Home ஆன்மீக செய்திகள் பல கோடி மடங்கு பலனை வாரி வழங்கும் ஸ்படிக லிங்கங்களும் அதன் சிறப்பும்

பல கோடி மடங்கு பலனை வாரி வழங்கும் ஸ்படிக லிங்கங்களும் அதன் சிறப்பும்

by admin
பல கோடி மடங்கு பலனை வாரி வழங்கும் ஸ்படிக லிங்கங்களும் அதன் சிறப்பும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பல கோடி மடங்கு பலனை வாரி வழங்கும் ஸ்படிக லிங்கங்களும் அதன் சிறப்பும் பற்றி பல அன்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க இன்று சித்தர்களின் குரலில் விரிவாக பகிர்கிறேன். அவசியம் உணர்ந்து படியுங்கள்….

 அந்த லிங்கங்கள் ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையான சக்தியைய் அதிரக்கூடிய தன்மை உடையது என்று தெரியுமா?

சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அவை செய்யப்படும் பொருளுக்கேற்ப அருள் வழங்கும் தன்மையவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த முப்பத்திரண்டு வகையிலும் சேராமல் சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம். அதனால் இது மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படுகிறது.

 ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனிலிருந்து விழுந்ததாகக் கூறுவோரும் உண்டு. ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும். இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன் மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு.

 ஸ்படிகம் இமய மலையின் அடி ஆழத்திலும் விந்திய மலை மற்றும் சங்ககிரி மலையின் சில பகுதிகளிலும் கிடைக்கும். இது மிகவும் விலைமதிப்புள்ளது. பாரதத்தின் வடபகுதியில் இருந்த ஸ்படிகம் தென்பகுதி வந்தது சுவாரசியமான கதை. ஆதிசங்கரர் கைலாய மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிவபெருமான் அவருக்குக் காட்சி அளித்து, ஐந்து ஸ்படிக லிங்கங்களை அளித்து அவற்றை பூஜிக்கும் முறை பற்றியும் விளக்கமாக கூறியருளினார். அவை முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் எனப் பெயர் கொண்டவை. அந்தப் பஞ்ச லிங்கங்களை ஆதிசங்கரர் ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.

முக்தி லிங்கம் – கேதார்நாத்,

வரலிங்கம் – நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம்,

போகலிங்கம் -சிருங்கேரி,

யோகலிங்கம் – காஞ்சி.

சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது. முன்னால் இருந்த ஸ்படிக லிங்கத்தில் கீறல்கள் விழுந்ததால் அதற்குப் பதிலாக, இமயமலையிலிருந்து 6 இன்ச் உயர லிங்கம் எடுத்து வரப்பட்டு 2011-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்குதான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது. இது பழம் பெருமை வாய்ந்தது.

அதே போல ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலையில் அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரை, இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. கோயிலில் இந்த தரிசனத்திற்கென்று தனி டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இந்த வழிபாடு முடிந்ததும் கோயிலில் இருக்கும் எல்லா தீர்த்தங்களிலும் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.

இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோயில்கள் தவிர வேறு சில இடங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன.

வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை (நிராகார) குறிக்கும் வகையிலும், அவனின் குணமற்ற (நிர்க்குண) தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன. ஸ்படிகம், பக்கத்தில் உள்ள பொருளின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது. இதன் இருப்பு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம்.

 ஸ்படிகத்தின் ஒவ்வொரு அணுவிலும் சிவனின் குற்றமற்ற தூய்மை நிறைந்திருக்கிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் விரிவாகக் கூறப்படுகிறது.

 சரி! இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை பயன் பெற எப்படி வழிபட வேண்டும்?

ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்க கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்கள் ஒரு பாண லிங்கத்துக்குச் சமம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாண லிங்கம் என்பது கண்டகி நதிக்கரையில் இயற்கையாகக் கிடைக்கும் சாளக்கிராமங்களைப் போல நர்மதை நதியில் கிடைக்கும் இயற்கையான லிங்கங்களாகும்.

ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.

பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும்.

ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.

ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா? வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும் பழச்சாறுகளாலும் தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து, பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும்.

ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு, இது தாந்திரீகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாகும். மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பின்னி சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிகலிங்க வழிபாடு செய்வார்கள். அதனால் அபிசார தோஷம் (ஏவல் பில்லி சூனியங்களால் பிரச்சினை) உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன் மனமொடுங்கி தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.

 வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ தங்கள் வியாபாரக் கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண சக்தி படைத்ததாக மாறுகிறது. அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் மேலும் விருத்தியடையும். மாணவர்களும் கூட ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். தொடர்ந்து இதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாலே நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை கிட்டும். இதற்கு தினமும் பூஜை செய்ய நல்ல மனத்திண்மையும் நேர் வழியில் செல்ல விருப்பமும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஸ்படிகம் நன்மையே செய்யும்.

ஸ்படிக லிங்கத்தின் மகத்துவம் பற்றி ருத்ரத்தில்  சொல்லும் அபூர்வ ஸ்லோகம்:-

******************************************************************************

அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிருஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். அதில் லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தியிருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது.

ஸ்ரீ ருத்ராபிஷேகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷேகம் பண்ணுவது வழக்கம்.

அந்த சுலோகம்:

*****************

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன

ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்

ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்

பூர்ணேந்து வாந்தாம்ருதை:

அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்

ருத்ராநுவாகான் ஜபன்

த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே(அ) த்ருதபதம் விப்ரோ மிஷிஞ்சேத் சிவம் ||

இந்த சுலோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது?

                   பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கின்ற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முடியாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண -தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. பரப்பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம்.

பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்ம வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது தெரியும்.

மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. ‘பூர்ணேந்து’ என்று சுலோகத்தில் வருவது, ‘பூர்ண இந்து!’; இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட ‘ஸகள’ ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டு சந்திரமௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா ‘நிஷ்கள’ தத்வமாயிருக்கிறபோது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக ஸகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிருதமே கங்கை மாதிரிக் கொட்டுகிறது.

ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர்லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் சுலோகம், இதை எல்லாம் அறிவுறுத்துகிறது. ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான்.

ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது. லிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவற்றுக்கு உண்டு. முக்கோணத்துக்கு, சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்கா காரம் காட்டுகிறது. சரியான வட்டமாக (Circle)இல்லாமல், லிங்கம் நீள் வட்டமாக (ellipse)இருக்கிறது. பிரபஞ்சமே ‘எல்லிப்டிக்’காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்ட லத்தை (solar system)எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது” என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ‘ஆவிஸ்புரத்’ என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.

யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; ஆனால், அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அனுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற் காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமான தோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்வியரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார்.

இப்படி ரூபத்தைக் காட்டினாலும் வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை. அதாவது, ‘ஆதியும், அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம்’ என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அதே மாதிரி தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.

அடி முடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத் துக்கும் பூமிக்குமாகப் பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்.

பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தம் சிவபெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம் அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மா ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்; சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாத வரையே, ‘என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்’ என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டு விடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அனுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதா லேயே, அவருக்கு ‘ஆசுதோஷி’ என்று ஒரு பெயர் இருக்கிறது.

சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை.

ஸ்படிக லிங்க வழிபாடு செய்வோருக்கு !

*******************************************

ஜாக்கிரதையா இருங்க !!

பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள்.

இதை வழிபடும்போது,மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில் என்ன தோன்ற வேண்டும் தெரியுமா?

ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது. ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும்.

வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும். அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும்.

அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.

நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும். எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

நமக்கு ஒரு கஷ்டம் என்றால், “”நீ பார்த்துக்கொள்” என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு. ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்.

ஆன்மீகம் நாட்டம் உடைய அன்பர்கள் அனைவருக்கும் …..

ஓம் சிவாய நம

ஓம் மஹேச்வராய நம

ஓம் பரமேஸ்வராய நம

You may also like

Leave a Comment

Translate »