Home ஆன்மீக செய்திகள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை திருத்தலம்

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை திருத்தலம்

by admin
Swamimalai-Murugan-Temple_முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை திருத்தலம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது, சுவாமிமலை திருத்தலம். இங்கு அருள்பாலிக்கும் முருகனை, ‘சுவாமிநாதன்’, ‘தகப்பன் சுவாமி’ போன்ற பெயர்களில் அழைக்கிறோம். இந்த ஆலயத்தில் குருவாக இருந்து தனது தந்தை சிவபெருமானுக்கு, முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராண தகவல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும், கும்ப கோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

பிரணவ உபதேசம் கேட்ட

சிவபெருமான்:

படைப்புத் தொழில் செய்து வந்ததால், ஆணவத்தில் இருந்தார் பிரம்மன். ஒருமுறை அவரை, முருகப் பெருமான் நேரில் சந்தித்தார். அப்போது பிரம்மனிடம், “படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?” என்று முருகப்பெருமான் கேட்டார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்குப் பின்னர்தான், பிரம்மனை விடுதலை செய்தார், முருகப்பெருமான்.

பிறகு சிவபெருமான், “பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று முருகனிடம் கேட்டார்.

“ஓ நன்றாகத் தெரியுமே” என்றார் முருகன்.

“அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன்.

“உரிய முறையில் கேட்டால் சொல்வேன்” என்றார் முருகன்.

அதன்படி சிவபெருமான் இத்தலத்தில், முருகனுக்கு சீடனாக தரையில் பவ்யமாக அமர்ந்தபடி, முருகனிடம் பிரணவத்திற்காக பொருளை உபதேசமாக பெற்றார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், ‘சுவாமிநாதன்’ என்றும், ‘பரமகுரு’ என்றும், ‘தகப்பன் சுவாமி’ என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் ‘சுவாமிமலை’ என்று அழைக்கப்பட்டது.

நான்கரை அடி உயர சுவாமிநாதன்:

இந்தக் கோவிலில் ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக, நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க, கருணாமூர்த்தியாகக் காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம்.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் ‘தாத்ரி’ என்பர். அதனால் சுவாமிமலையை ‘தாத்ரிகிரி’ என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் இதற்கு உண்டு.

மாடக்கோவில்:

சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோவில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும். சுவாமிமலையில் மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும், முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சி யில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோவிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.

மலைக்கோவிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் ‘கண்கொடுத்த கணபதி’ என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் இப்பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.

You may also like

Leave a Comment

Translate »