திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை 3 நாட்கள் ஷாத்ஷாத்கார வைபவ உற்சவம் நடக்க உள்ளது. அதையொட்டி நேற்று அதிகாலை சாமிக்கு தோமால சேவை, கொலு ஆகியவை நடந்தன. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூைஜ பொருட்கள் ஆகியவற்றை ஊழியர்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் நாமகொம்பு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்சைகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமப்பூ மற்றும் கிச்சிலிகட்டா ஆகிய சுகந்த பொருட்கள், திரவியங்களால் கோவில் முழுவதும் பூசி, தெளிக்கப்பட்டது. மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது, பகல் 11.45 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சியில் இணை அதிகாரி சாந்தி, கண்காணிப்பாளர் ரமணய்யா, அர்ச்சகர்கள் நாராயணாச்சார்யா, பார்த்தசாரதி, அர்ஜித சேவை இன்ஸ்பெக்டர் யோகானந்தரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.