Home ஆன்மீக செய்திகள் உழைப்பவர்களுக்கு நம்பிக்கையே பலம்- ஆன்மிக கதை

உழைப்பவர்களுக்கு நம்பிக்கையே பலம்- ஆன்மிக கதை

by admin
Spiritual-Stories_உழைப்பவர்களுக்கு நம்பிக்கையே பலம்- ஆன்மிக கதை

நாராயணரின் தீவிர பக்தராக இருந்தார், அந்த துறவி. அவர் பல தலங்களுக்குச் சென்று பெருமாளை தரிசித்து வந்து கொண்டிருந்தார். அவர் அப்படி செல்லும் இடங்களில் எல்லாம், அவரது தோற்றத்தைப் பார்த்து, அவரை அங்கிருந்த மக்கள் அனைவரும் வணங்கி ஆசி பெற்றுச் சென்றார்கள். அதில் அவருக்கு ஒரு பெருமிதமும் இருந்தது. ஒரு முறை அந்த துறவி, விவசாயம் செழித்திருந்த ஒரு ஊருக்குள் நுழைந்தார். அந்த வழியாகத்தான், அவர் அடுத்து வழிபட வேண்டிய திருத்தலத் திற்குச் செல்ல வேண்டியதிருந்தது.

ஊருக்கு மத்தியில் இருந்து மரத்தின் அடியில் அமர்ந்தார், துறவி. ஆனால் கிராம மக்கள் அனைவரும் வேளாண் பணியில் பரபரப்பாக இருந்ததால், துறவியை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் துறவிக்கு கோபம் வந்துவிட்டது. அவர் உடனடியாக, “இந்த ஊரில் இன்னும் 50 ஆண்டு களுக்கு மழையே பெய்யாது. வானம் பொய்த்து விடும்” என்று சாபமிட்டார்.

வைகுண்டத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, ‘தன்னுடைய பக்தன், மக்களின் நிலையைப் பற்றி சிந்திக்காமல் இப்படி ஒரு சாபத்தை அளித்துவிட்டானே. இவனுக்கு நாமும் துணை போக வேண்டியிருக்கிறதே’ என்று வருத்தப்பட்டவர், இருப்பினும் பக்தனுக்காக அதற்கு துணை போக முடிவு செய்தார். இதையடுத்து அவர் தன் கரத்தில் இருக்கும் சங்கை, தன் தலைக்கு கீழே வைத்து படுத்து விட்டார். விஷ்ணுவின் சங்குக்கும், மழைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழலாம். வருண பகவான் மழை கடவுளாக இருந்தாலும், திருமால் சங்கு ஊதி கொடுக்கும் இசைவின்படியே அவர் மழையை பெய்விப்பதாக சொல்லப்படுகிறது.

துறவி அளித்த சாபத்தினைக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும், மரத்தின் அருகில் குவிந்தனர். துறவியின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். ஆனால் முனிவரோ, “சாபத்திற்கு விமோசனம் கிடையாது” என்று கூறிவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல், துறவியின் காலடியிலேயே ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்துவிட்டனர். இன்னும் 50 வருடத்திற்கு மழை பெய்யாது என்றால், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஊர் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது. அனைவரும் கவலையோடு துறவியை சாந்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றன. ஒரு வாரம் கடந்து விட்டது.

அதே நேரம் ஊரில் இருந்த ஒரு விவசாயி மட்டும், தினமும் தன்னுடைய நிலத்திற்குச் சென்று, நிலத்தை உழுது வேளாண் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை அழைத்து, “ஏனப்பா.. துறவி அளித்த சாபத்தால், நம்முடைய ஊரில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு மழை பெய்யாதே.. நீ ஏன் வீணாக உழவு செய்து கொண்டிருக் கிறாய்?” என்று கேட்டனர்.

அதற்கு அந்த விவசாயி, “50 வருடங்கள் மழை பெய்யாது என்று எனக்கும் தெரியும். ஆனால் உங்களைப் போலவே, நானும் இப்படி உட்கார்ந்து விட்டால், இன்னும் 50 வருடங்களுக்குப் பிறகு, எப்படி உழவு செய்வது என்பதே எனக்கு மறந்து போய்விடும். அதனால்தான் தினமும் ஒரு முறை நிலத்தை உழுது கொண்டிருக்கிறேன்” என்றான். அந்த பதிலைக்கேட்ட ஊர் மக்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விட்டனர். அந்த விவசாயி சொன்னதில் ஓர் உண்மை இருப்பதை அனைவரும் உணர்ந்தனர். மரத்தடியில் இருந்த துறவியும் கூட அந்த விவசாயியின் வார்த்தையைக் கேட்டு மனம் உருகிப்போனார். அவர் தன்னுடைய சாபத்தை திரும்பப் பெற முன்வந்தார்.

இந்த நிலையில் அந்த விவசாயி சொன்னதை, திருப்பாற்கடலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவுக்கு ஓர் அச்சம் ஏற்பட்டுவிட்டது. ‘50 வருடமாக சங்கை ஊதாமல் இருந்தால், எப்படி ஊதுவது என்பது நமக்கு மறந்து போய்விடுமோ’ என்று நினைத்தவர், சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். இது ஒன்று போதாதா? அடுத்த நொடியே அந்த ஊரில் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது.

You may also like

Translate »