Home ஆன்மீக செய்திகள் சரஸ்வதி அருளும் திருத்தலங்கள்

சரஸ்வதி அருளும் திருத்தலங்கள்

by admin
Saraswati-Temples_சரஸ்வதி அருளும் திருத்தலங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கல்விக்கு அதிபதி என்று சொல்லப்படும் சரஸ்வதி தேவியை, சிறப்பு பூஜைகளுடன் வழிபடும் நாள் ‘சரஸ்வதி பூஜை’ ஆகும். இந்த நாளில் சரஸ்வதியை வழிபாடு செய்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கே சரஸ்வதி அருளும் சில திருத்தலங்களைப் பற்றி பார்க்கலாம்.

ராஜமாதங்கி

சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதி அம்சமான ராஜமாதங்கி அருள்பாலித்து வருகிறாள். கையில் வீணையுடன் அருளும் இந்த அன்னையின் இருபுறமும், சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள் காணப்படுகின்றன. சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் இருக்க, அதில் அழகாக அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ராஜமாதங்கி தேவி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் இவள், இந்தத் திருத்தலத்தில் அறிவு வடிவமாக நின்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.

பிரம்ம வித்யாம்பிகை

திருவெண்காடு தலத்தில் மூலவராக சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் பிரம்ம வித்யாம்பிகை ஆகியோர் அருள் செய்கிறார்கள். அம்பாள் அங்கே சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி மற்றும் ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. திருவெண்காடு தலத்தில் புத பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இக்கோவில் கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றுகிறது. சீர்காழியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

கல்வி வரம் அருளும் ஞான வாணி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் இருக்கிறது திருக்கண்டியூர். இங்கு பிரம்ம சிரகண் டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரம்மாவுக்கு தனிச் சன்னிதி உண்டு. அற்புதச் சிலா ரூபமாக சரஸ்வதி தேவி தனது கணவனோடு, நான்கு கரங்களுடன் கல்வியும், ஞானமும் தரும் ‘ஞான வாணி’யாக அருள்பாலிக்கிறாள். பிரம்மனின் படைப்பில் தம் சக்தியைச் செலுத்தி கலைச்செல்வம் வழங்கும் வெள்ளாடை நாயகி மற்றும் பிரம்மனை தரிசிப்பது சிறந்த பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோவிலுக்கு எதிரில் ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயம் உள்ளது. பிரம்மாவின் தலையைக் கொய்ததால், ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை இந்தப் பெருமாள் அகற்றியதாக ஐதீகம். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கும் தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

கபால கிண்ணத்தில் கலைமகள்

சென்னையில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியபாளையத்தில் ரேணுகாதேவி, பவானி பெரியபாளையத்து அம்மனாக வீற்றிருக்கிறாள். ஒரு கையில் சக்ராயுதமும், மற்றொரு கையில் கபாலக் கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபால கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவார்த்தம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், வீரம், கல்வி மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை. பக்தர்கள் ஞானம், கல்வி ஆகியவற்றை வேண்டி வழிபட்டு அருள் பெறுகின்றனர்.

கல்விக்கு அதிபதி

திண்டுக்கல் – வேடசந்தூர் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில், சவுந்தரராஜப் பெரு மாள் அருள்பாலிக்கும் தாடிக்கொம்பு தலம் அமைந்துள்ளது. மண்டூக மகரிஷி தனது சாபம் அகல தவமிருந்த இடம் இதுவாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்கு தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. திருவோணம் நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜையுடன், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நைவேத்தியம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்வது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதிதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

ஞான சரஸ்வதி

திருச்சியின் புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில், பிச்சாடனராக வந்து சிவபெருமான் தோஷம் நீங்கப்பெற்ற ‘பிச்சாண்டார் கோவில்’ இருக்கிறது. பிரம்மா, பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த இடம் இது என்கிறார்கள். அப்போது பெருமாள் தோன்றி, அங்கேயே இருக்க அனுமதி அளித்ததுடன், தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் உன்னைக் காண இங்கே வருவார்கள் என்று ஆசீர்வதித்து, தன் அருகில் வைத்துக் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இங்கு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தனியாக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுவதுடன், அவளது கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச் சுவடியோடும், ஜெபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.

வேத சரஸ்வதி

திருமறைகாடு எனப்படும் வேதாரண்யத்தில், வேதபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. நான்கு வேதங்களும் இத்தலத்து ஈஸ்வரனை வணங்கியதாக ஐதீகம். இக்கோவிலின் பிரகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி, தனது கைகளில் வீணை இல்லாமல், ஆனால் சுவடிகளை வைத்தபடி வீற்றிருக்கிறாள். இந்த தலத்து நாயகி அம்பிகையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், சரஸ்வதியின் கையில் வீணை இல்லை என்று சொல்லப்படுகிறது. இத்தலத்து அம்பிகையின் பெயர் ‘யாழைப் பழித்த மொழியம்மை’ என்பதாகும். திருத்துறைப்பூண்டியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

பேச்சியம்மன்

சரஸ்வதி என்ற வித்யா அம்சமாக, கிராமக் கோவில்களில் பேச்சியம்மன் அருள்புரிவதை பலரும் பார்த்திருப்போம். பேச்சு + ஆயி என்பதே ‘பேச்சாயி’ என்று சொல்லப்படும். பேச்சுத்திறன் குறைந்தவர்கள் இந்த பேச்சியம்மனை வேண்டிக்கொண்டால், குறைகள் தீர்ந்து பேச்சு திறம் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக மதுரை பேச்சியம்மன் கோவில் பிரபலமானது. தமிழகத்தின் பல கிராமங்களில் பேச்சியம்மனுக்கு தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.

You may also like

Leave a Comment

Translate »