🌸ஐஸ்வரியத்தையும் சந்தோஷத்தையும் பெருக்கும் அருள்தரும் ஸ்படிக லிங்கம் வழிபாடு !
🌸ஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து விழுந்த ஒரு துளியாக கருதப்படுகிறது. ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட வடிவமும், சுமார் ஒரு அங்குலம் முதல் பத்து அங்குலம் வரையில் உயரமும், ஆறு பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனி சிறப்பானது ஒரு வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அளவிடப்பட்டுள்ளது.
🌸நவக்கிரக சஞ்சார நிலைகளால், மனிதர்களுக்கு ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சிரமமான பலன்களை நிவர்த்தி செய்யக்கூடியதாக நம்பப்படுகிறது. ஒரு ஸ்படிக லிங்கமானது, கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இயற்கையான சுயம்பு லிங்க வடிவத்திலேயே, பூமியின் ஆழங்களிலிருந்து கிடைக்கக்கூடிய கண்ணாடி போன்ற ஒரு வகை கல்தான் ‘கிரிஸ்டல்’ எனப்படும் ‘ஸ்படிகம்’ ஆகும். அதன் காரணமாக ஸ்படிக லிங்கமானது அரிய சக்திகளை உடையதாக கருதப்படுகிறது.
🌸ஸ்படிக லிங்கத்தின் முன்னர் சிவ வழிபாடு மட்டும் செய்யவேண்டும் என்று வழிமுறைகள் ஏதுமில்லை. பொருளாதார வளம் வேண்டுவோர் மகாலட்சுமியின் அருள் வேண்டி ‘லட்சுமி அஷ்டோத்திர மந்திரத்தை’ ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால், ஜபத்தின் பலன் பல மடங்கு பெருகி நன்மைகளை தரும்.
🌸ஸ்படிக லிங்க வழிபாட்டை வீட்டில் நித்திய பூஜையாகவும் செய்து வரலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பசும்பால், பழச்சாறு, பன்னீர் மற்றும் மஞ்சள் கலந்த நீராலும் அபிஷேகம் செய்து, பூக்கள் கொண்டு பூஜை செய்து, தூப, தீபம் ஆரார்த்தனைகள் செய்து வழிபட்டால் சகல பாவங்களும் விலகி விடுவதாக மகான்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த பூஜையின் காரணமாக வீடுகளில் ஐஸ்வரியமும், சந்தோஷமும் அதிகரிக்கும்.
🌸பல்வேறு தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் ஸ்படிக லிங்க வடிவங்களை வீட்டில் அல்லது தங்களது தொழில் அல்லது வியாபார இடங்களில் வைத்தும் அன்றாட பூஜைகளை செய்து வரலாம். தக்க முறையில் பூஜிக்கும் காரணத்தால் ஸ்படிகமானது நாளடைவில், படிப்படியாக சிறப்பான ஆகர்ஷண சக்தி உள்ளதாக மாறுகிறது. அதனால் தொழில் அல்லது வியாபார விருத்தியானது பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.