வாழையடி வாழையாய் தழைத்து நிற்கும் வாழை மரம் அற்புத சக்திகள் கொண்ட மரம். இந்த மரத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை. அடி முதல் நுனி வரை அனைத்து பகுதிகளும் பயன்படும் சிறப்பான மரம். நம் வீட்டின் அனைத்து சுப காரியத்திலும் முதன்மையாக நின்று பங்கு கொள்ளும் முதல் மூத்த உறவாக இருந்து வருகிறது. இதில் இருக்கும் ”ஆன்டி ஆக்சிடெண்டுகள்” நமது உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இத்தகைய அற்புதங்கள் நிறைந்த இந்த மரத்திற்கு அக்ஷய சக்தி உண்டு என்பது பலரும் அறியாத ரகசியமாகும். அக்ஷயம் என்பது அள்ள அள்ள வற்றாமல் கொடுக்கக்கூடிய ஒரு வரமாகும்.
அக்ஷய பாத்திரம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். சூரிய பகவான் பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ளும் போது தர்மருக்கு அளித்தது. அந்த பாத்திரம் அள்ள அள்ள குறையாத உணவினை தரும். துரியோதனன் சூழ்ச்சி புரிந்து துர்வாச முனிவரை பாண்டவர்கள் குடிலுக்கு சென்று உணவருந்த ஏவி விட்டதும், அந்த சமயத்தில் அக்ஷய பாத்திரம் கழுவி கவிழ்க்கப்பட்டதும், அப்போது பாண்டவர்களை காப்பாற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அக்ஷய பாத்திரத்தில் ஒட்டியிருந்த இலையை சாப்பிட்டதும் உலகமே உணவருந்திய திருப்தியை கொண்டது. இதனால் துர்வாசரின் சாபத்திலிருது பாண்டவர்கள் தப்பினர். இந்த கதையை அறியாதவர்கள் குறைவு தான். இது போன்று நமது இல்லத்திலும் அன்னம் மற்றும் தங்கம் குறைவில்லாமல் பெருக வாழை மரம் கொண்டு ஒரு பரிகாரம் உள்ளது. அதனை பற்றி இப்பதிவில் இனி காண்போம்.
அக்ஷய திதி அன்று தங்கம் வாங்க நகை கடைகளில் குவியும் மக்கள் கூட்டம் அனைவரும் அறிந்ததே. அக்ஷய திதியில் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட மட்டோமா என்று ஏக்கம் கொள்ளாதவர்கள் யாரும் இல்லை. சந்திரன் சாப நிவர்த்தி பெற்று இந்த நாளில் தான் மீண்டும் வளர துவங்கியது. இதன் அடிப்படையில் அக்ஷய திதி என்பது மென்மேலும் வளர்ச்சி கொள்ளும் நிலையை குறிக்கிறது. இந்த நாளில் எந்த பொருள் வாங்கினாலும் மேலும் பல்கி பெருகும். இந்நாளில் புண்ணிய காரியங்கள் செய்தால் உங்களது சந்ததியினருக்கு பல நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
இது போன்று அக்ஷய திதி அன்றைய நாளில் தங்கம் வாங்கியதும் அந்த தங்கத்தை மஞ்சள் நிற துணியில் முடிந்து கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு கொள்ளவும். இந்த முடிப்பை அக்ஷய சக்தி பெற்ற வாழை மரத்திற்கு கட்டி விட வேண்டும். கட்டும் போது கிழக்கு திசை நோக்கியவாறு நின்று கட்ட வேண்டும்.
பின்னர் வாழை மரத்திற்கு தூப, தீப ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். நிவேதனமாக கற்கண்டு வைக்கலாம். அதன் பிறகு நகையை அணிந்து கொள்வது மென்மேலும் தங்கம் பெருக துணை செய்யும். இந்த நாளில் கண்டிப்பாக புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த தர்ம காரியம் செய்து விட்டு இந்த பரிகாரம் மேற்கொண்டால் கூடுதல் பலன் கிட்டும்.
தங்கம் போன்றே அன்னமும் குறையாமல் உங்களது குடும்பத்திற்கு கிடைக்க தங்கத்திற்கு பதிலாக நெல்மணிகளை குடும்பத்தில் இருக்கும் ராசியானவர்கள் கைகளால் மஞ்சள் துணியில் போட்டு முடிந்து மஞ்சள், குங்குமம் இட்டு வாழை மரத்தில் கட்டி பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் அந்த மஞ்சள் முடிப்பை அப்படியே அரிசி வைத்திருக்கும் மூட்டையில் அல்லது கலனில் போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வற்றாத அன்னம் சேரும்.