Home ஆன்மீக செய்திகள் மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம்

மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.

தேவலோகத்துப் பெண்ணான சித்தவித்யாதர மகள் என்பவள் கலைமகள் கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்மலோகம் வழியாக வரும்போது, துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கிய அவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள்.

மாலையைப் பெற்றுக் கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார். எதிரே தேவேந்திரன் யானைமீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது.

இதனைக் கண்ட முனிவர் தன்னை அவமானப்படுத்திய தேவேந்திரனைப் பார்த்து, “உன் செல்வமெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் அழிந்து போகட்டும்” என்று சாபமிட்டார். சாபம் உடனே பலித்தது. தேவேந்திரன் தன் செல்வம் அனைத்தையும் இழந்தான். யானை மதம் பிடித்து ஓடியது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போர்புரியலானார்கள்.

போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். இதனைக் கண்ட தேவேந்திரன் பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன் மகா விஷ்ணு விடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார்.

தேவேந்திரனின் இக்கட்டான நிலையை அறிந்த மகாவிஷ்ணு, “மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பெரிய நாகத்தைக் கயிறாக உபயோகித்து பாற்கடலைக் கடைந் தால் இழந்த செல்வத்தைப் பெறலாம்” என்று சொன் னார். இவ்வளவு பெரிய செயலை தேவர்களைக் கொண்டு மட்டுமே செய்ய முடியாது என்றெண்ணிய தேவேந்திரன், அசுரர்களிடம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தான்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்பொழுது மத்தாகப் பயன்படுத்தப்பட்ட மந்தரமலை ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் அசைந்து தொல்லை கொடுத்தது. இதனால் தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று கலங்கிய தேவேந்திரன் மீண்டும் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தான்.

தேவேந்திரனுக்கு உதவுவதற்காக மகாவிஷ்ணு பிரம்மாண்டமான ஆமையாக உருவெடுத்து, மந்தரமலையின் அடியில் சென்று அதைத் தாங்கினார். தேவர்களும் அசுரர்களும் மீண்டும் தங்கள் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது கடையும் கயிறாக இருந்த வாசுகி என்னும் நாகம் பெரிதும் துன்பப்பட்டு விஷத்தைக் கக்கியது. அந்த விஷத்தின் வேகம் உலகத்தை அழித்துவிடும் என்பதால், நந்தியெம்பெருமானை அழைத்து அந்த ஆலகால விஷத்தைத் திரட்டி எடுத்து வரச் செய்து விழுங்கினார் சிவபெருமான்.

இதனைக் கண்ட பார்வதி சிவபெருமானின் கண்டத்தில் கை வைக்க, அந்த விஷம் கழுத்திலேயே தங்கிவிட்டது. அதனால் ஈசன் நீலகண்டன் ஆனார். விஷத்தின் தன்மை ஈசனை சிறிது நேரம் மயக்க நிலைக்குத் தள்ளியது. ஈசன் ஆலகால விஷத்தை விழுங்கிய திதி திரயோதசி திதி, மாலை நேரம் ஆகும். அதுவே பிரதோஷ காலமாயிற்று. மயங்கிய நிலையில் ஈசன் இருந்ததால் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் ஈசனை வழிபட ஆரம்பித்தார்கள். அது போற்றுதற்குரிய பிரதோஷ வழிபாடாக அமைந்தது.

மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தால்தான் இத்தகைய உயரிய வழிபாட்டு முறை மக்களுக்குக் கிட்டியது என்று புராணம் கூறுகிறது.

இரண்டாவது முறையாகப் பாற் கடலைக் கடைந்தபோது முதலில் காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. இந்தப் பசு வேண்டியதைத் தரும் வல்லமை படைத்தது. இது பார்வதியிடம் சேர்ந் தது. அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற குதிரை தோன்றியது. இந்தக் குதிரை பறக்கும் ஆற்றல் படைத்தது.

அதற்கு அடுத்து ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை நிற யானை தோன்றியது. இது இந்திரனது வாகனம் ஆனது. இதனை அடுத்து ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிவந்தன. ‘பஞ்ச தருக்கள்’ என்று சொல்லப்படும் அவை அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகும். இவற்றில் கற்பக மரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்தான்.

கேட்பதைக் கொடுக்கும் சக்தி கொண்டது கற்பகம். அடுத்து கவுஸ்துபம் என்ற மணிமாலை தோன்றியது. இதனை அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடியது. இதனை திருமால் அணிந்தார். அதற்குப்பின் ஜேஷ்டாதேவி தோன்றினாள்.

இவளுக்கு அடுத்து மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினார்கள். இவர்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து தோன்றியது மது! இந்த மது தோன்றும் போது அதன் அதிதேவதையான சுராதேவியுடன் மதியை மயக்கும் அழகு மங்கையர் கணக்கற்ற தோழியர்களுடன் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குப்பின் தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. மலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள் தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் தேவியானாள்.

அடுத்து விஷக் கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். மேலும் அவன் கைகளில் நீலோத்பல மலர், மோக சாஸ்திரச் சுவடிகள் இருந்தன. அடுத்துத் தோன்றியது ஸ்யமந்தகமணி. இதனைச் சிந்தாமணி என்றும் சொல்வர். அதை சூரியன் ஏற்றான். கடைசியில் அவதரித்தவர் தன் வந்திரி. நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார்.

தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்தகலசத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலத்த போட்டி இருந்தது. இதனை அறிந்த திருமால் மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தைப் பங்கிட்டுத் தரும் வேளையில்தான் சில நிகழ்வுகள் நடந்தன. அசுரன் ஒருவன் குறுக்கு வழியில் சூரிய – சந்திரர்களுக்கு இடையில் அமிர்தம் பெற முயற்சிக்கையில், மோகினியானவள் அமிர்தம் வழங்கிய சட்டுவத்தால் அவனை வெட்ட, அவன் இரண்டு துண்டுகளாகி ராகு – கேது ஆனான். அதற்குப் பின் மோகினியின் அழகில் ஈஸ்வரன் மயங்கியதால் ஸ்ரீஐயப்பன் அவதரித்தார்.

மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்ததன் விளைவால் பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதேசமயம் பல நிகழ்வுகளும் நடைபெற்றன. அனைத்தும் சுபமான நிகழ்வுகள் ஆகும். மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரக் கோலத்தினை வழிபட சனியின் தாக்கம் குறையும் என்பர்.

You may also like

Leave a Comment

Translate »