Home ஆன்மீக செய்திகள் சத்யநாராயண விரதத்தின் கதை தெரியுமா?

சத்யநாராயண விரதத்தின் கதை தெரியுமா?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உல்காமுகன் என்று ஒரு மன்னன் இருந்தான். ஒருநாள் அவனுடைய அரண்மனைக்கு ஒரு வணிகன் வந்தான். அங்கே மன்னனும் அவனுடைய மனைவியும் ஏதோ பூஜை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். பூஜை முடியும்வரை காத்திருந்த அவன், பிறகு மன்னரிடம் அவர்கள் மேற்கொண்ட பூஜையின் முக்கியத்துவம் என்ன என்று கேட்டான்.

நாட்டில் சத்யமும் நீதியும் நிலைத்திருப்பதற்காகத்தான் இந்த விரத பூஜையைத் தானும் தன் மனைவியும் மேற்கொண்டிருப்பதாக மன்னன் பதிலளித்தான். அந்த வணிகனுக்கும் தனக்குக் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்தது. அதை மன்னரிடம் சொன்னான். அவன் தனக்குக் குழந்தை பாக்கியம் அருளவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும், அவ்வாறு அந்தப் பேற்றினைப் பெறக்கூடிய அவன், சத்யநாராயண விரதம் இருந்து கடவுளுக்கு நன்றி தெரிவிக்குமாறும் மன்னன் சொன்னார்.

அதை அப்படியே ஏற்றுக்கொண்ட வணிகன் தன் ஊர் திரும்பினான். தனக்குக் குழந்தை பிறக்க வேண்டிக்கொண்டான்.  கடவுளும் அவனுடைய ஏக்கத்தைப் போக்குவதற்காக உரிய காலத்தில் அவன் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகும் பேற்றினை அருளினார். ஆனால், குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அவன் விழா, கொண்டாட்டம் என்று நாளைக் கடத்தினானே தவிர, மன்னர் அறிவுறுத்தியதுபோல சத்யநாராயண பூஜை செய்து கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டான்.

மன்னரின் அறிவுரையைக் கணவன் சொல்லிக் கேட்டிருந்த மனைவி அவனுக்கு அந்த விரதத்தைப் பற்றி நினைவுபடுத்தத்தான் செய்தாள். ஆனால், அவன்தான் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தான். ஆனாலும் அவள் தொடர்ந்து அவனை நச்சரித்துக்கொண்டே இருந்தாள். நன்றி தெரிவிக்காவிட்டால் கடவுளுக்கு நஷ்டமா என்ன என்றெல்லாம் அவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டிருந்தான்.

ஆனால், மனைவியின் தொடர்ந்த வற்புறுத்தலை மேலும் வளர்க்காமல் இருக்கவும், மனைவியை சமாதானப்படுத்தவும் ‘நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் ஆகட்டும், அப்புறமா சத்யநாராயண பூஜையை வெச்சுக்கலாம்’ என்று அவளிடம் தெரிவித்தான். அவன் சொன்னதுபோல அவர்களுடைய பெண்ணுக்குத் திருமணமும் ஆயிற்று. ஆனால் அதற்குப் பிறகும் அவன் அந்த விரதத்தை மேற்கொள்ளாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான்.

அவன் மனைவியும் அவனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டாள். ஒருசமயம் தன் மருமகனையும் அழைத்துக்கொண்டு வியாபார விஷயமாகப் பிரயாணம் புறப்பட்டுப் போனான் வணிகன். ஆனால், போன ஊரில் அவர்கள் இருவர் மீதும், சந்தேகத்தின் அடிப்படையில் அந்த ஊர் மக்கள் திருட்டுக் குற்றம் சாட்டினார்கள். அரசாங்கக் காவலர்களும் அவர்களைக் கைது செய்து மன்னர் முன்னால் நிறுத்தினார்கள்.

வணிகன் தன் மருமகனுடன் இங்கே இப்படி குற்றவாளியாகப் பழி சுமத்தப்பட்டு சிறைப்பட்ட சமயத்தில், அவனுடைய சொந்த ஊரில் அவன் வீட்டில் இருந்த பொருட்களெல்லாம் திருடு போய்விட்டன. அடுத்த வேளை சாப்பாட்டுக்குகூட வசதி இல்லாமல் அவனுடைய மனைவியும் மகளும் தவிக்க ஆரம்பித்தார்கள்.

பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம்… அப்போது அந்த மனைவிக்கு அத்தனை நாள்வரை மனசுக்குள்ளேயே தேங்கியிருந்த, அதுவரை கணவன் தன்னுடன் சேர்ந்து அனுஷ்டிக்காமல்விட்ட சத்யநாராயண பூஜை நினைவுக்கு வந்தது. வீடு வீடாகப் போய் பிச்சை எடுத்த தாயும் மகளும், ஒரு வீட்டில் சத்யநாராயண பூஜை நடத்தப்படுவதைப் பார்த்தார்கள். அதைப் பார்த்தாவது மனநிறைவடையலாம் என்று முடியும்வரை காத்திருந்தார்கள்.

பூஜை முடிந்ததும் அவர்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்சம் பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்டதும், தானும் அந்த பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்று மனைவி தீர்மானித்தாள். கணவன் பக்கத்தில் இல்லாவிட்டாலும் தான் தனியாகவாவது அந்த பூஜையை நிறைவேற்ற முடிவுசெய்தாள். அந்த வீட்டில் தான் பார்த்ததை மனதில் வைத்துகொண்டு மிகவும் எளிமையாக சத்யநாராயண பூஜையைச் செய்து விரதத்தையும் முடித்தாள்.

அதேசமயம், வெளியூரில் கைதான அவளுடைய கணவனும் மருமகனும் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் தான் அப்படி அவர்களைத் தவறாகக் கருதியதாலும், நடத்தியதாலும் மான நஷ்ட ஈடாக, நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான் அந்த ஊர் மன்னன். அந்த வெகுமதிகளை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த வணிகன் நடந்ததையெல்லாம் தன் மனைவி, மகளிடம் சொன்னான்.

இவர்களும் தாங்கள் செய்த எளிமையான சத்யநாராயண விரதம், பூஜையைப் பற்றிச் சொன்னார்கள். அதைக்கேட்ட பிறகுதான் அந்த பூஜா விரதத்தை மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதற்குத் தனக்கு தண்டனை கிடைத்ததையும், மனைவி தன் சார்பாக அந்த விரதத்தை மேற்கொண்டதால் அந்த தண்டனையிலிருந்து விடுதலையோடு கூடவே வெகுமதியும் கிடைத்ததையும் அவன் புரிந்துகொண்டான். அந்தக் குடும்பத்தில் அப்புறம் வருத்தமோ வேதனையோ தலைகாட்டவே இல்லை.

You may also like

Leave a Comment

Translate »