Home ஆன்மீக செய்திகள் பித்ரு தோஷத்தை அறியும் வழிமுறை

பித்ரு தோஷத்தை அறியும் வழிமுறை

by admin
Pitru-Dosha_பித்ரு தோஷத்தை அறியும் வழிமுறை

ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில், மனக் கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல் போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகத்தால் அவதிப்படும். அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரை பாதிக்கும். இந்த பாதிப்பைத் தான் ‘பித்ரு தோஷம்’ என்கிறார்கள்.

ஒருவர் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவராகவும் இருந்து இறந்தால், அவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும், அந்த குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறையும். ஆனால் ஒருவர் பாவம் செய்தவராகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்துக்களை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற குற்றங்களால் பிறருக்கு தீங்கு செய்வராக இருந்தால், அவரது இறப்புக்குப் பின் கண்டிப்பாக பித்ரு காரியங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும். இறந்தவரின் ஆன்மாவுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், அது நரக வேதனையில், பசி, தாகத்தால் அவதிப்பட்டு அல்லல்படும். அந்த ஆன்மாவுடைய வேதனையின் தாக்கம், குடும்பத்தை மிகுந்த வீரியத்துடன் தாக்கும்.

ஒருவரது வீட்டில் பித்ரு தோஷம் இருந்தால், அந்த வீட்டில் லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும். குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள். சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வார்கள். குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும். தான் வளர்க்கும் பசுக்களுக்கு உணவளிக்க முடியாமல் போகும் நிலை உண்டாகும். நல்ல நண்பனோடு விரோதிக்க நேரிடும். கெட்ட நட்புகள்தான் அருகில் இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட முடியாமல், வாழ்நாள் வீணாகும். யாகம், ஹோமம் எதுவும் செய்ய முடியாமல் தடை உண்டாகும்.

தாய், தந்தையை மதிக்காத பிள்ளைகள் உருவாவர். பெற்றோரை அவமதிக்கும் செயல்கள் அதிகரிக்கும். பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும். இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும். அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும். பிதுர் கர்மங்களை செய்வதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும் என்று கருண புராணம் சொல்கிறது.

இதுபோன்ற பிரச்சினை தீர வேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்ய வேண்டும். பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். அமாவாசை, பவுர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும். அதிகாலை முதல் இரவு 7மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விடுங்கள். ஆதரவற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். அன்று மாலை சிவன் அல்லது ஏதாவது உங்களுக்கு பிடித்த கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். இதன் மூலம் உங்களுகான பித்ரு தோஷம் நீங்குவதுடன், எந்த தோஷமும் அண்டாது.

You may also like

Translate »