அம்பாளின் திருத்தலங்கள் பலவற்றில், ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டிருப்பதை நாம் அறிந்திருப்போம். இந்த ஸ்ரீசக்கரங்களை அம்பிகையின் திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்தவராக ஆதிசங்கரரை நாம் பார்க்கிறோம். அம்பிகையின் உக்கிரத்தை தணிப்பதற்காக, சிவபெருமானால் உருவாக்கப்பட்டது, இந்த ஸ்ரீசக்கரம் என்று சொல்லப்படுகிறது. ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்பாக இந்த ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும், முக்கோணங்களுமாகத் தெரியும் இந்த ஸ்ரீசக்கரம், அம்பிகையின் சர்வ சக்தியும் பொருந்தியதாக திகழ்கிறது.
ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும், அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர். மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமாக இந்த ஸ்ரீசக்கரம் விளங்குகின்றது. உலகை காத்தருளும் அம்பிகையானவள், ஈசனோடு சேர்ந்து மகா மேருவில் வீற்றிருப்பவள். எனவே அந்த மகாமேருவின் உருவத்தையே இந்த ஸ்ரீசக்கரத்திலும் பொறிக்கிறார்கள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீ சக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.
கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்பாகவும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன்பு உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன்பு இருக்கும் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தன்னுடைய ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும், மற்றொரு காதில் சிவசக்கர தாடங்கத்தையும் அணிந்துள்ளார்.
கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம், அந்த அன்னையின் முன்பாக ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம் தான்.
சென்னை-காளிகாம்பாள் ஆலயத்திலும் ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சன்னிதியிலும் ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சென்னை-நங்கநல்லூரில் ராஜராஜேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு திதி நித்யா தேவிகளின் சக்கரங்களும், விக்கிரகங்களும் இரு புறமும் இருக்க, 16 படிகளின் மேல் மகாமேருவுடன் வீற்றிருக்கிறாள், அன்னை.
திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்கரத்தை தனி சன்னிதியில் தரிசிக்கலாம்.
தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் எந்திர வடிவாக அருள்கிறார்கள்.
திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சன்னிதி ஸ்ரீசக்கர வடிவில் அமைந்திருக்கிறது.
மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலசுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்கரம் வைத்து வழிபடப்படுகிறது.
திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன்பு மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.
புன்னைநல்லூர் மாரியம்மனின் முன்பாகவும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இதனை பிரதிஷ்டை செய்தவர், சதாசிவபிரம்மேந்திரர் என்ற மகான்.