Home ஆன்மீக செய்திகள் திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில்

திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில்

by admin
karaikandeswarar-Mahadevar-temple-kanyakumari_திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த இக்கோவிலை ஊர்மக்கள் கடந்த 2013-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் செய்து மஹாகும்பாபிஷேகம் நடத்தி புதுப்பொலிவடையச் செய்திருக்கிறார்கள். ஈஸ்வரன் -சுயம்புவகை -அம்மை-அப்பனாக -நடராஜராக நவகிரகங்களை தன்னுள் அடக்கி முப்பரிமாணமாக காட்சி தரும் பரிகார ஸ்தலம் திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகா தேவர் திருக்கோவில்.

தலபுராணம்:

கரைகண்டேஸ்வரர் அல்லது கறைகண்டேஸ்வரர் என்பது மூலவரின் பெயர். இக்கோவில் குறித்த கதை பாற்கடல் கடைந்த கதையோடு தொடர்புடையது.பாற்கடல் கடைந்தபோது வந்த விஷத்தை சிவன் அருந்தினார். பார்வதி சிவனின் கழுத்தில் கை வைத்து பிடித்தாள்.அதனால் விஷம்(கறை) கழுத்தில்(கண்டம்) நின்றது. சிவன் கறைகண்ட ஈஸ்வரன் எனப்பட்டான். அந்த ஈஸ்வரன் குடிகொண்ட இடம் இது.

கோவிலின் அமைப்பு:

இக்கோவில் கட்டுமானம் பழைய அமைப்புடையது. கோவில் வளாகத்தினுள் ஆங்காங்கே மரங்களும், செடிகளும் நிற்கின்றன. கோவிலின் முகப்பு மண்டபத்தில் குழல் ஊதும் கண்ணன், அர்ச்சுனன், தபசு என சில சிற்பங்கள் உள்ளன.முகப்பு மண்டபத்தை அடுத்து திறந்த வெளி கிழக்கு பிரகாரம் பிற மூன்று பிரகாரங்களும் வெட்ட வெளிப்பகுதி.

கோவிலின் ஷோபனப்படி வழி ஏறி சிறிய முன்மண்டபத்தைக் கடந்தால் காண்பது முகப்பு மண்டபம். இது சோழர் பாணியில் அமைந்த பழைய கட்டுமானம். இதை கடந்து சென்றால் சிறிய அர்த்தமண்டபம் உட்பிரகாரம்.வலப்புறம் வலம்புரி விநாயகர், நடுவே நந்தீஸ்வரர். கருவறையை சுற்றிய அதிர்ஷ்டான அமைப்பு இக்கோவிலின் பழைமையைக் காட்டுகிறது. கருவறை, அந்தராளம் என இரு அறைகளைக் கொண்டது. விமானம் 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஏகதள விமானம். சுதையால் ஆனது.தற்போது பழைய கட்டுமானப் பணிகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

கருவறை:

கருவறை கட்டுமானம் மிக பழையது. 12-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.இதற்கு கல்வெட்டு சான்றும் உண்டு. மூலவர் லிங்க வடிவானவர். லிங்கத்தின் தட்டையான அமைப்பும் ஆவுடையும் நீர்விழும் தூம்பும் பழைமையைக் காட்டுகிறது.

மூலவர் மகாதேவர் நவகிரகங்களை தன்னுள் அடக்கி லிங்கோற்பவராக – அம்பாள் அருகில் – வலப்புறம் வல்புரி விநாயகர் தனி சன்னதி- பெரிய நந்தீஸ்வரர்-ஆல் அரசு வேம்பு மும்மரங்கள் சூழ்ந்த இடம் ஆதிசேஷன், வனதர்ம சாஸ்தா-நாகராஜர் சன்னதி -கரமகரிஷி சன்னதி- மகா காலபைரவர் சன்னதி ஆகியவைகள் இருக்கின்றன.

கோவிலில் மார்கழிமாதம் மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது .இதில் பால்குடம்,சந்தனக்குடம் எடுத்தல் ,யானை பவனி வருதல் ஆகியன உண்டு.சித்திரை விசு,திருகார்த்திகை விழா, சிவராத்திரி போன்ற விழாக்கள் விமர்சையாக நடக்கின்றன.

குழந்தை வரம் கொடுக்கும் மகாதேவர்:

இக்கோவில் குழந்தை இல்லாதவர்கள் மனமுருகி வேண்டினால் இறைவன் உடனே குழந்தை வரத்தை கொடுத்து குடும்பத்தை தழைக்க வைக்கிறார். வெளியூர் வெளி மாநிலங்களிலும் இருந்து குழந்தை வரம் வேண்டி கணிசமான பக்தர்கள் வருகிறார்கள். வேண்டும் காரியங்கள் உடனே நிறை வேறுகின்றன.
கோவிலுக்கு செல்லும் வழி:

கேரளா மற்றும் குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் குளச்சல் ,மண்டைகாடு, அம்மாண்டிவிளை வழியாக திருநயினார் குறிச்சிக்கு வரலாம்.அல்லது திங்கள்சந்தை வழியாக வரலாம். தமிழகம் மற்றும் குமரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் திங்கள் சந்தை வழியாகவும், ஆசாரிபள்ளம், வெள்ளி சந்தை வழியாக திருநயினார் குறிச்சிக்கு வந்து மகாதேவரை தரிசிக்கலாம்.

கோவிலில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு அபிஷேகம், 6-மணிக்கு நிர்மால்ய பூஜை, 7-மணிக்கு உஷபூஜை, 9-மணிக்கு உச்ச பூஜை, 9.30-க்கு பலிபூஜை நடைபெறுகிறது.

மாலையில் 4.45 -க்கு நடை திறக்கப்பட்டு ,6.30-மணிக்கு சாயரட்சை, தீபாராதனை,7.30- மணிக்கு அத்தாழ பூஜை, பலிபூஜை, 8 மணிக்கு திருநடை சார்த்தப்படுகிறது.

You may also like

Leave a Comment

Translate »