சிவாலயங்களில் காணப்படும் விருட்சத்தின் அடியில் விநாயகரும், பாம்பு போன்ற சில கற்களும் பிரதிஷ்டை செய்யப்படுவதன் தத்துவம் என்னவென்று தெரியுமா? பாம்புக் கற்களாக வீற்றிருக்கும் அந்த சிலைகள் நாகராஜரின் சிலைகள். அங்குள்ள சிலைகளில் நாகங்கள் இரண்டும் பின்னி பிணைந்து இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களை வணங்கினால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரகாரத்தை சுற்றி வலம் வரும் போது அரச மரத்தின் அடியில் இந்த சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மரத்தை சுற்றிலும் தொட்டில்கள், மஞ்சள் கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். நாகதோஷம் நீங்கி திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இவ்வாறு தொட்டில் கட்டி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இரு நாகங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருப்பதால் தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து குழந்தை பாக்கியம் அடைந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல்ல வரம் அருளும் தெய்வங்களாக நாகராஜரும், நாக தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர். நாகங்கள் பின்னியிருக்கும் சிலைக்கு அபிஷேகம் செய்தால் பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர்.
இத்தகைய சக்தி வாய்ந்த நாகராஜருக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் நாகர்கோவிலில் உள்ளது. நாகராஜர் சுயம்பு மூலவராக இங்கு இருக்கின்றார். இங்குள்ள புற்று மண் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மண்ணை பூசினால் சரும வியாதிகள் குணமடைவதாக கூறப்படுகிறது. பல்லாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவில் முன்னொரு காலத்தில் வயல்வெளியாக இருந்ததால் இன்றும் ஊற்று நீர் ஊறுகிறது. எனவே இங்குள்ள புற்று மண் ஈரப்பதமாக இருக்கிறது. இதை அள்ள அள்ள குறையாமல் இருப்பது அதிசயமாகும். மேலும் இந்த மண் ஆறு மாதம் ஒரு முறை நிறம் மாறுகிறதாம். இந்த விஷயங்கள் பக்தர்களால் வியந்து பார்க்கும் வண்ணம் இன்றளவும் இருப்பதே இக்கோயிலின் சிறப்பம்சமாக இருக்கிறது.
அரச மரத்தடி பிள்ளையாரை வலம் வந்து வணங்கும் போது அரச மரத்திலிருந்து கிடைக்கும் மருத்துவ சக்தி மகப்பேறு உண்டாக காரணமாக இருக்கும். அரச மரம், வேப்ப மரம், ஆல மரம் அதீத தெய்வ சக்தி மற்றும் மருத்துவ சக்தி கொண்டுள்ளதால் அந்த மரங்களை தேர்ந்தெடுத்து சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர் நமது முன்னோர்கள். முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் கட்டாயம் மூட நம்பிக்கை இல்லை என்று நிரூபிக்கபட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் நாகராஜர் கோவிலில் எண்ணற்ற பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். அதில் திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று விநாயகர், நாகராஜர், வேப்ப மரம் மூன்றையும் சேர்த்து 7 முறை வலம் வந்து வணங்கினால் மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது. சிலர் கடும் விரதம் இருந்து 108 முறை கூட வலம் வந்து அருள் பெறுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இங்கு நாக கல்லை பிரதிஷ்டை செய்ய நினைக்கும் தம்பதியர்கள் முதல் நாள் இரவு விரதம் இருந்து நாகத்தை தண்ணீரில் ஊரவிட்டு விட வேண்டும். மறுநாள் அரச மரத்தின் மேடையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தம்பதியர்கள் விரதம் மேற்கொண்டு இங்குள்ள விநாயகரின் அருள் பெற்று, நாக தோஷம் இருப்பின் நீங்கப்பெற்று, விருட்சத்தின் மருத்துவ சக்தியால் விரைவில் மகப்பேறு அடைவதாக பெரும்பாலான பக்தர்கள் நம்புகின்றனர். எனவே இந்த கோவிலில் எண்ணற்ற நாக கற்கள் பிரதிஷ்டை செய்து வருகின்றனர். நாகராஜாவிற்கு தனிகோவில் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான் என்பது மேலும் சிறப்பான விஷயமாகும்.