கடலூர் :
வடலூரில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்தியஞான சபையில் இன்று(வியாழக்கிழமை) ஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக அங்கு பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.
அதன்படி காலை 6 மணிக்கு நடந்த முதல் ஜோதி தரிசனத்தை காண, சத்திய ஞானசபையின் முன்பு ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டனர். பின்னர் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது.
இதை பார்த்த அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற மகா மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் செய்தனர்.கொரோனா ஊரடங்கு விதிமுறையின் காரணமாக அன்னாதானம் வழங்கவும் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் என எதற்கும் அனுமதி இல்லை. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின் வருகை என்பது குறைவாகவே காணப்பட்டது.
தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.