Home ஆன்மீக செய்திகள் ஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..

ஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..

by admin
Murugan-arupadai-veedu_ஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.

தேவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த சூரபதுமனையும், அவனது சகோதரர்களையும் அழிப்பதற்காக ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகப்பெருமான். அவர், சூரபதுமனின் ஆணவத்தை அழித்து அவனை தனக்குள் ஐக்கியப்படுத்திக்கொண்ட நாளை, ‘சூரசம்ஹார தினம்’ என்ற வகையில் கந்தசஷ்டி நாள் அன்று கொண்டாடி வருகிறோம். இந்த நாளில்

திருப்பரங்குன்றம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானது, திருப்பரங்குன்றம் திருத்தலம். சூரபதுமனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தேவர்களை, அந்த அசுரனை வதம் செய்து விடுவித்தார், முருகப்பெருமான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, தேவேந்திரன் தன்னுடைய மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தான். அதன்படி முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்புமிக்க தலம் இது. இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

ஆனாலும் அந்த உருவம் புடைப்புச் சிற்பமாக இருப்பதால், ஞானத்தின் அடையாளமாக கருதப்படும் வேலுக்குத் தான் இங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆரம்ப காலத்தில் இங்கு வேல் வழிபாடு மட்டுமே இருந்ததாக கூறுப்படுகிறது. இங்கு சரவணப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமணத் தடை இருப்பவர்கள், இந்தக் கோவிலுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும். பவுர்ணமி நாட்களில், திருப்பரங்குன்றம் மலையை வலம் வந்தால் நன்மைகள் பலவும் கிடைக்கும்.

மதுரையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருப்பரங்குன்றம் திருக்கோவில்.

திருச்செந்தூர்

ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் இது. மேலும் கடற்கரையோரம் அமைந்த ஒரே திருக்கோவிலும் இதுதான். பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோவில் அனைத்தும் ஏதாவது ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருக்கும். ஆனால் திருச்செந்தூர் திருத்தலம் சமதளத்தில் அமைந்திருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் இதுவும் முன்காலத்தில் குன்றாக இருந்த இடம்தான் என்றும், பின்னாளில் கடல் மட்ட உயரம் காரணமாக சமதளமாக மாறிப்போனதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன. இங்கு குன்று இருந்ததற்கு சான்றாக, தற்போது இருக்கும் வள்ளிக்குகை பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள்.

சூரபதுமனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் இதுவாகும். இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள்கிறார் முருகப்பெருமான். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், அதன் ஒருபகுதியாக நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வும், உலக பிரசித்திப்பெற்றதாகும். தற்போது கொரோனா தடைக்காலம் என்பதால், அந்த நிகழ்வுகள் சில கட்டுப்பாட்டுடன் நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பால் ஊமையான குமரகுருபர சுவாமிகள், தனது ஐந்தாவது வயதில் இத்தலம் வந்து பேசும் திறனைப் பெற்றார் என்பது வராலாற்று பதிவு. இங்குள்ள முருகப்பெருமான், தன் கைகளில் ருத்ராட்ச மாலையும், தாமரை மலரும் கொண்டு பூஜிக்கும் அருட்கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் பூஜித்த பஞ்ச லிங்கங்கள் உள்ளன. இதனை பெரும்பாலான மக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கருவறையின் வடக்குப் பகுதியில் உள்ள சிறிய வாசல் வழியாக நுழைந்து சென்றால், இந்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்க முடியும். இந்த ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரம் மிகவும் பெரியது. மூலவரான சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்குச் செல்ல ரயில் வசதிகளும், பேருந்து வசதிகளும் உண்டு. தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர் திருத்தலம்.

திருவாவினன்குடி (பழநி)

கந்தனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது தலம் இது. பழநி என்ற பெயர் தற்போது நிலைத்திருந்தாலும், இதன் ஆதிகால பெயர் ‘திருவாவினன்குடி’ என்பதாகும். மலையடிவாரத்தில் சற்று மேல்புறத்தில் ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது. திருமகளும், அலைமகளும், காமதேனுவும் பூஜித்த இடம் இது. அதேபோல் மலை உச்சியில் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. மலை உச்சியில் உள்ள முருகனின் சிலையானது, நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. இதனைச் செய்தவர், போகர் என்னும் சித்தர் ஆவார். சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில்தான், இந்த நவபாஷாண சிலையை போகர் இங்கு நிறுவியதாக சொல்லப்படுகிறது. எனவே அந்த அக்னி நட்சத்திர நாட்கள் இங்கு விசேஷசமாக கொண்டாடப்படும்.

மலை உச்சியில் வீற்றிருக்கும் பாலதண்டாயுதபாணி, ஆண்டி கோலத்தில் பாலகனாக அருள்பாலிக்கிறார். இவருக்கு செய்யப்படும் ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமானதாகும். இங்கு இறைவனின் நவபாஷாண சிலையின் மீது சாத்தப்பட்ட சந்தனம், மிகவும் புனிதமான பிணி தீர்க்கும் மருந்தாக மாறுகிறது. இங்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தமும், விபூதியும் கூட நம்பினோரின் நோய்களை நீக்கி நன்மை செய்கிறது. இந்த ஆலயத்திற்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். போகர் முனிவருடன் அருணகிரிநாதர், நந்தியடிகள், தேவராய சுவாமிகள், நக்கீரர் போன்ற எண்ணற்ற முனிவர்கள், சித்தர்கள் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு செல்ல, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து வசதி உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் பழநி திருக்கோவில் அமைந்துள்ளது.

திருவேரகம் (சுவாமிமலை)

முருகப்பெருமான், தன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்த இடம் இந்த சுவாமிமலை. இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவது திருத்தலம். சுவாமி என்பது இங்கு எல்லோருக்கும் பெரியவராகிய சிவபெருமானையே குறிக்கிறது. இருப்பினும் மகனுக்கு சீடனாக இருந்து ஈஸ்வரன் உபதேசம் பெற்றதால், குருவாகிய முருகனுக்கு மேல் பகுதியிலும், சிவனுக்கு கீழ் பகுதியிலும் சன்னிதிகள் அமைந்துள்ளது. இங்கு உள்ள 64 படிகளில், 60 படிகள் 60 தமிழ் ஆண்டுகளையும், 4 படிகள் 4 யுகங்களையும் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவிலின் நுழைவு வாசலில் சிவனின் இடது தோளில், குழந்தையாக வடிவேலன் அமர்ந்து உபதேசம் செய்யும் காட்சி சுதை சிற்பமாக உள்ளது. பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற பல யோகிகள் பாமாலை பாடி இங்குள்ள முருகனை துதித்துள்ளனர். இங்கு வழிபடும் பக்தர்களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும். குரு மூர்த்த சன்னிதி என்பதால், இங்கு உபநயனம் எனப்படும் பூணூல் விழாக்கள் நடத்துவது பிரசித்தமாகும்.

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல ஏராளமான பேருந்துகள் இயங்குகின்றன.

திருத்தணி

சூரபதுமனையும், அவனது சகோதரர்களான சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரையும் முருகப்பெருமான் வதம் செய்தார். அவர்களின் அழிவு வழி போர்க் கோலத்துடன் ஆவேசமாக இருந்த முருகப்பெருமான், தன்னுடைய கோபம் தணிய வந்து அமர்ந்த தலம் திருத்தணி. ‘செரு’ என்றால் கோபம் என்றும், ‘தணி’ என்றால் ‘குறைதல்’ என்றும் பொருள். முன்காலத்தில் ‘செருத்தணி’ என்று அழைக்கப்பட்டு வந்த ஊரே, தற்போது ‘திருத்தணி’ என்று வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். திருச்செந்தூரில் சூரபதுமனை வதம் செய்தபிறகு வந்து கோபம் தணித்த இடம் இது என்பதால், இந்த ஆலயத்தில் முருகப்பெருமானின் பிரசித்திப் பெற்ற நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முருகப்பெருமானின் ஐந்தாவது வீடு இது. முருகப்பெருமான், குறத்திப் பெண்ணான வள்ளியை மணம் புரிந்து கொண்டதும் இந்தத் தலத்தில்தான். சுமார் 400 அடி உயரமுள்ள சிறிய மலைமீது பக்தர்கள் செல்ல வசதியாக 365 படிகள் உள்ளன. வருடத்தின் நாட்களை இப்படிகள் குறிப்பதாக சொல்லப்படுகிறது. தணிகைநாதன், தணிகேசர், தணிகைவள்ளல் என்றெல்லாம் புகழப்படும் இந்த தல நாயகனுக்கு ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம். வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் தொடங்கி வைத்த திருப்படி பூஜையும் இங்கு நடைபெறுகிறது. அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சிதர், ராமலிங்க வள்ளலார், கச்சியப்ப தேசிகர் போன்ற மகான்கள் இங்கு வந்து தணிகைநாதனின் அருட்பார்வை பெற்றுள்ளனர்.

சென்னையில் இருந்து சுமார் 86 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் திருத்தணி அமைந்துள்ளது.

பழமுதிர்சோலை (அழகர்மலை)

முருக பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைந்த தலம் இது. பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். அழகர்கோவிலுக்கு மேலே சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது திருக்கோவில் ஆகும். தொடக்க காலத்தில் முருகனின் அம்சமாக கருதப்படும் வேலுக்குதான் இங்கு வழிபாடு நடைபெற்று வந்தது. தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கும் முறை உள்ளது.

தமிழ் கடவுளான முருகன் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி அவ்வையிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இது. ‘பழம் உதிர் சோலை’ என்பதே ‘பழமுதிர்சோலை’ என்றானது.

இதன் அருகே உள்ள ‘நூபுரகங்கை’ என்னும் பிரசித்திபெற்ற தீர்த்தம் உள்ளது. இதன் உற்பத்தி ஸ்தானத்தை இன்னும் கண்டறிய முடியாததே இதன் சிறப்பு. இங்குள்ள தீர்த்தங்களுக்கு காவல் தெய்வமாக ராக்காயி அம்மன் உள்ளார். இவருக்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பழமுதிர்சோலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது என்பதால் இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.

மதுரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, அழகர்மலை.

You may also like

Leave a Comment

Translate »