சுபகாரியங்கள் செய்வதற்கான சிறந்த மாதங்களில் ஒன்றாக ஆனி மாதம் இருக்கிறது. சூரியன் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியில் இருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் ஆகும். சூரியன், புதன் இரண்டும் நட்பு கிரகங்கள் என்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் நன்மையான பலன்களை தரவல்ல மாதமாக இருக்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறப்பான நன்மைகளை அளிக்க வல்லதாகும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தினமாக ஆனி மாத தேய்பிறை பிரதோஷம் வருகிறது. இந்த தினத்தில் நாம் சிவபெருமானை எப்படி வழிபட்டால் பல அற்புதமான பலன்களை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். நாளைய ஆனி தேய்பிறை பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வருவதால் மிகவும் விசேஷமானதாகும். ஆனி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.’
பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.”’
ஆனி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. ஆனி பிரதோஷத்தில் சிவனை வழிபடுவதால் சூரிய கிரக தோஷங்கள் நீங்குகிறது. கண்பார்வை குறைபாடுகளையும் தீர்க்கிறது. மேலும் பிரதோஷ காலத்தில் காராம் பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை எனும் பண்டைய நூல் கூறுகிறது. வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பொருள் வரவு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும்.