திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகளும் கடந்த 14-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றன. ஒவ்வொரு ஆண்டும் யானை மீதும், பல்லக்கின் மீதும் இந்த சாமி சிலைகள் கொரோனா காரணமாக பல்லக்கில் மட்டும் எடுத்து செல்லப்பட்டு திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டன.
அங்கு சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நவராத்திரி விழா முடிந்ததை தொடர்ந்து 27-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சாமி சிலைகள் குமரிக்கு புறப்பட்டன. நேற்று முன்தினம் தமிழக-கேரள எல்லையான களியக்காவிளைக்கு சாமி சிலைகள் வந்தன. அங்கு சாமி சிலைகளுக்கு குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சாமிசிலைகள் நேற்று காலை 9 மணிக்கு பத்மநாபபுரம் வந்தடைந்தன.
அப்போது சாமி சிலைகளுக்கு அரண்மனை நுழைவாயிலில் பத்மநாபபுரம் பொதுமக்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள குளத்தில் சரஸ்வதி அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு பூஜையில் அமர்த்தப்பட்டது. பின்னர் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் வைத்து அறநிலையத்துறை மேலாளர் மோகனகுமார் குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணியிடம் வழங்கினார். பின்னர் அவரிடமிருந்து பத்மநாபபுரம் அரண்மனை பொறுப்பு அதிகாரி அஜித்குமார் உடைவாளை பெற்று அனந்த பத்மநாபசாமி முன்பு வைத்தார்.
வேளிமலை முருகன் சிலை குமாரகோவிலை சென்றடைந்தது. முன்னுதித்த நங்கை அம்மன் சிலை கல்குளம் மகாதேவர் கோவிலில் வைத்து பூஜை நடந்தது. அங்கிருந்து இன்று (சனிக்கிழமை) காலை முன்னுதித்தநங்கை அம்மன் புறப்பட்டு சுசீந்திரத்தை வந்தடையும். நிகழ்ச்சியில் தக்கலை பொறுப்பு துணை சூப்பிரண்டு பார்த்திபன், தேவாரக்கட்டு சரஸ்வதி கோவில் மேலாளர் சிவகுமார், தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.