தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூம்புகார் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது பஞ்சமுக மகா மங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.
மாதந்தோறும் அமாவாசை அன்று காலை 10 மணி முதல் நிகும்பலா யாகம் நடைபெறும். யாக குண்டத்தில் பட்டுப்புடவை, மிளகாய் வற்றல் ஆகியவை போடப்பட்டு இந்த யாகம் நடைபெறும். இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.
திருமணத்தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற பிரத்யங்கிராதேவி கோவிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு திருமணத்தடை நீங்குகிறது என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகாலத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் ராகு கால பூஜையில் பங்கேற்பதால் திருமணத்தடை நீங்கும். புது வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உடன் கை கூடும், வேலையில் நிரந்தரம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் ஈடேறும், வெளிநாட்டு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் 11 வாரத்தில் ஈடேறும். அரசு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களுக்கு அதிவிரைவில் நிரந்தர உத்தியோகம் கிடைக்கும்.
தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக இவ்வாலயத்தில் உள்ள அனுமன் நேரெதிர் சனி பகவானை பார்க்கிறார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபட கிரக தோஷங்கள் அறவே விலகும்.
இவ்வாலயத்தில் உள்ள திரிசூலத்தில் பில்லி, சூனியம், உடல் வியாதி, தீராத மன நோய், குடும்ப கஷ்டம், போட்டிகள், பெரும்பகை இவற்றினை களைய பக்தர்கள் மிளகாய் அரைத்து தாங்களே சாற்றி பலன் பெறலாம்.