நமது முன்னோர் வழிபாட்டில் சாமியாடுதல்…..
இரவு பத்து மணி முதல் இரண்டு மணிவரை உள்ள காலம் “யாமம்” என்று தூய தமிழில் அழைக்கப்படும். இதுவே பேச்சு வழக்கில் “சாமம்” என்று மாறியது. நடுச்சாமம் என்றால் சரியாக இரவு பனிரெண்டு மணி என்று பொருள்.
ஒரு மனிதன் இறந்த பிறகு அவனின் பூத உடல் மட்டும் தான் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகிறது. அவன் நினைவலைகள் இந்த உலகை விட்டு வேறு எங்கும் போகாது.
அவன் வாழ்ந்த இடங்களை சுற்றி சுற்றி வரும். இந்த நினைவலைகளை உணரும் ஆற்றல் இயற்கையாகவே காகங்களுக்கும் நாய்களுக்கும் உள்ளன.
நடுச்சாமத்தில் நமது முன்னோர்களின் நினைவலைகள் உச்சத்தில் இருக்கும். சாமத்தில் வருவது தான் “சாமி”. சக்திவாய்ந்த இந்த நினைவலைகள் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை நன்கு அறிந்தவையாகும். முக்காலத்தையும் அறிந்து உணர்ந்தது தான் சாமி.
இந்த நினைவலைகள் ஒரு மனிதன் உறங்கும் பொழுது அவன் மூளைக்குள் இறங்கினால் அதற்குப் பெயர் “கனவு”. உடலுக்குள் இறங்கி குறி சொன்னால் அதற்குப் பெயர் “சாமியாடுதல்”.
நமது முன்னோர்கள் நமக்கு என்றும் நன்மை செய்யவே நினைப்பார்கள். அதனால் தான் அவர்களது நினைவலைகள் நம் கனவில் வந்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்துக்களைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கின்றன.
கொங்கு மண்டலத்தில் வாழும் பெற்றோர்கள் இன்றும் தங்களின் குழந்தைகளை சாமி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. அதாவது தங்கள் முன்னோர்கள் தான் தங்களுக்குக் குழந்தையாகப் பிறந்துள்ளனர் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இது.
பாட்டன் -> பேரன், பாட்டி -> பேத்தி என 1, 3, 5, 7 என்ற ஒற்றைப் படையில் நம் மரபுகள் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.
மறைநிலவு நாளன்று நம் முன்னோர்களுக்கு அவர்கள் விரும்பி உண்ட உணவுகளைச் சமைத்து நாம் படைக்கிறோம். அதிலும் குறிப்பாக ஐப்பசி, ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத மறைநிலவு நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
பெரும்பாலும் அசைவ உணவுகளைத்தான் ஒருகாலத்தில் நம் மக்கள் படைத்தார்கள். ஆனால் இன்று சைவ உணவுகளை மட்டும் படைக்குமாறு மாற்றப்பட்டுள்ளனர்.
நம் வீட்டில் பெரியவர்கள் இறந்து விட்டால் 1, 3, 5, 7 என்ற ஒற்றைப் படை நாட்களில் தான் நாம் படையல் வைக்கிறோம்.
நல்லெண்ணத்தோடு இறந்தவர்களின் நினைவலைகள் அதே நல்லெண்ணத்தோடு நம்மைக் காக்கும்.
போரில் இறந்த மாவீர்களின் நடுகற்கள் இருந்த இடங்கள் தான் இன்று ஊர்களின் காவல் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன.
இவ்விடங்களில் தவறாமல் ஒரு சூலமும் வேலும் இடம்பெறும். சூலம் எதற்காகவென்றால் நடுகல்லிருக்கும் இடத்தில் சேவல்/கிடாய் போன்ற மிருகங்களை பலியிட வேண்டும் என்று ஆண்களுக்கு நினைவுபடுத்த வைக்கப்பட்ட சின்னமாகும்.
சேவலைக் குத்தி பலியிடுவதற்குத்தான் வேல். அவ்வேலின் கூர்மையான தலைப் பகுதியின் கீழ் ஒரு சதுர வடிவப் பட்டை இருக்கும். அதன் வேலை சேவலைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்வதாகும்.
இரவு பனிரெண்டு மணிக்குத்தான் காவல் தெய்வங்கள் வேட்டைக்கு கிளம்பும். அவைகள் இரத்த உணவுகளை மட்டுமே உண்ணும் என்பதால் நம் மக்கள் பொதுவாகவே இரவு நடுச்சாமத்தில் வெளியே உலாவ மாட்டார்கள்.
நமது முன்னோர் வழிபாட்டில் சாமியாடுதல்…..
469