மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்ற சிறப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து முழு ஈடுபாட்டுடன் சிவ பெருமானை நினைத்து வழிபடும் ஒரு இரவாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மாத சிவராத்திரியின் முழு பலனை அடைவது எப்படி என்பதை இப்பதிவில் நாம் காணலாம்.
சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
புராணங்களில் மகா சிவராத்திரியை குறித்த பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. எல்லா கதைகளிலும் குறிப்பிடப்பட்டு கூறப்படும் ஒரு பலன் என்றால் அது ‘இறுதி மோட்சம்’ என்பது தான். மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் பெறுவோம்.
மாத சிவராத்திரிகளில் விரதம் இருந்து உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம். சிவனை நினைத்து நெஞ்சுருகி விழித்திருப்பதன் மூலம் மகாசிவராத்திரியின் முழு பலனையும் அடையலாம் என்கிறது சாஸ்திரம்.