Home ஆன்மீக செய்திகள் 249 அடி உயர ராஜகோபுரம் கொண்ட கோவில்

249 அடி உயர ராஜகோபுரம் கொண்ட கோவில்

by admin

கர்நாடகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் முருதேஸ்வரா கோவிலும் ஒன்று. உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த கோவில் உள்ளது. இந்த மலையின் 3 பகுதிகளை அரபிக்கடல் சூழ்ந்து இருப்பது இதன் சிறப்பு. சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் 20 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவிலை நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் 2 பிரமாண்டமான யானை சிலைகள் உள்ளன. இந்த கோவில் ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இந்த கோவிலின் ராஜகோபுரம் 249 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என கருதப்படுகிறது. இங்குள்ள லிங்கம், உண்மையான ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதி என நம்பப்படுகிறது. இந்த லிங்கமானது தரைமட்டத்தில் இருந்து கீழே 2 அடி ஆழத்தில் அமைந்து இருக்கிறது. அத்துடன் இந்த கோவிலின் அருகே பிரமாண்டமான சிவன் சிலையும் இருக்கிறது. 123 அடி உயரம் கொண்ட இந்த சிலை, உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2-வது உயரமான சிவன் சிலை ஆகும்.

இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் தினமும் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடை திறந்திருக்கும். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் கோவிலுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு உள்ள நெட்ரானி தீவு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இந்த தீவு பகுதியில் நீர்சாகச விளையாட்டுகள் செய்து சுற்றுலா பயணிகள் குதூகலிக்கலாம்.

You may also like

Translate »