Home ஆன்மீக செய்திகள் குருவின் ஆணையை நிறைவேற்றிய சுதீட்சணர்

குருவின் ஆணையை நிறைவேற்றிய சுதீட்சணர்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அகத்திய முனிவரிடம் ஞான உபதேசம் பெறுவதற்காக, அவரின் சீடனாக சேர்ந்திருந்தான், சுதீட்சணன். சிறுவன்தான் என்றாலும் புத்திக்கூர்மையில் அனைவரையும் விட அதிசிறந்தவனாக விளங்கினான். ஆனால் அவனுக்குள் இன்னும் சிறுபிள்ளையின் மனம் மாறாமல் இருந்தது.

ஒரு முறை அகத்தியர் புனிதப் பயணம் செல்ல விரும்பினார். அதற்கு முன்பாக சுதீட்சணனை அழைத்து, தனது பூஜை பெட்டியை அவனிடம் வழங்கினார். “நான் வரும் வரை இந்தப் பெட்டிக்குள் இருக்கும் சாளக்கிராமத்திற்கு வழிபாடு செய்து வா” என்று சொல்லிச் சென்றார்.

சுதீட்சணன் மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றியது. ‘தினமும் ஏரிக்குச் சென்று நீரை எடுத்து வந்து சாளக்கிராமத்திற்கு பூஜை செய்வதற்குப் பதிலாக, பூஜை பெட்டியை ஏரிக்கரைக்குக் கொண்டு சென்று, அங்கேயே வைத்து பூஜை செய்தால் என்ன? அங்கேயே அபிஷேகம் செய்ய நீர், நைவேத்தியத்திற்கு நாவல் பழம், அர்ச்சனைக்கு மலர்கள் என்று கிடைத்துவிடும். நமக்கும் பூஜை செய்வது சுலபம்’ என்று நினைத்தான்.

தான் நினைத்தபடியே பூஜை பெட்டியை ஏரிக்கரைக்கு எடுத்துச் சென்று சாளக்கிராமத்திற்கு வழிபாடு செய்தான். அது நாவல் பழங்கள் காய்த்துக் குலுங்கும் காலம். எனவே நாவல் மரத்தில் பெரிய அளவிலான நாவல்பழங்கள் கொத்துகொத்தாக காய்த்திருந்தன. அந்தப் பழங்களை மற்ற முனிவர்களின் குமாரர்கள் கல் எறிந்து வீழ்த்திக்கொண்டிருந்தனர். அதைக்கண்டதும் சுதீட்சணனின் பிஞ்சு மனமும் அந்த விளையாட்டில் ஈடுபட ஏங்கியது.

சாளக்கிராம பூஜையை மறந்ததோடு, அந்த சாளக்கிராம கல்லைக் கொண்டே நாவல் பழங்களை எறிந்து வீழ்த்தினான். கையில் கிடைத்த நாவல் பழங்களை ஆசை தீர தின்று முடித்தபிறகுதான் அவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. அவன் எறிந்த சாளக்கிராம கல், அந்த பெரிய மரக்கிளைகளின் இடையில்போய் சொருகிக் கொண்டது. அந்த மரப் பொந்தில் விஷப்பாம்பு ஒன்று இருந்தது. அதனால், அந்தக் கல்லை எடுக்க சுதீட்சணன் முயற்சிக்கவில்லை. சாளக்கிராம கல் இல்லாவிட்டால், குருவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று நினைத்த அந்தச் சிறுவன், பெரிய அளவிலான நாவல்பழ கொட்டைக்கு வண்ணம் தீட்டி, சந்தனம், குங்குமம் இட்டு, சாளக்கிராம கல்லுக்குப் பதிலாக அந்தப் பெட்டியில் வைத்துவிட்டான்.

அவன் போதாத நேரம், அன்று மாலையே அகத்திய முனிவர் யாத்திரை முடிந்து குடிலுக்கு திரும்பிவிட்டார். அவர் பூஜை பெட்டியை திறந்து சாளக்கிராமத்தை எடுத்துப் பார்த்தபோது, அது கொளகொளவென்று இருந்தது. அதுபற்றி அகத்தியர் கேட்டபோது, “தினமும் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்வதால் இப்படி ஆகிவிட்டது” என்று சிறுவனின் சக்திக்கு என்ன பொய் சொல்ல முடியுமோ அதைச் சொன்னான், சுதீட்சணன்.

அவன் சொன்ன பொய்யால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அகத்தியர், “சாளக்கிராமக்கல் என்பது நாராயணனின் அம்சம். அந்த நாராயணனையே தொலைத்துவிட்டாய். என் நாராயணனைக் கொண்டு வந்தால் இங்கு வா. இல்லையெனில் என் கண்ணில் படாதே” என்று கூறி குடிலில் இருந்து சுதீட்சணனை துரத்திவிட்டார்.

அவனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. தவறுக்கு பிராயசித்தம் தேட நினைத்தான். அதனால் குரு சொன்னது போலவே குடிலை விட்டு வெளியேற முடிவு செய்தான். குருவின் காலில் விழுந்து ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டான். வழிநெடுகிலும் எப்படியும் குருவின் மனதை மகிழ்ச்சிப்படுத்தி விடவேண்டும் என்ற எண்ணமே அவனுக்குள் மேலோங்கி இருந்தது. ‘என் உடலில் உயிர் இருக்குமேயானால், நாராயணனுடன் தான் என் குருவை சந்திக்க வருவேன்’ என்று சபதம் ஏற்றான்.

அகத்தியரிடம் இருந்து சென்ற சுதீட்சணன், தண்டகாரண்யத்தில் நீண்டகாலமாக தவம் செய்து வந்தான். கடுமையான தவம் காரணமாக, அவன் வளர்ந்தபின் ‘சுதீட்சண முனிவர்’ ஆனார்.

ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாச வாழ்க்கை மேற்கொண்டபோது, அவரை தரிசிக்கும் வாய்ப்பு சுதீட்சணருக்கு கிடைத்தது. ஆனால் ராமனை தரிசித்ததோடு, அவரை சுதீட்சணர் விட்டுவிட வில்லை. தன் குருவான அகத்தியரை சந்திக்க வரும்படி ராமபிரானை அழைத்துச் சென்றார். இப்படி அகத்தியர் முன்பாக நாராயணரை நிறுத்தி, குருவின் உத்தரவையும் தனது சபதத்தையும் ஒரு சேர நிறைவேற்றினார் சுதீட்சணர்.

You may also like

Leave a Comment

Translate »