Home ஆன்மீக செய்திகள் தப்பான வழியில் சம்பாதித்தால் சீக்கிரமே பணக்காரர் ஆகிவிடலாமா? இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

தப்பான வழியில் சம்பாதித்தால் சீக்கிரமே பணக்காரர் ஆகிவிடலாமா? இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

by admin
rupee-தப்பான வழியில் சம்பாதித்தால் சீக்கிரமே பணக்காரர் ஆகிவிடலாமா

உலகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பணக்காரராக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? இன்றைக்கு பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி அந்தப் பணத்தை சம்பாதித்து இருப்பார்கள்? இந்த இரண்டு கேள்வியை பற்றி சிந்திக்காத மனிதர்களே இந்த உலகத்தில் கட்டாயம் இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். அப்படி பணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்தால், அவர் வாழ்க்கையின் எல்லா ஆசைகளையும் துறந்த முனிவராக தான் இருப்பார். முதலில் இந்த இரண்டு கேள்விக்கான பதிலை நாம் தெரிந்துகொள்வோம். இந்த காலத்தில் பணக்காரராக இருக்க வேண்டுமென்றால் ஒன்று பூர்வீக சொத்து இருக்கவேண்டும். இரண்டாவது குறுக்குவழியில் சென்று சம்பாதித்து இருக்க வேண்டும்.

நேர்மையான வழியில் சம்பாதித்து பணக்காரர் ஆனவர்களே இந்த உலகத்தில் கிடையாதா? என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். நேர்மையான வழியில் சம்பாதித்து பணக்காரர்களானவர்களும் இந்த பூமியில் உண்டு. ஆனால் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத ஒரு மனிதன், விரைவில் பணக்காரர் ஆகிவிட்டார் என்றால், அவர் ஏதோ ஒரு விதிமுறையை மீறி இருக்கின்றார் என்பதுதானே அர்த்தம். இந்த உலகத்தில் இருக்கும் உண்மையான செல்வந்தர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

10 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருப்பவரை பார்த்து, ‘அவருக்கு என்ன குறை இருக்கின்றது’ என்று இந்த சமுதாயத்தில் உள்ள அனைவராலும் பேசப்படும். ஆனால் அவருக்கு எத்தனை கஷ்டங்கள் உள்ளது என்பதை என்றாவது நாம் ஆராய்ந்து பார்த்து இருக்கின்றோமா? எத்தனை லட்சத்தை ஒருவர் சம்பாதித்தாலும், அந்தப் பணத்தின் மூலம் அவர் சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் அனுபவித்தாரா? என்ற கேள்வி தான் முதலில் வரவேண்டும். பணத்தை சேர்த்து சேர்த்து வங்கி இருப்பில் வைத்து விட்டு, திரும்பவும் பணம் சேர்க்க ஓடிக்கொண்டே இருந்தால் அவர் கட்டாயம் செல்வந்தர் இல்லை.

இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் ஒருநாள், இந்த உலகத்தை விட்டு அவர் உயிர் பிரிந்து இருக்கும். அடுத்த சந்ததியினருக்கு அந்த சொத்து செல்லும். சில பேர் அதை இரட்டிப்பு ஆக்குவார்கள். சிலர் அதை அழித்து விடுகிறார்கள். இவ்வளவு தான் நடக்கிறது. முதலில் நீங்கள் சம்பாதித்த பணத்தை வைத்து உங்கள் வாழ்க்கையை எப்படி அனுபவித்துக் கொள்ளலாம் என்று யோசித்து, அதற்கான நேரத்தை ஒதுக்கி விட்டு, அதன்பின்பு பணத்தை மேலும் மேலும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுங்கள்.

குறுக்கு வழியில் சென்றால் பணத்தை விரைவாக சம்பாதித்து விடலாம் என்று எண்ணி, பல தவறுகளை செய்து, நீங்கள் சம்பாதித்த பணத்தின் மூலம் எல்லா தவறுகளையும் சரி செய்து விடலாம். இந்த சமுதாயத்தை வேண்டும் என்றால் ஏமாற்றி விட்டு, நல்லவர் என்ற பெயரை சம்பாதித்து விடலாம்.

ஆனால் பஞ்சபூதங்கள் உங்களை உற்று நோக்கி கொண்டு தான் இருக்கின்றன. நவகிரகங்களும் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சம் உங்களை பின் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடவுள் உங்களை கவனித்துக் கொண்டே வருகின்றார். இப்படி எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் பாவக் கணக்கை நீங்கள் எழுதிக் கொள்ளலாம். சாட்சியாக உங்களுக்குப் பின்னால் இவ்வளவு இயற்கை சக்திகள் நின்று கொண்டிருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

எடுத்துக்காட்டாக, குறுக்கு வழியில் கோடிக்கணக்கில் பணத்தை சேர்ந்தவர்களால் ஒரு துண்டு இனிப்பு பலகாரத்தை சாப்பிட முடியாது. உடல்நலம் படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். சில பேருக்கு தவறு செய்து விட்டோமே என்ற மனக்குழப்பம் உள்ளுக்குள் இருக்கும். செய்த தவறை மறைத்து தண்டனையிலிருந்து தப்பித்து இருப்பார்கள். ஆனால் மனசாட்சிக்கு பயந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அந்த பயமும், மன அழுத்தமும் உடல் கோளாறுகளை உண்டாக்கி விடும். எதற்காக இந்த வாழ்க்கை? குறுக்கு வழியில், அதிக அளவில் பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு, கஷ்டத்தை அனுபவிக்க போகிறீர்களா! அளவான பணத்தை சம்பாதித்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க போகிறீர்களா?

ஒரு விஷயத்தை மட்டும் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைத்து விடும். ஆனால் தெரிந்தே செய்யும் தப்பிற்கு எந்த ஜென்மத்திலும் மன்னிப்பு இல்லை. இந்த சமுதாயமும், சட்டமும் தரும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், இயற்கை தரும் தண்டனையிலிருந்து உங்களால் எந்த ஜென்மத்தூலும் தப்பிக்கவே முடியாது என்பதை மறந்துடாதீங்க! மறந்துடாதீங்க!.

You may also like

Translate »