Home உடல் ஆரோக்கியத்திற்கு கோபத்தைக் குறைப்பவனே ஞானி

கோபத்தைக் குறைப்பவனே ஞானி

by admin
anger management spiritual story in tamil

கோபத்தைக் குறைப்பவனே ஞானி

🛕 ஒரு சமயம் கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர் , அர்ச்சுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். நடு இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர்.

🛕 வனத்தில் கொடிய மிருகங்கள் இருக்கும் என்பதால், மூவரும் ஒரு சேரத் தூங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

🛕 அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல, அர்ச்சுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக் கண்ட அர்ச்சுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

🛕 அப்போது அவ்வுருவம், அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும், அதற்கு அர்ச்சுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ச்சுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது. அர்ச்சுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது.

🛕 இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பி விட்டு அர்ச்சுனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ச்சுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு, அவ்வுருவம் மறைந்துவிட்டது.

🛕 மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பி விட்டு படுக்கச்சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். “உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டு தான்” என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு மிகுந்த கோபத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகை மாறாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர், சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி, தரையில் நெளிந்தது.

🛕 கிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ச்சுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும் , அவர்களைத் தாக்கியதும், அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியது என்பது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் தீவிரமாகச் சண்டை போட்ட உருவம் இது தான்.

🛕 நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால், இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது.

🛕 வம்புச் சண்டைக்கு வருபவனை விட்டு, புன்னகையோடு வெளியேறி விலகி இருந்து விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

“கோபத்தைக் குறைப்பவனே ஞானி” என்றார்.

இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்.

🛕 இப்படித் தான் நாம் வரும் வம்புகளுக்கு பதிலுக்குப் பதில் ஏதும் செய்யாமல் இருந்தாலே பிரச்சனை ஆகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றும் இல்லாமல் போய் விடும்.

You may also like

Translate »