை அழிக்கும்
- கரும்புச்சாறு – ஆரோக்கியம்
- தமரத்தம் பழச்சாறு – மகிழ்ச்சி தரும்
- எலுமிச்சம் பழச்சாறு – எமபயம் போக்கும்
- நாரத்தம் பழச்சாறு – மந்திர சித்தி ஆகும்
- கொழுச்சிப் பழச்சாறு – சோகம் போக்கும்
- மாதுளம் பழச்சாறு – பகைமை அகற்றும்
- அன்னாபிஷேகம் – விளைநிலங்கள், நன்செய்தரும்
- வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) – மகப்பேறு தரும்
- தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) – ஞானம் தரும்
- பன்னீர் – குளிர்ச்சி தரும்
- விபூதி ( திருநீறு) – சகல ஐஸ்வர்யம் தரும்
- தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) – சகல சௌபாக்கியம் கிட்டும்
- ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) – சகல சௌபாக்கியம் கிட்டும்
- சந்தனம் – அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
- கோரோசணை – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
- ஜவ்வாது – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
- புனுகு – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
- பச்சைக் கற்பூரம் – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
- குங்குமப்பூ – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
- தயிர் – குழந்தைச் செல்வம் கிட்டும்
- சங்காபிஷேகம் – சகல பாரிஷ்டம் கிட்டும்
- ஸ்நபன கும்பாபிஷேகம் – சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்
ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் கண்ணார அபிஷேகத்தை பார்த்தும் பிறந்த பிறவியின் பயனைப் பெறவும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்🙏
பதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்
எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பயன் பெறலாம் என்று நாம் பார்ப்போம்….
இது எந்த கடவுளுக்கு செய்தாலும் அதன் பயன் நம்மையும் நமது குடும்பத்தாரையும் வந்து சேரும்..
தீர்த்த அபிஷேகம் – மனசுத்தம்
எண்ணெய் – பக்தி
நெல்லிப்பொடி – நோய் நிவாரண்ம்
பால் அபிஷேகம் – சாந்தம்
மஞ்சள் பொடி – மங்கலம்
தயிர் – உடல் நலம்
நெய் – நல்வாழ்வு
பன்னீர் – புகழ்
நாட்டு சர்க்கரை – சோதிடம்
விபூதி – ஞானம்
சந்தனம் – சொர்க்க லோகம்
தேன் – குரல் வளமை, ஆயுள்
பழச்சாறு – ஜனவசீகரம்
பஞ்சாமிர்தம் – நீண்ட ஆயுள்
பஞ்ச கவ்யம் – பாவம் நீக்கல்
இளநீர் – புத்திரப் பேறு
அன்னம் – அரசு உதவி
மாப்பொடி – குபேர சம்பத்து
பஞ்ச கவ்யம் (பசு கொடுக்குற ஐந்து பொருட்கள்) – பால், தயிர், நெய், சிறுநீர் (கோமியம்), சாணம். ‘பஞ்ச கவ்யம்’னா சரி. ‘பஞ்ச கோமியம் அது தப்பு. கோமியம், அஞ்சுல ஒண்ணு…