திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த மகான் ஆறுமுக சுவாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்து கொண்டு அருளாசி வழங்கி வந்தார்.
இந்நிலையில் வயது முதிர்ந்த தருவாயில் ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடைய போவதாகவும், அந்த இடத்தில் கோவில் கட்டி வருடந்தோறும் ஆடி அமாவாசை நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதமிருந்து இங்கு வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் இருந்து மடிப்பிச்சையாக பெற்று அருகில் உள்ள குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறி ஜீவசமாதி அடைந்தார்.
அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பொது மக்கள் கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.
ஆடி அமாவாசை தினமான நேற்று குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் கோவில் குளத்தில் புனித நீராடி மடிப்பிச்சை ஏந்தி கோவில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர்.
தொடர்ந்து அவர்கள் கோவில் அருகில் உள்ள குளக்கரை படியில் சென்று பிரசாதத்தினை வைத்து பயபக்தியுடன் சுவாமியை வேண்டி மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்டனர்.
மேலும் வேண்டுதலை நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம் காணிக்கையாக செலுத்தினர்.