ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.
2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.
அதன் படி 2,8-ம் இடத்தில் ஆட்சி, உச்சம், நீச கிரகம் நின்றாலும் செவ்வாய், சனி சம்பந்தமாக இருந்தாலும் சனி, செவ்வாயுடன் ராகு,கேது இணைந்து இருந்தாலும் அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சேர்ந்து இருப்பது சூரியன்,ராகு,கேது, சனி, செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் நிற்பதும், நீச, அஸ்தங்கம்,வக்ரம் பெற்ற கிரகம் அமர்வதும் மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8- ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி உண்டாகும். 8–ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி ஏற்படும்.