Home ஆன்மீக செய்திகள் மணவாழ்க்கை அமைத்து தருவார் மணக்கரை நாதர் கோவில்

மணவாழ்க்கை அமைத்து தருவார் மணக்கரை நாதர் கோவில்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தென்பாண்டி சீமையை ஆண்டு வந்தான், உக்கிரவழுதி பாண்டியன். அவன் காலத்தில் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் கரைகளை கடந்து ஊருக்குள் நுழைந்தது. இதனால் குடிமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களும், படைவீரர்களும் மன்னனிடம் முறையிட்டனர். மன்னனும் தன் சேனைப்படை வீரர்களுடன் தாமிரபரணி கரையில் முகாமிட்டான். படைவீரர்களையும், பொதுமக்களையும் திரட்டி வந்து தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். ஆனால் அவனின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அவன் மனமோ இறைவன் மீது நாட்டம் கொண்டது.

ஒரு நாள் தாமிரபரணி கரை ஓரத்தில் லிங்க ரூபத்தில் இறைவனை கண்டான். அந்த லிங்கத்தின் முன்பு மண்டியிட்டான். “தாமிரபரணியை தடைபோட என்னால் இயலவில்லை. ஆனால் இறைவா உன்னால் முடியும்” என லிங்கநாதரை தீர்க்கமாக பற்றிக்கொண்டான். பல நாள் அங்கேயே தங்கினான். தினமும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.

ஒரு நாள் இறைவன் அசரீரியாக பேசினார். “உக்கிரவழுதி! உன் பக்தியை மெச்சுகிறேன். மக்களுக்காக நீ படும் வேதனை என்னை ஈர்த்து விட்டது. தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியை என்னை நம்பி செய். எம் அருளால் உனது முயற்சி வெற்றியாகும்” என்று அருளினார்.

மன்னன் அகமகிழ்ந்து, இறைவனை வணங்கி, தன் படை வீரர்களைத் திரட்டி, தாமிரபரணி நதி நீர் ஊருக்குள் நுழையாதபடி கரை அமைக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டான். ஊர் முழுக்க தண்டோரா போட்டான். இறைவன் உத்தரவு கிடைத்து விட்டது, இனி என்ன? என ஊர் மக்கள் உற்சாகமாக திரண்டனர்.

இறைவனும் ஒரு குதிரை வீரனாக மக்களோடு மக்களாக தோன்றினார். பலவகையான படை வீரர்களை உருவாக்கினார். மன்னர் படையோடு சிவபெருமான் படையும் தாமிரபரணி கரையில் திரண்டனர். நதிக்கரையில் மணலால் கரை அமைத்தனர். மிக வேகமாக வேலை நடைபெறுகிறது. மன்னனுக்கு சந்தோஷம். ‘நம் மக்களிடம் இவ்வளவு திறமையா?’ என எண்ணி வியந்தான்.

வேலைகள் முடிந்ததும், லிங்கத்தின் முன்னால் வந்த மன்னன் இறைவனுக்கு நன்றி கூறி நின்றான். அப்போது குதிரை வீரனாக இருந்த சிவபெருமான், லிங்கத்துக்குள் சென்று மறைந்தார். அவருடன் வந்த சேனைகளும் மறைந்தனர். “இதுவரை நமக்கு உதவி செய்தது சிவபெருமானும், அவரின் சேனைகளுமா?” என சிவபெருமானின் அருளை எண்ணி மகிழ்ந்தான் மன்னன்.

இறைவன் உறைந்த லிங்க ரூபத்துக்கு, ஆகம விதிப்படி கோவில் அமைத்தான். அவருக்கு சொக்கநாதர் என பெயர் வைத்தான். தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டான். மக்களும் தவறாமல் வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்ற தங்களுக்காக மண் சுமந்த சிவபெருமானை வணங்கி நின்றனர். பிற்காலத்தில் தெற்கு நோக்கி மீனாட்சியை பிரதிஷ்டை செய்து வணங்கினர். சுரதேவர், தட்சணாமூர்த்தி, கன்னி மூல விநாயகர், வள்ளி- தெய்வானை உடனாய முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் அதிகார நந்தி என ஆலயத்தில் அனைத்து தெய்வங்களும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.

மன்னனின் வேண்டுகோளை ஏற்று, சிவனே மணலால் கரை அமைத்ததால் இத்தலம் ‘மணல்கரை’ எனப்பெயர் பெற்றது. பின் ‘மணக்கரை’யாக மருவியது. இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். உக்கிரவழுதி மன்னனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் கொங்குராயர் என்ற மன்னரால் விரிவுபடுத்தப்பட்டது. திருமணத் தடை, நவக்கிரகதோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர். புதிதாக வீடு கட்டுபவர்கள் சிவபெருமானால் அமைக்கப்பட்ட மணல் கரையில் உள்ள ஆற்று மணலை சிறிது எடுத்துக்கொண்டு போய், தங்களின் புதிய கட்டிடத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

மணக்கரைநாதர், மீனாட்சி உடனாய சொக்கநாதராக இருப்பதால் இங்கு வந்து தொடர்ந்து வணங்கி வந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கிறது. மணவாழ்வில் பிரச்சினை இருந்தால் கூட பிரிந்த தம்பதிகள் ஒன்றாய் கூடுகிறார்கள்.

இங்கு நடைபெறும் திருக்கல்யாணத்துக்கும், கொங்கராயகுறிச்சியில் உள்ள சிவன் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாணத்துக்கும் ஆறாம்பண்ணை வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனம் கொண்டு வருவது கொங்குராயர் மன்னர் காலத்திலேயே நடந்து வந்துள்ளது. தற்போது அனைத்து திருவிழாக்களும் நிறுத்தப்பட்டு, ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் கோவிலாக உள்ளது. தற்போது கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது.

மலைபார்வதி அம்மன்

மணக்கரையில் மலைபார்வதி அம்மன் கோவில் மிகவும் விசேஷமானது. இந்த அம்மனுக்கு தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடைவிழா நடத்துவார்கள். மலை பார்வதி அம்மனை வணங்க, சுமார் 3 கிலோ மீட்டர் மலையில் கரடு முரடான பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அரசுவேலை கிடைக்க அம்மனை வேண்டி நிற்கிறார்கள். வேலை கிடைத்தவுடன் நன்றி செலுத்த கண்ணீர் மல்க, மீண்டும் மலையேறி வந்து மக்கள் நிற்பதை காணலாம்.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள மணக்கரைக்கு, திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்தும், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் உள்ள கருங்குளத்தில் இருந்தும் ஆட்டோ மற்றும் பஸ் வசதி உண்டு.

You may also like

Leave a Comment

Translate »