Home ஆன்மீக செய்திகள் சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள கடற்கரையில் அமைந்திருக்கும் கடற்கரை பகுதி சேதுகரை. இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த இடம் பிரபலம். இங்கு கடலில் நீராடுவது, பாபங்கள் அனைத்தும் அகற்றும் என்பதால் யாத்திரிகள் அனைவரும் இங்கு கடல் நீராடுவார்கள். அமாவாசை அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  தற்போது இந்த இடத்தில் அனுமாருக்கான ஒரு திருக்கோயிலை தவிர மற்றபடி தனிமைப்பட்டுள்ளது,

முதலில் கூறியபடி சேது கரையில் ஶ்ரீஅனுமாருக்கு ஒரு திருக்கோயில் உள்ளது. கடலை நோக்கி உள்ளது இக்கோயில். கடலரிப்பிலிருந்து தப்ப கடலை ஒட்டி சற்றே வலுவான மதில் சுவர் உள்ளது. கோயிலை ஒட்டிய கடல் பகுதியில் பல சிற்பங்கள் ஒதுங்கியுள்ளது. பல சிற்பங்கள் பின்னப்பட்டவைகளாகவே இருக்கின்றன. பழைய காலத்தில் இங்கு கோயில்களோ அல்லது பூஜைக்குறிய சிற்பங்களோ இருந்திருக்க வேண்டும், காலப்போக்கில் இவை கடலுக்கு இரையாகியிருக்கலாம். தற்பொழுது உள்ள திருக்கோயில் மிக எளிமையான கோயில். பெரிய கூடம் தான் கோயில். அக்கூடத்தின் மேற்கு பக்கமாக நடுவில் கர்ப்பகிரஹம். கர்ப்பகிரஹத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் உள்ளார். திருக்கோயில் புதிதாக இருந்தாலும், ஶ்ரீஆஞ்சநேயர் சிலை மிக பழமை வாய்ந்ததாக உள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்கு “சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர்” என்பது திருநாமம்.

இங்குள்ள ஶ்ரீஆஞ்சநேயரின் சிலை, நாயக்கர்கள் கால கலை அமைதியுடன் காணப்படுகிறது. இவ்வாஞ்சநேயரின் சிற்பம், தஞ்சாவூர் வல்லம், ஶ்ரீரங்கம் ரங்கவிலாஸ், மன்னார்குடி இராஜகோபுரம் ஆகிய இடங்களில் காணப்படும் சிற்பத்தை ஒத்துள்ளது. இவை அனைத்தும் தஞ்சாவூர் நாயக்கர்கள் பங்களிப்பு. சிறிய வித்யாசம் என்றால் இந்த மூன்று க்ஷேத்திரங்களிலும் ஶ்ரீஆஞ்சநேயர் கல்லால் ஆன “திருவாச்சி”யுடன் காணப்படுகிறார் ஆனால் சேது கரையில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கல்திருவாச்சி இல்லை.

இந்த க்ஷேத்திரத்திலுள்ள ஆஞ்சநேயர் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் அமைதி தருபவராகவும் உள்ளார். ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் சுமார் ஏழு அடி உயரமுள்ளார். கடலில் நள சேதுவை பார்த்த வண்ணம் இருக்கிறார். அவருடைய இரு திருப்பாதங்களும் நேர பார்த்த வண்ணம், சேதுவில் நடப்பதற்கு தயாராக இருப்பது போல் உள்ளது. பாதங்களை தண்டைகள் அலங்கரிக்கின்றன. இடுப்பில் சங்கலியில் இணைக்கப்பட்ட கத்தியிருக்கிறது. அவரது தூக்கிய வலது திருக்கரத்தால் ’அபய முத்திரை’ காட்டி பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். அவரது இடது திருக்கரம் ’சௌகந்திகா’ மலரின் காம்பினை மார்போடு பிடித்துள்ளது.

பகவானின் முககமலம் மலர்ச்சியாகவும், அழுத்தமாகவும், நேர் கொண்ட பார்வையாகவும் உள்ளது. காதில் அணிந்திருக்கும் குண்டலம் தோள்களை தொட்டவண்ணமுள்ளது. அவரது கேசம் அழகாக கட்டப்பட்டுள்ளது [பின்புறம் என்பதால் பார்க்க முடியாது]. அவரது வால் கால் அருகாமையில் சுருண்டு உள்ளது [பின்புறம் என்பதால் பார்க்க முடியாது]. பகவானின் மலர்ந்த கண்கள், விழிப்புடனும் அதே சமயம் அமைதியுடனும், சாந்தமாகவும் உள்ளது. பல்வேறு பாவங்கள் அந்த அழகிய மலர்ந்த கண்களில் ஒளிப்பது விசேடமே.

சீதாபிராட்டியாரை மீட்க வானர சேனையுடன் இலங்கை செல்ல ஸ்ரீஇராமர் நள சேது கட்டியதை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் தீர்த்தவாரி உத்ஸவம் மிக விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகிறது. திருப்புல்லாணி ஆதி ஜகன்நாதர் மற்றும் பட்டாபிஷேக இராமர் உத்ஸவர்கள் இங்கு ஆதி சேதுவிற்கு வந்து கடலில் தீர்த்தவாரி செய்வார்கள்.

சேது பந்தன ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் திருப்புல்லாணி ஆதி ஜகன்நாதர் மற்றும் பட்டாபிஷேக இராமர் உத்ஸவர்களுக்கு விசேட அபிஷேகங்கள் செய்விக்கப்படும். அதை அடுத்து ஶ்ரீஆஞ்சநேயருக்கும் விசேட அபிஷேகம் நடக்கும்.

You may also like

Leave a Comment

Translate »