Home ஆன்மீக செய்திகள் மகாளய அமாவாசை 2021 – புரட்டாசி அமாவாசையில் திதி கொடுப்பதால் என்னென்ன பலன்கள்

மகாளய அமாவாசை 2021 – புரட்டாசி அமாவாசையில் திதி கொடுப்பதால் என்னென்ன பலன்கள்

by admin
மகாளய அமாவாசை 2021 - புரட்டாசி அமாவாசையில் திதி கொடுப்பதால் என்னென்ன பலன்கள்

புரட்டாசி மாதம் எமனின் கோரைப்பற்கள் வெளியே தெரியும் மாதமாக இருப்பதால் புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன.

மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அவர்கள் மனம் திருப்தியடையும் வகையில் அன்னதானம் தர வேண்டும்.

ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும். இது எதுவும் முடியாதவர்கள் நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.

தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது என்று அர்த்தம். நீரை அளித்து அவர்களை திருப்தி செய்து அருளைப் பெறுதல். அமாவாசை, திதி தினத்தில் மட்டும் எள்ளும், நீரும் கலந்து நம் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இந்த இரு நாட்களில் முன்னோர்களுக்கு ரத்த சம்பந்தமான உறவுகள் மட்டும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

மகாளய பட்ச காலத்தில் புரட்டாசி 12, செப்டம்பர் 28,செவ்வாய்கிழமை மகாவியாதிபாதம், புரட்டாசி 13,செப்டம்பர் 29 புதன் மத்யாஷ்டமி, புரட்டாசி 14,வியாழன்கிழமை அவிதவா நவமி இந்த நாட்களில் மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தர பொதுவான நாளாகும். புரட்டாசி 17ஆம் தேதி அக்டோபர் 03,ஞாயிறுக்கிழமை, சந்நியஸ்தமாளயம் சந்நியாசிகளுக்கு திதி கொடுக்க ஏற்ற நாளாகும்.

 புரட்டாசி 18, அக்டோபர் 4ஆம் தேதி திங்கட்கிழமை கஜச்சக்ஷமயாளயம், விதவைகள் அனுஷ்டிப்பதற்கு ஏற்றநாள். புரட்டாசி 19 அக்டோபர் 05, செவ்வாய்க்கிழமை சஸ்த்ரஹத மாளயம் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு தர்ப்பணம் தரலாம். புரட்டாசி 20, அக்டோபர் 06,புதன்கிழமை மகாளய அமாவாசை. அன்று மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தரலாம்.

இந்த நாளில் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி, தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர் என அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம். சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மகாளய பட்சம்.

தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது. சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும். உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும்.

அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம்.

இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல கோவில்களிலும் முக்கிய நதிக்கரைகள், கடற்கரைகளில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரவர் வீடுகளிலேயே திதி கொடுக்கலாம்.

 மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. Ads by

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

புரட்டாசி அமாவாசை நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து தானம் கொடுப்பதன் மூலம் சுபகாரியத் தடைகள் நீங்கும் தீராத நோய் தீரும். பித்ரு தோஷம் நீங்க மகாளய புண்ணிய காலத்தில் விரதம் இருந்து நம்முடைய வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

You may also like

Translate »