Home ஆன்மீக செய்திகள் இன்னல்களை அகற்றும் இறை வழிபாடுகள்

இன்னல்களை அகற்றும் இறை வழிபாடுகள்

by admin
Viratham_இன்னல்களை

சிவன் கோவில்களில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும். ஒரு சில ஆலயங்களில் வன்னி மரமும் இருப்பதைக் காணலாம். சிவாலயங்களுக்கு செல்பவர்கள் அங்கு இருக்கும் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்து வந்தால், நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் விலகும். வழக்குகள் சாதகமாகும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் காணப்படும் நாகர் சிலைக்கு, வெள்ளிக்கிழமை அன்று வரும் ராகு காலத்தில் (காலை 10.30 மணி முதல் 12 மணி வரை) மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ அணிவித்து, அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் நெய் தீபம் ஏற்றி, தம்பதியர் தங்களின் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

குடும்பம் என்று இருந்தால், அனைவருக்கும் பிரச்சினைகள், துன்பங்கள் வரத்தான் செய்யும். ஒருவேளை தாங்க முடியாத துன்பங்கள் வந்து, மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது அந்த பிரச்சினைகளில் இருந்து உங்களைக் காக்கும்.

கடன் தொல்லைகள் அதிகரித்து, குடும்பத்தை நடத்த முடியாத நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்கள், யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடலாம். இதன் மூலம் அந்த கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிபிறக்கும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை போன்றவை விலகி நன்மைகள் வந்துசேரும்.

அம்மன் கோவில்களுக்குச் சென்றால், அங்கு பலிபீடத்தின் முன்பாக, திரிசூலம் வைத்திருப்பார்கள். இந்த திரிசூலத்தில் ஒரு எலுமிச்சைப் பழத்தை குத்தி வைத்து, குங்கும பொட்டு வைத்து வழிபட்டு வந்தால், செய்வினை தோஷங்கள் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபட்டு வாருங்கள். இதன் மூலமாக வீட்டில் ஏதேனும் ஏவல், பில்லி, பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

பெருமாளிள் கையில் இருக்கும் சக்திவாய்ந்த ஆயுதம், சுதர்சன சக்கரம். பெரும்பாலான பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வார் என்ற பெயரில் இவர் தனிச் சன்னிதியில் காட்சி தருவார். இவரது சன்னிதியில் தொடர்ச்சியாக 48 நாட்கள் நெய் தீபம் ஏற்றி, 12 முறை வலம் வந்து வழிபட்டால், தொழில் மேம்படும். வழக்குகள் சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி வழிபட, கொடுத்த கடன் வசூலாகும்.

சிவபெருமானின் 64 வடிவ மூர்த்தங்களில் ஒருவராக இருப்பவர் பைரவர். இவரது சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால், கடன் தொல்லைகள் அகலும்.

திங்கட்கிழமை வழிபாடு சிவபெருமானுக்கு உகந்தது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவானின் பாதிப்பு இருந்தால், பால் அபிஷேகம் செய்து, அர்ச்சித்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் விலகும். சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றினாலும், சனி தோஷம் நீங்கும்.

நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ரனுக்கு, வெள்ளிக் கிழமைகளில் அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் மறையும்.

பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை பார்வதிதேவியுடன் வழிபாடு செய்து வந்தால், ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறலாம். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை கண்டு வணங்குவது, நோய் நொடிகளையும், வறுமையையும் அகற்றும்.

You may also like

Translate »